
தீபாவளியின் சிறப்பே விடியற்காலையில் எழுந்து, தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது தான். வாசலில் அழகான கலர் கோலம் இடுவதும், தீபாவளி கொண்டாட்டத்தில் முக்கிய நிகழ்வு.
* வீட்டிலுள்ள கடவுள் படங்களை பூக்களால் அலங்கரித்து, தீபமேற்றி தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களோடு, வெற்றிலை, மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய், அரப்புத்துாள், தீபாவளி லேகியம், புதுத்துணிகள், தீபாவளி இனிப்பு மற்றும் கார பட்சணங்கள் என, எல்லாவற்றையும் படையல் வைத்து, கும்பிடுங்கள்.
* பின், வீட்டு உறுப்பினர் மற்றும் குழந்தைகளை கிழக்கு திசை பார்த்து அமர வைத்து, அவர்கள் அனைவருக்கும் வீட்டிலுள்ள பெரியவர்கள் தலையில் நல்லெண்ணெய் வைத்து விடுவது தீபாவளி சம்பிரதாயம்.
* எண்ணெய் குளியல் முடித்து வந்த பின், பிள்ளைகளும், குழந்தைகளும் வீட்டு பெரியவர்கள் கைகளால் தீபாவளி புதுத்துணிகளை பெற்று அணியுங்கள்.
* பெரியவர்களை வணங்கி ஆசி பெறுங்கள். பெரியவர்களுக்கு தர வேண்டிய மரியாதையை குழந்தைகள் கற்றுக்கொள்ள இதுவொரு நல்ல சந்தர்ப்பம்.
* இருள் பிரிந்தும் பிரியாத அதிகாலை நேரத்திலேயே வண்ண வண்ணமாக சிதறும் பட்டாசுகளை கொளுத்தி மகிழுங்கள்.
*தீபாவளியின் தாத்பரியமே நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துவது தான். உங்கள் வீட்டில் செய்த இனிப்பு பலகாரங்களை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் வீட்டுக்கும், தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பலர் வருவர். வரும் விருந்தினர்களை இனிப்பு மற்றும் பழங்களை கொடுத்து வரவேற்க தவறாதீர்.
* தலைவாழை இலை போட்டு, குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் தீபாவளி விருந்து உண்ணுங்கள்.
* மாலை வரை விருந்தினர்கள், உறவினர் சந்திப்பு என, தீபாவளி தினம் இனிக்கட்டும்.
* பொழுது சாய்ந்த வேளையில், உங்கள் வீட்டுப் பிள்ளைகளை தீபங்கள் ஏற்றச் சொல்லி, வீட்டை அலங்கரியுங்கள்.

