
தன் வாழ்நாளின் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில், ஒரு வழக்கத்தை கடைப்பிடித்து வந்தார், நடிகர் டணால் தங்கவேலு.
ஒவ்வொரு தீபாவளி அன்றும், புத்தாடைகள் அணியாமல், கைலியும், குல்லாவும் மட்டுமே அணிவார். அதற்கு ஒரு நெகிழ வைக்கும் காரணம் இருந்தது. அதுபற்றி அவரே, ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
'சிறு வயதில் யதார்த்தம் பொன்னுசாமி நாடகக் குழு துவங்கி, பல்வேறு குழுக்களில் நடித்தேன். நாடகங்களில் நடிக்கும் போது, வருவாய் குறைவாக இருந்ததால், சிரமமான சூழ்நிலையில் இருந்தேன்.
'ஒருமுறை தீபாவளியன்று பணம் இல்லாததால் புதுத்துணி எடுக்கவில்லை. அப்போது, அந்தப் பகுதியில் துணிக்கடை வைத்திருந்த, முஸ்லிம் பிரமுகர் ஒருவர், நாடகக் குழுவில் இருந்த அனைவருக்கும் கைலி அன்பளிப்பாக அளித்தார்.
'அன்று, நாங்கள் அனைவரும் கைலி மற்றும் குல்லா அணிந்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். பிற்காலத்தில் என்ன தான் வசதி வாய்ப்புகள் வந்தாலும், அந்த முஸ்லிம் பிரமுகரின் நினைவாக தீபாவளி அன்று, கைலியும், குல்லாவும் மட்டுமே அணிந்து கொள்வேன்...' என்று, தன் நன்றி மறவாப் பண்பை பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார், தங்கவேலு.
***
லா லெக்சிகன் - சட்ட அகராதி என்ற பெயரில், நீதித் துறை டிக்ஷனரி பிரபலமாக உள்ளது. வழக்கறிஞர் தொழில் செய்வோருக்கு நன்கு தெரியும். அதன் ஆசிரியர், வக்கீல் ராமநாத ஐயர்.
அந்தக் காலத்திலேயே கார், பங்களா என, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர். அவருக்கு பணிபுரிய ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஜூனியர் வழக்கறிஞர்கள் இருந்தனர். அவரது வாதத்தை கேட்கவே நீதிமன்றத்தில் ஏராளமான கூட்டம் கூடும்.
இப்படி செல்வாக்காக வாழ்ந்த அவர், திடீரென்று ஒருநாள் சன்னியாசம் வாங்கி, காசிக்கு போய் உண்மையான துறவியாகவே வாழ்ந்து அங்கேயே மறைந்தார்.
காசியில் கடும் குளிருக்கு சாக்குத் துணியை தான் பயன்படுத்தினார். அவரை காசியில் பார்த்த பலர், கண்ணீருடன் அவர் பற்றிய தகவல்களை கூறியுள்ளனர்.
காவி உடை மட்டும் துறவறம் அல்ல. எல்லாம் இருந்தும், எதுவும் வேண்டாம் என்று இருப்பது தான், உண்மையான துறவறம் என்பதை, உலகுக்கு உணர்த்தியவர், அவர். அவர் வேறு யாரும் அல்ல. 'துக்ளக்' இதழின் ஆசிரியராக இருந்த, சோ வின் தந்தையின் தந்தை; அதாவது தாத்தா.
***
ஒருமுறை, கோழி ஒன்றை, நாடாளுமன்றத்துக்குள் எடுத்து வந்து, அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்துப் போட்டார், ரஷ்ய அதிபர் ஸ்டாலின். வலியால் கத்தி துடிதுடித்தது, கோழி.
முற்றிலும் பிடுங்கிய பின், அதை துாக்கி கீழே எறிந்து விட்டார். பின், அதன் முன் சிறிது தானியத்தை துாவினார். அந்த கோழி, மெதுவாக தின்று கொண்டு வந்தது. மேலும், சிறிது தானியத்தை தன் காலடி வரை துாவினார். அதை பொறுக்கியபடி, அந்த கோழி அவர் காலடியில் நின்றது.
பின்னர், 'இதுதான் அரசியல். மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து விட்டு, கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது துாவினால், நம் காலடியில் வந்து கிடப்பர்...' என்றார், ஸ்டாலின்.
மக்கள் இதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனில், மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும். இது தான் இன்றைய யதார்த்த அரசியல்.
நடுத்தெரு நாராயணன்