/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: அன்பிற்கு வித்திடும் ஆறாவது திதி!
/
விசேஷம் இது வித்தியாசம்: அன்பிற்கு வித்திடும் ஆறாவது திதி!
விசேஷம் இது வித்தியாசம்: அன்பிற்கு வித்திடும் ஆறாவது திதி!
விசேஷம் இது வித்தியாசம்: அன்பிற்கு வித்திடும் ஆறாவது திதி!
PUBLISHED ON : நவ 03, 2024

அன்பு - மனித வர்க்கத்தை ஒற்றுமையுடன் வாழ வைக்கும் மந்திரச் சொல். அன்பை உலகிற்கு போதிப்பதே ஆன்மிகத்தின் நோக்கம். புராணங்கள் அனைத்தும் அன்பையே அடிப்படையாக கொண்டவை.
கந்தசஷ்டி நாயகன் முருகனும், அவரைப் பெற்ற தாயின் வடிவமான துர்க்கையும் கண்டிப்பானவர்கள்; அதே நேரம் அன்பானவர்கள்.
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு சஷ்டி திதி முக்கியமாக இருப்பது போல, மேற்கு வங்காளத்தில் துர்க்கைக்கு, இந்த ஆறாவது திதி முக்கியமானதாக உள்ளது. அமாவாசை அல்லது பவுர்ணமியில் இருந்து, ஆறாவது நாள் சஷ்டி.
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்தவர், முருகப் பெருமான். கண்ணனுடன் பிறந்தவள், துர்க்கை என்ற மாயாதேவி. தேவர்களுக்கு தொல்லை செய்த பத்மாசுரனை ஒடுக்க அவதரித்தார், முருகன்.
கம்சன் மற்றும் மகிஷன் உள்ளிட்ட அரக்கர்களை அழிக்க பிறந்தாள், துர்க்கை. ஆனால், இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருமே கெட்டவர்கள் மீது கூட, தங்கள் அன்பைப் பொழிந்து மோட்சம் தந்து அருளியவர்கள்.
நம் தெய்வங்களுக்கு பல தலைகள் இருக்கும், பல கைகள் இருக்கும்; ஆனால், திருவடி என்னும் பாதங்கள் மட்டும் இரண்டு தான் இருக்கும்.
இதனால் தான் நாயன்மார்களும், ஆழ்வார்களும், 'பெருமானே! உந்தன் திருவடி சரணம்...' என, பாடுகின்றனர். திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லை. பிறவி இல்லாவிட்டால், இனி இந்த உலகத்தில் பிறந்து, கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
போருக்கு வந்த சூரபத்மன் எதிரில், முருகன் நின்ற போது, அந்தக் கருணை தெய்வத்தின் திருவடிகள் தான், அந்த அசுரனின் கண்களில் முதலில் பட்டது. அப்போது, அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது.
'இந்த திருவடிகளை அல்லவா, நாம் சரணடைய வேண்டும்; நாம் ஏன் போரிட வேண்டும்...' என, எண்ணினான். அதன்பின், அந்த ஞானத்தை முருகனே மறைத்ததும், மீண்டும் அசுர இயல்புக்கு மாறிய பின் தான், போர் தொடர்ந்தது.
முருகனது திருவடிகளைத் தரிசித்த பலனால், சூரபத்மன் கொல்லப்படவில்லை. மயிலாகவும், சேவலாகவும் உரு மாற்றபட்டு, முருகனின் வாகனமாகவும், கொடியின் சின்னமாகவும் ஆனான். அதாவது அவனுக்கு பிறப்பற்ற நிலையான மோட்சம் கிடைத்து விட்டது.
கம்சனும், பெண் சிசு என்றும் பாராமல், துர்க்கையின் காலைப் பிடித்து சுழற்றி, வானில் வீசினான்.
அப்போது, துர்க்கை, வானில் தன் சுய வடிவெடுத்து, 'கம்சா! உன்னை என்னால் ஒரு நொடியில் அழிக்க முடியும். ஆனால், என் திருவடியைப் பற்றி, வீசி எறிந்தாய். நோக்கம் எதுவாக இருந்தாலும், என் திருவடிகளைப் பற்றியவர்களை நான் காப்பாற்றுவேன். அதனால் நீ தப்பித்தாய்...' என சொல்லி மறைந்து விட்டாள்.
குழந்தை பிறப்புக்கும், சஷ்டி விரதம் தான். மோட்சம் பெறவும் இதே விரதம் தான். பிறப்புக்கும், பிறப்பில்லா நிலைக்குமான வழி காட்டும், இந்த அரிய திதியன்று, முருகன் மற்றும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
- தி. செல்லப்பா