/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தீபாவளிக்கு முக்கியத்துவம் பெறும் கோவில்கள்!
/
தீபாவளிக்கு முக்கியத்துவம் பெறும் கோவில்கள்!
PUBLISHED ON : அக் 27, 2024

தீபாவளி திருநாளில் புனிதமான சுங்கையை நினைவு கூர்கிறோம்.
அந்த கங்கா தேவிக்கு திருவண்ணாமலை வேலூர் சாலையில், 30 கி.மீ., தொலைவில் உள்ள, சந்தவாசல் எனும் இடத்தில் கோவில் உள்ளது.
இங்கு, இடது காலை மடித்து, வலக்கையை தொங்க விட்டபடி, ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலிக்கிறார், கங்கா தேவி. கையில் தண்டம், உடுக்கை மற்றும் அமுதகலசமும் உள்ளது.
தீபாவளி அன்று இந்த அம்மனுக்கு விஷேச பூஜையும், தீர்த்தவாரியும் நடக்கும். அன்றைய தினம், அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தையே பிரசாதமாக தருகின்றனர். இதை செம்பில் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்துக் கொள்ள, செல்வ வளம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
* கும்பகோணம், திருவாரூர் குடவாசலில் இருந்து, 5 கி.மீ., தூரத்தில், கொரடாச்சேரி செல்லும் பாதையில், திருக்களம்பூர் விஸ்வ வனநாதர் கோவிலில், தீபாவளி அன்று அர்த்த ஜாம பூஜை நடைபெறாது. அதற்கு பதிலாக, மறுநாள் காலையில் நடைபெறும்.
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இப்படி பூஜை நடக்கும். இந்த பூஜையில் கலந்து கொண்டால், நாம் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* *திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில், 15 கி.மீ., தொலைவில் உள்ளது. அங்க மங்கலம். இங்குள்ள, 800 ஆண்டுகள் பழமையான நரசிம்ம சாஸ்தா கோவிலில், நரசிம்மர், தன் தங்கையான அன்னபூரணியுடன் மானிட வடிவில் அருள்பாலிக்கிறார். தீபாவளி அன்று இங்கு எழுந்தருளியுள்ள, அன்னபூரணிக்கு லட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.
* விருதுநகர் மாவட்டம், சாத்துாரிலிருந்து ஏழாயிரம் பண்ணை வழியாக, சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ளது, சத்திரம் எனும் ஊர், இங்கே, 1,800 ஆண்டுகளுக்கு மேலான பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
சிவனுக்கு அன்னத்தை வழங்கிய அன்னபூரணி இங்கு தெற்கு பார்த்த சன்னிதியில் உள்ளார். இந்த அமைப்பை காசியில் மட்டுமே காண முடியும். தமிழகத்தில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இப்படியொரு சன்னிதி அமைப்பு கிடையாது.
சிவனுடன், அன்னபூரணி இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. இங்குள்ள நந்தி, அன்னபூரணி அம்மனை பார்த்தவாறு அமைக்கப்பட்டிருப்பதும், இன்னொரு சிறப்பு. அன்னபூரணி அம்மனை வழிபட்டால், வாழ்க்கையில் உணவுக்கு பிரச்னை வராது என்பது ஐதிகம்.
* கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் சித்த நாகேஸ்வரர் கோவிலில், மகாலட்சுமிக்கு தனி சன்னிதி உள்ளது. பொதுவாக, குழந்தை வடிவில் இங்கு அருள்பாலிக்கிறார். மகாலட்சுமி. தீபாவளி அன்று மட்டுமே. மகாலட்சுமி பட்டு புடவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
* சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தீபாவளி அன்று காலை, சுவாமி மற்றும் தாயார் மயூரவல்லி இருவருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். அன்று மாலை சுவாமி, கோவர்த்தனகிரி அலங்காரத்தில் உலா வருவார்.
* மயிலாடுதுறை திரு இந்தளூர், பரிமளரங்கநாதர் திருக்கோவில், ஆழ்வார்களால் பாடல் பெற்ற, 108 வைணவ திருக்கோவில்களில், 26வது திருத்தலமாகும். ஐந்து நிலை ராஜகோபுத்துடன், 350 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்ட பெரிய தலமாகும்.
பொதுவாக, எல்லா பெருமாள் கோவில்களிலும் கருங்கல்லால் ஆன பெருமாளை தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்குள்ள பெருமாள், பச்சை மரகத கல்லால் ஆனவர். இங்கு, தீபாவளிக்கு மறுநாள், கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், பெருமாள்.
- ஞான தேவ்ராஜ்