
இந்தியாவில், நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருகிறது. 10ல், 9 பேர், நச்சுக் காற்றைத்தான் சுவாசிப்பதாக, புள்ளி விபரம் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காற்று மாசடைந்து இருக்கிறது. மனிதர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கக்கூட முடியாத நிலை உருவாகி விட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களில், காற்று மாசின் அளவு நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
இதனால், நுரையீரல் புற்றுநோய், மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் மரணமும் அதிகரித்துள்ளது.
காற்று மாசுக்கான காரணங்கள் பல இருந்தாலும், தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகை முடிந்தவுடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் அறிக்கைகள், இதை உறுதிபடுத்துகின்றன.
பட்டாசுகள் வெடிக்கும் போது, அதனுள் அடைக்கப்பட்ட ரசாயன பொருட்களால், புகை மற்றும் நச்சு வாயுக்கள் வெளியாகின்றன. இதனால், தீபாவளி சமயத்தில் சுற்றுச்சூழல் மாசடைவது மிகவும் அதிகரிக்கிறது.
இதை குறைக்கும் வகையில் பசுமைப் பட்டாசுகள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இவை முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பை ஏற்படுத்தாதவை என்றோ கூற முடியாது.
பசுமைப் பட்டாசுகளும் சாதாரண பட்டாசுகளை போலவே இருக்கும். வெடிக்கும்போது, பசுமைப் பட்டாசுகளும் புகை மற்றும் நச்சை வெளியிடுகின்றன. ஆனால், சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது, 50 சதவீதம் குறைவான அளவில் புகை மற்றும் நச்சு வாயுக்களை பசுமை பட்டாசுகள் வெளியிடுகிறது. அதிக அளவில் வெடிக்கும்போது, பசுமை பட்டாசுகளும் இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும், காற்று மாசுபாட்டை அதிகரிக்கும்.
சரி இதெல்லாம் எதற்கு? மொத்தமாக பட்டாசு விற்பனையை தடை செய்து விடுவது என, வழக்குப் போட்டனர், தன்னார்வலர்கள் சிலர். ஆனால், 'இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்ய முடியாது...' என, தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளியின் போது, குறிப்பிட்ட நேரம் வரை பட்டாசு வெடிக்க அறிவுறுத்திய நீதிமன்றம், அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
மேலும், குறைவாக மாசுபடுத்தும், மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளான, பசுமைப் பட்டாசுகளை மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சிவகாசி போன்ற ஊர்களில் பட்டாசு உற்பத்தி பெருமளவில் நடைபெறுகிறது. பட்டாசு உற்பத்தியை தடை செய்தால், அதை நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே, பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்தி, காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சிகளில் அரசோடு கைகோர்ப்போம்.
அதன் ஒரு பகுதியாக, இந்த தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள். ஆனால், அதையும் குறைவாகவே வெடியுங்கள். இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினரும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படுங்கள்.
எஸ். தீபசந்திரன்
பட்டாசு புகை கவனம்!
* தீபாவளி என்றால் சந்தோஷம் தான். அதுவும் பட்டாசு என்றால் குதுாகலம் தான். ஆனால், நம் ஆரோக்கியம்? பலருக்கு அந்த நேரத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்று பார்ப்போம்: * ஆஸ்துமா, மூச்சிரைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, அவை இன்னும் அதிகமாகும்.
* மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் அரிப்பு, எரிச்சல் போன்றவை வரும். இதை தொடர்ந்து, 'இன்பெக்ஷன்' ஏற்பட்டு, தொண்டை கரகரப்பு வரும். இந்தப் பிரச்னைகளில் இருந்து தற்காத்து கொள்ள, உடல், கோழையை அதிகமாக உற்பத்தி செய்யும். அதனால், சளிப் பிடித்து, அது வெளியேற ஆரம்பிக்கும்.
* பட்டாசு வெடிக்கும்போது, வெளிவருகிற நைட்ரஜன் ஆக்சைடு, நுரையீரல்களின் உள்ளே இருக்கிற 'லைனிங்'குகளைச் சிதைத்துவிடும். அதனால், ஆக்சிஜனை உள்ளிழுப்பதில் கஷ்டம் ஏற்படும்.
* பட்டாசு வெடிக்கும்போது எழும் சத்தம், ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு, பிரச்னையை மேலும் அதிகரிக்கும்.
* இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஆட்டோ பாம் போன்ற வெடிகளின் சத்தத்தால், 'ஹார்ட் அட்டாக்' கூட வரலாம்; கவனம். இவர்கள், தங்கள் காதுகளை பஞ்சால் அடைத்துக் கொள்வது நல்லது.
* நாய், பூனை மற்றும் பறவைகளின் காது கேட்கும் தன்மை, நம்மைவிட அதிகம். சின்ன சத்தத்தைக்கூட அவற்றால் கேட்க முடியும். நாம் வெடிக்கிற படுபயங்கர வெடிச் சத்தமெல்லாம், அவற்றை செவிடு ஆக்கிவிடும். நம் தீபாவளிக் கொண்டாட்டம், பிராணிகளுக்கு திண்டாட்டமாய் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
* பட்டாசு வெடிக்கும் இடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. பட்டாசிலிருந்து வெளிவருகிற நிக்கல் கலந்த புகையை சுவாசிப்பதால், வயிற்றில் உள்ள சிசுவின் மூளையில் பிரச்னைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
* பட்டாசில் இருந்து வெளி வருகிற, ஸிங்க் புகை - வாந்தியை வரவழைக்கும். மாங்கனீஸ் - துாக்கமின்மை, படபடப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். பாஸ்பரஸ் - கண்களையும், கல்லீரலையும் கெடுக்கும். நைட்ரேட் -குறைந்தபட்சம் வாந்தி, அதிகபட்சம் வலிப்பைக் கொண்டு வரும்.