sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைப்பவர்களை இப்படியும் உயர்த்தலாமே!

சமீபத்தில், உறவினர் வீட்டிற்கு சென்று, வீடு திரும்பும் வழியில் என், இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக, வழியில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்றேன். அப்போது, அங்கு கண்ட காட்சி என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, அந்த பெட்ரோல் பங்கில், பொருட்கள் வைக்கும், 'ஸ்டாண்ட்'களில் அழகிய கைவினைப் பொருட்களான ஒயர் கூடைகள், பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், தட்டுக்கள், மண்ணால் செய்யப்பட்ட பூந்தொட்டிகள், வாட்டர் பாட்டில்கள், மூங்கிலை வைத்து தயாரிக்கப்பட்ட வேலைப்பாடு நிறைந்த பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

கண்களுக்கு அழகாகவும், விலை மலிவாகவும் இருந்ததால், பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் அந்த பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர். நானும், ஆரம்பத்தில், 'பங்க்' உரிமையாளர் தான், 'ஸ்டால்' வைத்து நடத்துகிறார் என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் கை வண்ணத்தில் உருவான பொருட்கள் அவை என்று!

அந்த தொழிலாளர்களின் திறமையை கண்டுபிடித்து, அவர்களுக்காக அந்த பங்கில் இடம் ஒதுக்கி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க ஏற்பாடு செய்து தந்துள்ளார் அந்த, முதலாளி. இதனால், பணியாளர்களுக்கு, ஊதியத்துடன் அந்த பொருட்கள் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கிறது. முதலாளி மேல் மரியாதையும், அன்பும் ஏற்பட்டதுடன், விடுமுறை எடுக்காமல், தொடர்ந்து ஆர்வமாக பணிக்கு வந்து, முதலாளியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர், அந்த தொழிலாளர்கள்.

உழைப்பவரை இப்படியும் உயர்த்தும் அந்த முதலாளியின் செயல் பாராட்டத்தக்கது.

- டி.அருள் பிரகாஷ், திருப்பூர்.



மிகச் சிறந்த சொத்து!


அரசு அலுவலகத்தில் பணியாற்றும், என் நண்பரின் வீட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அவருடன் பேசி கொண்டு இருக்கும் போது, பத்தாம் வகுப்பு பயிலும் அவரது மகன், பள்ளிக்குச் செல்ல மறுப்பதாகக் கூறி கவலைப்பட்டார்.

நான், அவர் மகனை, தனியாக அழைத்து பேசிய போது, அவன் கண்ணீருடன், 'எல்லாம் என் அப்பாவால தான் அங்கிள். இவர் லஞ்சம் வாங்குவது, என்கூட படிக்கும் பசங்களுக்கும் தெரியும். என் வகுப்பில் உள்ளவர்கள் என்னை கேலி செய்றாங்க. அவமானமா இருக்கு. அதான் ஸ்கூலுக்கே போகப் பிடிக்கலை...' என்றான்.

இதை நண்பரிடம் சொல்ல, அதிர்ந்து போனார். அவனை அணைத்து, குரல் தழுதழுத்தபடி, 'நான் தப்பு செஞ்சிட்டேன், கண்ணா. கூட வேலை செய்யற மத்தவங்க எல்லாரும் லஞ்சம் வாங்கறாங்களேன்னு, நானும் கை நீட்டிட்டேன். இனி, அப்படி செய்ய மாட்டேன். உனக்கு நல்ல முன்மாதிரியா, நேர்மையான அப்பாவா இருப்பேன். சாரிடா...' என்றார்.

லஞ்சம் வாங்குவது அவமானம் என்பதோடு, அவ்வாறு லஞ்சம் வாங்குவோருடைய குழந்தைகளின் மனதில், அவர்களின் நன்மதிப்பையும் இழக்கச் செய்கிறது.

பணத்தை இழந்தால், மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், அவரவர் குழந்தையின் மனதிலிருந்து மரியாதையை இழந்து விட்டால், அதை மீட்கவே முடியாது.

நண்பர்களே... உங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து நடக்க, நேர்மையோடு வாழுங்கள். அதுவே, உங்கள் பிள்ளைகளுக்கும், குடும்பத்தாருக்கும் வழங்கும் மிகச்சிறந்த சொத்து!

- ஆர்.செந்தில்குமார், மதுரை.

மதிப்பிற்குரிய செயல்!

சமீபத்தில், என் மனைவியின் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தோம். அது, ஒரு சிறிய கிராமம்.

பேருந்திலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்றபோது, வழியில் வயதான பெரியவர் ஒருவர், பள்ளியில் படிக்கும், நான்கு சிறுவர்களை அங்கே நிறுத்தி வைத்து, நடைபாதை ஓரம் இருந்த சிறு செடிகளை காட்டி, ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காக, அந்த பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன்.

நான் யார், என்ன விபரம் என கேட்டபின், 'நான் ஒரு விவசாயி. இப்போது வயதாகி விட்டதால், விவசாயம் பார்ப்பதில்லை. மகன்கள், சென்னையில் இருக்கின்றனர். நிலத்தை குத்தகை விட்டு விட்டேன். இருந்தாலும், தினமும் நிலத்தை வந்து பார்த்து, இப்போது விவசாயம் பார்ப்பவர்களுக்கு எனக்கு தெரிந்த விவசாய நுணுக்கங்களைச் சொல்லி தருகிறேன்.

'குழந்தைகள் எதிர்பட்டால், அவர்களுக்கு நம் மண்ணில் விளையும் அரிய மருத்துவ குணமுள்ள செடி, கொடிகளைக் காட்டி, அதன் மகத்துவங்களை எடுத்துச் சொல்வேன். அந்த செடிகளை எப்படி அடையாளம் காண்பது எனவும், சொல்லிக் கொடுப்பேன்.

'நம் மண், நமக்கு கொடுத்த இயற்கை மகத்துவங்களை, நமக்கு அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லாமல் இருப்பது, அவர்களுக்கு செய்யும் துரோகம். அதனால், இப்படி அவ்வப்போது யாருக்காவது எனக்கு தெரிந்த மண் சார்ந்த விஷயங்களை, அவர்கள் விருப்பத்தோடு பகிர்ந்து கொள்வேன்...' என்றார்.

யாருக்கு எதை சொல்லி என்ன ஆகப் போகிறது என்ற சலிப்பு உணர்வு சிறிதும் இல்லாமல், தனக்கு தெரிந்த இயற்கை சார்ந்த தகவல்களை, அடுத்தவர்களுக்கு ஆர்வத்தோடு சொல்லிக் கொடுக்கும் அந்த பெரியவரின் செயலை பாராட்டினேன்.

எம்.மகாலிங்கம், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us