PUBLISHED ON : ஆக 11, 2024

இந்திய மக்களின், சுதந்திர தாகத்தை தணிக்கும் வகையில், 'ஆகஸ்ட் 15ல், இந்தியாவிற்கு சுதந்திரம் - மவுன்ட் பேட்டன் அறிவிப்பு!' என்ற, தலைப்புச் செய்தியை சுமந்து வெளிவந்தன, இந்திய நாளிதழ்கள்.
இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டு பிரச்னைகள் நிலவிய இந்தியாவை, திறமையான ஒரு நபரால் மட்டுமே பிரிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து, இங்கிலாந்து அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர் தான், மவுன்ட் பேட்டன்.
களம் கண்ட போரில் வெற்றி, பொறுப்பேற்ற ஆப்ரேஷன்கள் அனைத்திலும் ஜெயம் என, புகழின் உச்சத்திற்கு சென்ற இவருக்கு, மணிமகுடமாய் அமைந்தது, இந்த பொறுப்பு.
இங்கிலாந்தில் இருந்து புறப்படும் முன், தன்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட வேண்டும் என்ற உறுதிமொழியை, இங்கிலாந்து அரசிடம் பெற்ற பின்னரே, இந்தியா வந்தார். இந்திய மக்களிடையே, பிரிவினைவாதம் தலைத்துாக்கி இருந்ததை அறிந்த, மவுன்ட் பேட்டன், இந்தியாவை பிரிப்பது என்ற முடிவை எடுத்தார்.
பிற்காலத்தில், இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு எல்லைகளையும் பிரிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து, ராக்ளிப் என்பவர் வரவழைக்கப்பட்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளை பிரித்தார். இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு, 'ராக்ளிப் எல்லைக் கோடு' என்று, இவர் பெயரே சூட்டப்பட்டு விட்டது.
சுதந்திரத்திற்கான வேலை வேக வேகமாக, மவுன்ட் பேட்டன் தலைமையில் நடந்தது. மவுன்ட் பேட்டனை சந்தித்து, சுதந்திரம் கொடுக்கப் போவது முடிவாகிவிட்டது, அதை, ஜனவரி 26ம் தேதி கொடுக்குமாறு வலியுறுத்தினார், ஜவஹர்லால் நேரு.
ஜவஹர்லால் நேரு, அந்த தேதியை குறிப்பிட்டதற்கு காரணம், ஜனவரி 26, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
கடந்த, 1929ல் நடந்த, லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், நேருவின் தலைமையில், வெள்ளையர்களை எதிர்த்து, இந்தியாவுக்கு பூரண சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். ஜனவரி, 26, 1930ல், 'வந்தே மாதரம்' என முழக்கமிட்டு, ராவி நதிக்கரையில், நம் மூவர்ணக் கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டனர். அந்த நாளை சுதந்திர நாளாக கொண்டாடுவோம் என்றும் முழக்கமிட்டார், ஜவஹர்லால் நேரு.
எனவே, ஜனவரி 26ம் தேதியை, மவுன்ட் பேட்டனிடம், 1947 சுதந்திர நாளுக்கான கோரிக்கையை வைத்தார், நேரு. ஆனால், மவுன்ட் பேட்டனோ இதற்கு செவி சாய்க்கவில்லை.
கடந்த, 1939 முதல் 1945 வரை, இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டம். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா எல்லாம் ஒரு அணியாகவும்; ஜப்பான், ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகள் மற்றொரு அணியாகவும் சேர்ந்து சண்டையிட்டுக் கொண்டன.
பிரிட்டனின் தெற்காசிய படைப்பிரிவின் படைத்தலைவராக இருந்தவர், மவுன்ட் பேட்டன். இவரின் தலைமையில் படைகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, ஜப்பான் பிடியில் இருந்த சிங்கப்பூர் மற்றும் பர்மா ஆகிய நாடுகளை கைப்பற்றி, தொடர்ந்து முன்னேறியது.
ஒருவழியாக பிரிட்டனிடம், ஜெர்மனி சரண் அடைந்த நிலையில், எதிர் அணியில் ஜப்பான் மட்டும் போரிட்டு கொண்டிருந்தது. பிரிட்டன் அணியில் இருந்த அமெரிக்கா, 1945ல், ஆகஸ்டு 6 மற்றும் 9ம் தேதிகளில், 'லிட்டில் பாய்' மற்றும் 'பேட் மேன்' எனும் சக்தி வாய்ந்த இரு அணு குண்டுகளை, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசி, ஜப்பானை சுருட்டியது.
இதையடுத்து, ஆக., 15, 1945ல், பிரிட்டனின் தெற்காசிய படைப்பிரிவின் படைத் தலைவரான மவுன்ட் பேட்டனிடம் சரணடைந்தது, ஜப்பான். இதன் மூலம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதை தனக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதினார், மவுன்ட் பேட்டன்.
இந்த வெற்றியின் நினைவாக தான், நேருவின் ஜனவரி 26ஐ நிராகரித்து, தன் வெற்றி நாளான ஆகஸ்ட் 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் என, நாள் குறித்தார்.
அதன்பின், நாட்டின் இதயமான, அரசியல் அமைப்பை நிறைவேற்றி, இந்தியாவை முழு குடியரசு நாடாக, ஜன., 26, 1950ல், குடியரசு தினமாக அறிவித்தார், நேரு.
- சி. கண்ணப்பன்