
முனைவர் எஸ்.கே.கார்வேந்தன் எழுதிய, 'தமிழகத்தின் தியாகச்சுடர்கள்' என்ற நுாலிலிருந்து:
பம்பாயில், 'வெள்ளையனே வெளியேறு' இறுதிகட்ட போராட்டத்தை, ஆக., 8, 1942ல், அறிவித்தார், காந்திஜி. அன்று அதிகாலை, காந்திஜியும், தலைவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை செல்லும் முன், ஆங்கிலேயரை நோக்கி, 'செய் அல்லது செத்து மடி' என்று, அறை கூவல் விடுத்தார், காந்திஜி. அதன் விளைவாக நாடு முழுவதும் புரட்சி வெடித்தது.
பம்பாய் மாநாட்டுக்கு சென்றிருந்த, காமராஜரும், வேலுார் வி.எம்.உபையதுல்லாவும் கைதாகாமல் தமிழகம் முழுவதும் சென்று, பம்பாயில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்ட தலைவர்களுக்கு வினியோகித்து, போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.
ஆக., 16, 1942ல், காமராஜரே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவரை கைது செய்து, நீதிமன்றம் மூலம், மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கி, வேலுார் சிறையில் அடைத்தனர்.
நாடு சுதந்திரம் அடையும் சூழ்நிலை 1945ல், உருவானதன் விளைவாக, கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும், ஜூன், 30, 1945ல், விடுதலை செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். இந்திய சுதந்திரப் போரில் காமராஜர், ஆறு முறை கைதாகி, ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
***
ஆக., 15, 1947 அன்று, தமிழக அரசு தலைமை செயலகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு தலைமை நீதிபதி சர்.பிரட்ரிக் வில்லியம் ஜென்டில், சக நீதிபதிகளுடனும், கவர்னர் சர்.ஆர்ச் பால்ட் நைட் அதிகாரிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள், விருந்தினர்கள் புடை சூழ கோட்டைக்கு வந்தனர்.
ராணுவத்தினர் பேண்ட் வாத்தியங்கள் மூலம், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...' பாரதியார் பாடலை இசையாக வாசித்தனர்.
முதல்வர் ஓமந்துாராரை, விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர், உயர் காவல்துறை அதிகாரிகள். மிகுந்த உற்சாகத்துடன் பக்தி பூர்வமாக, மூவர்ண தேசிய கொடியை, ஓமந்துாரார் ஏற்றி வைக்க, 'வந்தே மாதரம்' கோஷம், விண்ணை எட்டியது.
தலைமை நீதிபதி சர்.பிரட்ரிக் வில்லியம் ஜென்டில், வலது கரத்தை உயர்த்தி, 347 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஜார்ஜ் மன்னருக்கு மரியாதை செய்து விட்டு, இந்திய அரசியல் சாசனத்தை உணர்ச்சிகரமாகப் படித்தார்.
முதலில் தலைமை நீதிபதி முன், பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார், கவர்னர். ஆங்கிலேய ஆட்சி பறிபோகிறதே என்ற வேதனையோடு கவர்னர் பதவி ஏற்றார். பின், ஓமந்துாராருக்கும், சக அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
***
காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று, நாடகங்கள் மூலம், மக்களுக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியும் ஊட்டிய தியாகச் செம்மல், எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ். 29 முறை சிறை சென்றுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தடையை மீறி, நாடகங்கள் நடத்தியதால், சிறை மற்றும் வழக்குகள் என அல்லல்பட்டு, சம்பாதித்த பணம் மற்றும் குடியிருந்த வீட்டையும் இழந்தார். வீட்டை மீட்பதற்கு யாரும் முன் வராதபோது, சிலர் நிபந்தனைகளுடன் முன் வந்தனர்.
'தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்தால், அரண்மனையில் பரிசளிப்பு விழா நடத்தி, உதவ தயார்...' என, எட்டயபுரம் மகாராஜா அறிவித்தார்.
'காங்கிரசில் இருந்து விலகி, விடுதலை போராட்டத்தில் ஈடுபட போவதில்லை என, உத்திரவாதம் அளித்தால், உதவ தயார்...' என்றார், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த, நீதிக் கட்சியை சேர்ந்த, வாசுதேவநாயக்.
இவர்களெல்லாம் ஆங்கிலேயர்களின் துாண்டுதலால் உதவ முன் வருகின்றனர் என்பதை அறிந்தார், எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். எனவே, அவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டார்.
'இரண்டாம் உலகப்போரை ஆதரித்து நாடகம் நடத்தி தந்தால், இவரது கடன்கள் அனைத்தையும் அடைத்து, மாதம் உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்க தயார்...' என, துாது அனுப்பினார், அப்போதைய கவர்னர், எர்ஸ்கின் துரை.
ஆனால், 'ஆங்கிலேயர்கள் கொடுக்கும் பணம், என் கால் துாசுக்கு சமம். இவ்வாறெல்லாம் பணம் கொடுத்து, என் சுதந்திர உணர்வை மாற்ற முடியாது...' என்று கூறி மறுத்து விட்டார், விஸ்வநாத தாஸ்.
- நடுத்தெரு நாராயணன்