sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பாடம்!

/

பாடம்!

பாடம்!

பாடம்!


PUBLISHED ON : செப் 29, 2024

Google News

PUBLISHED ON : செப் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'என்ன கவுசல்யா... டென்த் பசங்களுக்கு இன்னைக்கு, அந்த பாடம் எடுக்கப் போறீங்களாமே?' என்று கேட்டாள், ஆங்கில ஆசிரியை சுகந்தி. அவள் குரலில் கொஞ்சம் ஏளனம் இருந்தது.

“ம், ஆமா,' என்று, அவளுடைய ஏளனத்தை புறந்தள்ளி புன்னகைத்தாள், கவுசல்யா.

“எதுக்கு மேடம் இந்த வேண்டாத வேலையெல்லாம்? பசங்க தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்பாணுங்க. பொண்ணுங்களுக்கு தர்மசங்கடமா இருக்கும். ஏன்? நீங்களே தர்மசங்கடப்படுவீங்க.

'அவங்களையே படிச்சுக்க சொல்லி விட்டுடுங்க. எப்படியும், பரீட்சையில இந்த பாடத்தில இருந்து கேள்வி எதுவும் வரப் போறதில்லை,' என்று, கூறினார், பி.டி., மாஸ்டர் எத்திராஜ்.

அவரை பார்த்து எதுவும் பேசாமல், புன்னகைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள், கவுசல்யா.

'புதுசா வந்திருக்கால்ல அதான் பெரிய இவள்ன்னு நெனப்பு. இந்த பசங்களப் பத்தி தெரியலை. ஒரு முறை அசிங்கப்பட்டாதான் தெரியும்,' என்று சொல்லி சிரித்தார், எத்திராஜ். அவருடன் சேர்ந்து சிரித்தாள், சுகந்தி.

முப்பதுகளின் துவக்கத்தில் இருப்பவள், கவுசல்யா; அறிவியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து, எம்.எட்., பட்டமும் பெற்றவள்.

சென்னையில், பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் இருந்தவளுக்கு அரசு பணி கிட்டியது. முதல், 'போஸ்டிங்' திருநெல்வேலி அருகிலுள்ள இந்த கிராமத்து அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் தான். இங்கு, இவள் பணியாற்ற வந்து, மூன்று மாதங்களாகிறது.

இந்த, மூன்று மாதத்திலேயே தலைமை ஆசிரியை, மாணவ - மாணவியர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டாள், கவுசல்யா.

எல்லா இடங்களிலும் பொறாமைப்பட சிலர் இருப்பர். அப்படியானவர்கள் தான், சுகந்தியும், எத்திராஜும்.

கவுசல்யா, 10ம் வகுப்புக்குள் நுழைய, மாணவ, மாணவியர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறினர். பதிலுக்கு வணக்கம் கூறி, அனைவரையும் அமரச் சொன்னாள், கவுசல்யா.

“இன்னைக்கு புது பாடம் எடுக்க போறேன்னு சொன்னீங்களே, டீச்சர்.”

'ஆமா, அதுக்கு முன்னால,' என்று சொல்லி நிறுத்திவிட்டு, 'தில்லிபாபு, உன் கால்ல ஏற்பட்ட காயம் சரியாகிடுச்சா?” என்று, ஒரு மாணவனை பார்த்து கேட்டாள்.

'இல்லைங்க டீச்சர். கொஞ்சம் ஆறிட்டு வந்துச்சு. ஆனா, நேத்திக்கு திரும்பவும் அதே இடத்தில் அடிபட்டுக்கிட்டேன்,” என்று சொல்லி, தன் காலைக் காட்டினான், தில்லிபாபு. அருகில் வந்து பார்த்தாள், கவுசல்யா.

“ஏன்ப்பா, கவனமா இருக்கணும்ல. அப்பத்தானே காயம் ஆறும்? சரி, சரி... காயம் ஆறுற வரைக்கும் கவனமா இருக்கணும், புரியுதா? இல்லைன்னா காயம் பெரிசாகி, 'செப்டிக்' ஆகிடும்,'' என்று, எச்சரித்துவிட்டு, அவனை அமரச் சொன்னாள்.

'சரி, பிள்ளைங்களா இன்னைக்கு உங்களுக்கு முக்கியமான பாடம் எடுக்க போறேன்,' என்று, பீடிகையுடன் ஆரம்பித்து, தாவரம் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றிய பாடத்தை பொறுமையாக விளக்கத் துவங்கினாள். தாவரங்கள் பற்றிச் சொல்லும் வரை அமைதி காத்த மாணவர்கள், விலங்குகளின் இனப்பெருக்க உறுப்புகள் பற்றியும், பெண்களின் மாதவிடாய் பற்றியும் அவள் விளக்கத் துவங்க, மாணவர்களிடையே சலசலப்பு ஆரம்பித்தது.

“அதானே டீச்சர். சடங்காவறதுன்னு சொல்றாங்களே,' என்று, ஒருவன் கேட்டதும், மாணவர்கள் அனைவரும், 'கொல்'லென்று சிரித்தனர்.

கேலியான கேள்விகள், பல்வேறு ஏளனக் குரல்கள் கேட்க, மாணவர்கள் எல்லாரும் பெருங்குரலில் சிரித்தனர்.

கவுசல்யாவின் முகம் ஒரு நொடி கோபமாக மாறி, பின் இயல்புக்குத் திரும்பியது.

'பாய்ஸ்! சடங்காவறதுன்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டாள்.

'அது வந்து டீச்சர், பொண்ணுங்க சடங்காவறதுன்னா, வீட்டு பின்னால பச்ச ஓலை குடிசை கட்டி, அதுல உட்கார வைப்பாங்க. பொண்ணுங்களுக்கு தாவணி போட்டு விடுவாங்க. உறவுக்காரவுங்கள, ஊர்க்காரவங்கள எல்லாம் கூப்ட்டு அந்த பொண்ணு மேல, மஞ்ச தண்ணி ஊத்துவாங்க. எல்லாருக்கும் விருந்து சாப்பாடு போட்டு புட்டு சுத்துவாங்க. அவ்ளோதான் தெரியும் டீச்சர்...' என, தங்களுக்கு தெரிந்ததை கூறினர், மாணவர்கள்.

இதற்கும், 'கொல்'லென்று சிரித்தனர், மாணவர்கள். மாணவியர் தலையைக் குனிந்து, முகங்களை மறைத்துக் கொண்டனர். சிலர், யாருமறியாமல் தங்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.

“ம். பரவால்லை. நான் நெனைச்சதை விட, நிறைய விஷயம் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க. குட்!” என்றாள், கவுசல்யா.

'சரி, இப்ப உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கறேன். சரியான பதில் சொல்லணும்,' என்று சொல்லிவிட்டு, 'இப்ப நம்ம தில்லிபாபு கால்ல காயம் பட்டுகிட்டான்ல. அவன் அதே இடத்தில் திரும்பியும் காயம் பட்டுகிட்டான்னா அவனுக்கு எப்படி இருக்கும்?'

'ஐயோ! அவனுக்கு செமையா வலிக்கும் டீச்சர். அவனால், தாங்கவே முடியாது,” என்றான், ஒரு மாணவன்.

'ம். ஒரு வேளை அதில் இருந்து ரத்தம் வந்திச்சுன்னா,' என்று கேட்டாள், கவுசல்யா. ''ஐயையோ! அவனுக்கு வலியில மயக்கம்

கூட வந்துடும் டீச்சர். அவனால நடக்கவே முடியாது. இப்பவே அவன் நொண்டி நொண்டிதான் நடக்கறான்,' என்றான், மற்றொரு மாணவன்.

''ம், சரி. இதே ரத்தம் உங்களுக்கு படக்கூடாத இடத்தில இருந்து வந்தா. அப்ப எப்படி உணர்வீங்க?' என, கேட்டாள், கவுசல்யா.

'என்னங்க டீச்சர். படாத இடத்துல காயம் பட்டா, அவ்ளோதான்,' என்றான், கலவரமான முகத்துடன் வேறொரு மாணவன்.

'எஸ்! அதே தான். அதுதான் மாதவிடாய்ங்கறது. அது தான் பூப்படைதல். உலகத்துல இருக்கிற ஒவ்வொரு பெண்ணும், தன் 13 அல்லது 15 வயதில இருந்து, 55 வயது வரை மாதா மாதம் இந்த மாதவிடாய்ங்கறத அனுபவிக்கிறாங்க,' என்று, கவுசல்யா கூற, மாணவர்கள் அனைவரின் முகத்திலும் லேசாக அதிர்ச்சி தோன்றியது.

'நீங்களே யோசிங்க. ஒரு முறை காயத்தில் இருந்து ரத்தம் வந்தா எவ்ளோ வலிக்கும்? ஆனா, ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து உதிரப்போக்கு குறைந்தது, மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரைக்கும் இருக்கும். அப்ப அவ எவ்ளோ வலியை அனுபவிப்பா? 'ஒவ்வொரு பெண்ணின் உடம்பும் ஒவ்வொரு மாதிரி. சிலருக்கு, மூன்று நாட்களில் உதிரப்போக்கு நின்னுடலாம். சிலருக்கு, ஐந்து நாட்கள். சிலருக்கு, ஏழு நாட்களுக்கு மேலேயும் நீடிக்கலாம்,' என்றதும், கேலியாகச் சிரித்த மாணவர்களின் முகம் மாறத் துவங்கியது.

'இது உங்க வகுப்புல படிக்கிற மாணவிகளுக்கு மட்டுமில்லை. உங்க வீட்டுல இருக்கற, உங்க அக்கா, தங்கைகள், அம்மா, பெரியம்மா, சித்தி, அத்தை, அண்ணி, நீங்க தினமும் பார்க்கிற அனைத்து பெண்களும் அனுபவிக்கறது தான்,' என்றாள், கவுசல்யா. இப்போது, எல்லா மாணவர்களின் முகமும் அதிர்ச்சியை அப்பட்டமாகக் காட்டியது.

“இப்ப சொல்லுங்க. சடங்காவறதுன்னு சொல்றது உண்மையாவே கிண்டல் பண்ற விஷயமா?' என்று கேட்டாள்.

'இல்லை...' என்பது போல, மாணவர்களின் தலை அனிச்சையாக ஆடியது.

“பாய்ஸ், உங்க எல்லார் கிட்டேயும், நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான். பொண்ணுங்கன்னா வெறும் கிண்டல் கேலிக்கும், வம்பு செய்யறதுக்கும், வீட்டுல வேலை செய்யறதுக்கும் இல்லை.

“அவங்க, மாதா மாதம் அனுபவிக்கற வலியும், வேதனையும் என்னங்கறதை உங்களால கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அத்தனை வலி மற்றும் வேதனையுடன் தான், எல்லா பொண்ணுங்களும் படிக்க வராங்க.

“வீட்டுல, வயல்ல, வெளியில, ஆபீஸ்ல, எல்லா இடத்திலேயும் வேலை செய்யறாங்க. நீங்க அவங்களுக்கு உதவி செய்யலன்னா கூட பரவால்ல. அவங்கள வம்புக்கு இழுத்து அவங்க வேதனையை அதிகப்படுத்தாதீங்க. உங்களால முடிஞ்சா அவங்களுக்கு, செய்ய முடியற உதவிகளை மறுக்காம செய்யுங்க,' என்று, மன்றாடும் குரலில் சொன்னாள்.

மாணவர்களின் தலை இப்போது, 'சரி' என்பது போல அனிச்சையாக ஆடியது.

“இன்னொண்ணும் ஞாபகம் வெச்சிக்கணும். மாணவியர்களே... நீங்களும் கவனிங்க. மாதவிடாய் நேரத்தில் நல்ல சுத்தமான பருத்தியிலான பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்தணும். ஆடம்பரமான பொருள் தான் வேணும்ன்னு அவசியமில்ல. சுத்தமா இருக்கறது தான் முக்கியம். புரியுதா?” என்று கேட்க, மாணவ மாணவியர் அனைவரின் தலைகளும் அனிச்சையாக சரியென்று ஆடியது. அவள் தன் புத்தகத்தை, கையிலெடுக்கவும், அந்தப் பாடவேளை முடிந்ததற்கான மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது.

'ஓ.கே., பசங்களா, மிச்ச பாடத்தை நாளைக்கு பார்க்கலாம்,' என்று கூறி, அவள் அந்த வகுப்பறையை விட்டு வெளியேறினாள்.

மறுநாள் காலை அவள் பள்ளிக்கு வந்தபோது, அந்த கிராமத்து ஆண்களும், பெண்களும் கும்பலாகத் திரண்டு வந்து, அவளுடன் சண்டை போட்டனர்.

“ஏம்மா, படிச்ச பொண்ணுதான நீ ? ஆம்பள புள்ளைங்களுக்கு போயி சடங்காவறதுன்னா என்ன, ஏதுன்னு வெவரம் சொல்லி கொடுத்திருக்கியே... அதெல்லாம் ஆம்பள புள்ளைங்களுக்கு தெரியற விஷயமா என்ன?” என்று, ஒரு கிழவி கேட்டாள். பள்ளிக்கு ஏற்கனவே வந்திருந்த, மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் அங்கே குழுமினர். அங்கே வந்த, சுகந்தியும், எத்திராஜும் ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்துக் கொண்டனர்.

“நான் அவங்களுக்கு நல்லதுக்கு தான் சொல்லி...' என்று, கவுசல்யா பதில் கூற துவங்க, 'என்னா நல்லது... இதென்ன உங்க பட்டணம்ன்னு நெனைச்சயா... இங்கெல்லாம் அப்படியில்லை. எங்களுக்கு கட்டுப்பாடு இருக்கு...' என, ஆளாளுக்கு பேசினர். சிலர், கவுசல்யாவுக்கு ஆதரவாகப் பேச, அவர்களையும் அந்த கும்பல் திட்டித் தீர்த்தது. 'நாங்க தான் அப்பவே, இந்த பாடத்தை எடுக்காதீங்கன்னு சொன்னோம்ல,' என்று, சுகந்தியும், 'இதெல்லாம் உங்களுக்கு தேவையா?' என்று, எத்திராஜும் தங்கள் பங்குக்கு பேசினர்.

அமைதியாக நின்றாள். கவுசல்யா.

அப்போது தான் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியை, அங்கு வந்து, கவுசல்யாவுக்கு வக்காலத்து வாங்குவது போல பேச, மக்கள் இன்னும் ஆவேசமடைந்தனர். அங்கு கூச்சலும், குழப்பமும் நடந்து கொண்டிருந்தது.

அப்போது, நான்கைந்து, 10ம் வகுப்பு மாணவர்கள் ஒரு சைக்கிளில், ஏழாம் வகுப்பு மாணவியை அமர வைத்து, பள்ளிக்கு வெளியே அழைத்து கொண்டு சென்றனர். அவர்களில் இருவர், மேற்சட்டையில்லாமல் வெறும் பனியனுடன் இருந்தனர். தலைமை ஆசிரியையும், கவுசல்யாவும் அவர்களிடம் சென்று என்னவென்று விசாரித்தனர்.

'பாவம் டீச்சர் இந்த பொண்ணு. இவ, இவனோட தங்கச்சி...' என்று, அவர்களுள் ஒருவனைக் காட்டினர். 'இவளுக்கு பீரியட்ஸ் வந்திருச்சு. ஆனா, இதான் இவளுக்கு முதல் டைம் போல. அவ யூனிபார்ம். பாவடையெல்லாம் கறையாகிடுச்சு. அதான், நாங்க எங்க சட்டைய கழட்டி கறை தெரியாம கட்டி விட்டோம். 'அவளால, இப்ப நடக்க முடியாதுல்ல. அதான், சைக்கிள்ல உட்கார வெச்சு, அவ வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டிருக்கோம்...' என்று, சொல்லிவிட்டு சென்றனர். இப்போது கூட்டத்தில் கோபம் குறைந்து, சலசலப்பு மட்டும் இருந்தது. ஒரு பெண்மணி முன் வந்து, 'அன்னைக்கு இதே மாதிரி தான் எனக்கும் நடந்துச்சு. எங்கண்ணன், இந்த பையன் மாதிரி ஆதரவா நடக்கல. அண்ணனோட கூட்டாளிங்க என் பாவடையில் இருந்த கறைய பார்த்து கிண்டல் பண்ணாங்க. அதனால, எங்கண்ணன் என்னைய அடிச்சிடுச்சு.

'என்னைய பள்ளிக்கூடத்த விட்டு, நிப்பாட்டிட்டாங்க. இந்த டீச்சர் அப்பமே இருந்திருந்தா, நானும் இப்ப நல்லா படிச்சிருப்பேன். எல்லாம்

வீணா போச்சு.

'ஆனா, இனிமே எந்த பொண்ணுக்கும் என்னை போல் நடக்காது. அதுவே, எனக்குரொம்ப சந்தோஷம்,' என்று, கண்ணீருடன் சொல்லிவிட்டு, கவுசல்யாவின் கையைப் பிடித்து, தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

இதைக் கேட்டிருந்த மற்ற சில பெண்களும், முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டு சென்றனர்.

முதலில், கவுசல்யாவை வசை பாடிய கிழவி, அவளருகே வந்து, 'ஆத்தா புரியாம பேசிப்புட்டேன். மன்னிச்சிரு தாயி, நீ நல்லா

இருக்கணும்,'' என்று, திருஷ்டி வழித்துவிட்டு சென்றாள்.

கூட்டத்தினர் அனைவரும் தங்களுக்குள் பேசியபடி கலைந்து சென்றனர்.

'பெரிய போராட்டமா மாற வேண்டியது. நல்ல வேளை ஒண்ணுமில்லாம ஆகிடுச்சு,'' என்று பெருமூச்சு விட்டார், தலைமை

ஆசிரியை. கவுசல்யாவின் முதுகில் ஆதரவாக தட்டிக் கொடுத்து, புன்னகைத்தபடி அங்கிருந்து சென்றார்.

மற்ற ஆசிரிய, ஆசிரியைகளும், கவுசல்யாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு செல்ல, சுகந்தியும், எத்திராஜும் அவளருகே

வந்தனர்.

'கவுசல்யா, உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு. நீங்க சாதிச்சு காட்டிட்டீங்க. கிரேட்! நான் மனசார உங்களை வாழ்த்துறேன்,' என்று கூறி, கவுசல்யாவை கட்டிப்பிடித்துக் கொண்டாள், சுகந்தி.

'ஆமா, மேடம். எனக்கும் உங்களைப் பார்த்தா, லைட்டா பொறாமையாத்தான் இருக்கு. இருந்தாலும், நீங்க கிரேட்! குட் ஜாப்,” என்று கூறி, கவுசல்யாவின் கையைப் பிடித்துக் குலுக்கினார், எத்திராஜ்.

அன்னபூரணி தண்டபாணி

வயது: 48.

கல்வி: பி.எஸ்சி.,

சொந்த ஊர்: சென்னை.

சமூக வலைதளத்தில், சமையல் குறிப்பு மற்றும் பல்வேறு தலைப்புகளில் சிறு சிறு குறிப்புகள் எழுத ஆரம்பித்து, சிறுகதை எழுத்தாளராக உயர்ந்துள்ளார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், பரிசு பெறுவது இதுவே முதல் முறை.

இதுவரை இவரது, 15 நாவல்கள், 11 குறுநாவல்கள், 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

இணையதளத்தில், இவரது படைப்புகள் வெளியாகி, பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான கதைகள் நிறைய எழுதியுள்ளார்.

லட்சியம்: அன்றாட வாழ்வில், பெண்கள் படும் இன்னல்களை மையப் படுத்தி கதைகள் எழுத வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் ஏதேனும் சிறிய மாற்றமாவது வர வேண்டும் என்பதே இவரது ஆசை.

கதைக்கரு பிறந்த விதம்: சமூக வலைதளத்தில், வயதான பெண்மணி ஒருவர் பகிர்ந்த செய்தியே, இக்கதைக்கு கருவாக அமைந்ததாக குறிப்பிடுகிறார்.







      Dinamalar
      Follow us