PUBLISHED ON : ஆக 25, 2024

செடிகளுக்கு தண்ணீர் விட்டபின், உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள், சரோஜா.
மொபைல் போனில் சார்ஜ் முழுக்க ஏறியிருந்தது. இன்னும் ஐந்து நிமிடங்களில், முதியவர்களுக்கான யோகா வகுப்பு துவங்கி விடும். அதற்குள் ஒரு கப் காபி குடித்தால் உற்சாகமாக இருக்கும் என்று தோன்றியது.
மருமகள்களில் யாரை அழைக்கலாம் என்று பார்த்தாள்.
பெரியவள் பத்மா, தினசரிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். சின்னவள் பிரேமா, குளிர்சாதனப் பெட்டி திறந்து, காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.
''அம்மா...'' என்று அழைத்த பெரிய மகனை பார்த்து, முறுவலித்தாள் சரோஜா.
''என்னம்மா, இன்னிக்கு, 5:00 மணிக்கே எழுந்துட்டீங்க போலிருக்கு?''
''ஆமாம்டா, நல்ல துாக்கம். அதான் டாண்ணு உடம்பு தானா எழுந்துடுச்சு. காபி குடிச்சியாப்பா?''
''இனிமேத்தாம்மா. நீ?''
''நான் முதல், 'டோஸ்' குடிச்சுட்டேன். இன்னும் அரை கிளாஸ் வேணும்ன்னு இருக்கு. ஒரு மணி நேர, 'ஆன்லைன்' வகுப்புல இடைவேளை இருக்காதே.''
''சரி, உனக்கும் சேர்த்தே கலந்துக்கிட்டு வரேன். தம்பி கூட இப்ப எழுந்துடுவான், அவனுக்கும் ஒரு கிளாஸ் கொண்டு வரேன்.''
''சரிப்பா.''
காபி தயாரிப்பில், பெரிய மகன், கில்லாடி. இது என்றில்லை, எந்த வேலை கொடுத்தாலும் சீராகச் செய்வான். சிறு வயது முதலே அப்படியொரு நல்ல பழக்கம். இளையவன், அப்படி அல்ல, எதிலும் ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டான். ஏதோ வேலையானால் சரி, அவ்வளவுதான்.
எதிர்பார்த்தது போலவே, ருசியாக, சூடாக, தரமாக இருந்தது காபி.
''அம்மா, உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.''
''என்னப்பா?''
அக்கம் பக்கம் பார்த்து விட்டு அடிக்குரலில், ''மினிகிட்ட பேசினேன். குரல் சரியாக இல்ல, ஏதோ மறைக்கிறா போலிருக்கு. உனக்கு ஏதாவது தெரியுமா?'' என்றான், பெரிய மகன்.
''மினியா... புரியலையே?''
''நம் மினிதாம்மா, சட்டுன்னு போனை வெச்சுட்டா. கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் தான் ஆகுது. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்ன்னு இருக்கேன். மாமனார் இப்படி தடால் தடால்னு வந்துடுறாரேன்னு, மாப்பிள்ளை தப்பா நினைப்பாரோ என, கவலையா இருக்கு.''
காபியுடன் வந்தான், இளையவன்.
''குட் மார்னிங் அம்மா. என்ன, 'கிசுகிசு'ன்னு பேசறீங்க அம்மாவும், மகனும். எனக்குத் தெரியக் கூடாதா?'' என்று சொல்லி, சிரித்தான்.
''அட... 'கிசுகிசு' எல்லாம் ஒண்ணும் இல்லப்பா. ரெண்டு பிள்ளைகளும் எனக்கு ரெண்டு கண்கள். ஒண்ணுகிட்ட ஒண்ணை மறைச்சு என்ன செய்யப் போறேன். சரிப்பா, ராத்திரி ரொம்ப, 'லேட்'டா வந்தியா, 12:00 மணிக்கு, கார் சத்தம் கேட்டது?''
''ஆமாம்மா. வினிக்கு இன்னும் ஒரு வாரத்தில் பர்த்டே வருது இல்லையா, கல்யாணமாகி வருகிற, முதல் பிறந்த நாள். அதுக்கு ஸ்பெஷல் பரிசா அவளுக்குப் பிடிச்ச நவரத்தின மோதிரம், 'ஆர்டர்' கொடுக்கப் போனேன். அதான், 'லேட்' ஆயிடுச்சு.''
''நல்ல விஷயம்பா, வினி எப்படி இருக்கா? ஒரு வாரமாச்சு, வினி மற்றும் மினிகிட்ட பேசி.''
''மூச்சுக்கு முன்னுாறு தடவை, 'அவ்வா அவ்வா'ன்னு உன்னை விசாரிச்சாம்மா. ரெண்டு பேத்திகளுக்கும்தான் உன் மேல் உயிராச்சே... என்னண்ணா, கரெக்ட்டா?''
''ஆமாம்டா... பாட்டிக்கும், பேத்திகளுக்கும் அவ்வளவு வேவ் லெந்த். அம்மா என்ன சாதாரண ஆளா, அந்தக் காலத்து சயின்ஸ் டீச்சர் இல்லையா?''
யோகா வகுப்பு துவங்கும் நேரம் வந்தது. எழுந்து கணினியை இயக்கினாள், சரோஜா.
வெயில் ஏறத் துவங்கியது. காக்கைகள் கூட பறக்காத சூழல், நண்பகல் நேரத்து அனல்.
''அம்மா, கொஞ்சம் பேசணும்,'' என்றான், பெரிய மகன்.
''வாப்பா... உட்காரு.''
''இரு...'' என்று கதவை மூடி வந்து, பெருமூச்சுடன் உட்கார்ந்தான்.
''சாப்பிட்டியா, பைனாப்பிள் ரசம், முள்ளங்கி சாம்பார்ன்னு இன்னிக்கு சமையல் ஜோரா இருந்துதே...''
''சாப்பிட்டேன் அம்மா. ஆனா, மனசுல ஏதோ குத்தற மாதிரி இருக்கு. உன்கிட்ட சொன்னா சரி ஆயிடும்.''
''சொல்லுப்பா, இந்த அம்மாவால் முடிந்த அன்பையும், மருந்தையும் என்னிக்கும் தருவேன்.''
நாற்காலியை அம்மாவின் அருகில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.
''மினி, வினி ரெண்டு பேரும் இந்த வீட்டின் செல்லக் குழந்தைகள். சொந்த சகோதரிகளை விட பாசமா வளந்தவங்க. நானும், தம்பியும் கூட்டுக் குடும்பமா சந்தோஷமாத்தான் இருக்கோம். வரன்கள் பார்த்தது, நிச்சயதார்த்தம் செஞ்சது, திருமண தேதி குறிச்சது, மண்டபம், நகைகள், உடைகள்ன்னு பார்த்து பார்த்து வாங்கி, ரெண்டு பெண்களுக்கும் ஒரே மாதிரி தான் செஞ்சோம்.
''கல்யாணங்களையும் ஒரு வார இடைவெளியில, நிறைவா நடத்தினோம். ரெண்டு தம்பதிகளும் ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர்ன்னு தனிக்குடித்தனம் நடத்தறாங்க. இதுல, மினி என் பொண்ணு...'' என்று சொல்லி, நிறுத்தினான்.
''சொல்லுப்பா.''
''அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கும்மா. மாமனார், மாமியார், நாத்தனார்னு கூடவே இல்லேன்னாலும், நாலு தெரு தள்ளி இருக்காங்க. அப்பப்ப ஏதோ, வெடுக்குன்னு சொல்றாங்க போலிருக்கு.
''இவள் பாவம், வீடு, ஆபிஸ், புது உறவுன்னு எல்லாத்தையும், 'பேலன்ஸ்' பண்ண வேண்டியிருக்கு. பாவம், தள்ளாடுகிறாள். எனக்கு என்ன செய்யிறதுன்னு தெரியலேம்மா.''
மெல்ல முறுவலித்தாள், சரோஜா.
''உன் கவலை எனக்கு புரியுதுப்பா. இப்ப நான் ரெண்டு, 'ரெகார்டிங்' போட்டுக் காட்டறேன். பொறுமையா கேட்கறியா?''
''ரெகார்டிங்கா, என்னம்மா அது?''
''ஒரு நிமிஷம் இரு.''
மொபைல்போனை எடுத்து, பொறுமையாகத் தேடினாள், சரோஜா.
''நான் பண்ணினது, 'வாய்ஸ் ரெகார்டிங்' கேளுப்பா.''
திகைப்புடன் தன் வலது காது அருகில் மொபைல் போனை வைத்துக் கொண்டான்.
பத்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது. எதிர்முனையில் பேசும் மகள் மினியின் குரல் சற்று ஒலி குறைவாகக் கேட்டது.
'இதோ பாருடி மினி... மொதல்லயே எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துடாத; அப்புறம், நீ அவங்களுக்கு அடிமையாகத் தான் இருக்கணும். அதெப்படி சொல்லுவான் உன் புருஷன், எங்க வீட்டு ஆளுங்க வரும்போதெல்லாம், அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி, நீ சமைச்சுப் போடணும்; அவர்களோடு சிரிச்சுப் பேசணும்; ஷாப்பிங் போகணும், கார்ல டிரைவ் பண்ணி கூட்டிட்டுப் போகணும்ன்னு...
'அவனைப் போல, ஆபீஸ், 'டார்கெட்டு'ன்னு நீயும்தானே உழைக்கிற. பாருடி மினி, சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு அவங்க இங்கயே, 'டேரா' போட்டுடுவாங்க... அப்புறம், நீ சம்பளம் இல்லாத வேலைக்காரியா, சமையல்காரியா, டிரைவரா, காலம் பூரா உழைச்சுக் கொட்ட வேண்டியது தான். புருஷனுக்கு, உன் மேல கொஞ்சமாவது அக்கறை வேணாமாடி?'
'அவர் ஓ.கே.,தான்மா. மோசம் எல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனால், தன் குடும்பம் மேல ரொம்பப் பாசம். அவ்வளவுதான். சரி விடும்மா, 'டயர்டா' இருக்கு; நான் துாங்க போகணும்...'
'சரிடி மினி... மக்கு மாதிரி இருக்காத; சாமர்த்தியமா, 'ஸ்மார்ட்'டா இரு. நல்ல பேர் வாங்கணும்ன்னு, சரி சரின்னு எல்லாத்துக்கும் தலை ஆட்டினே அவ்வளவுதான். உன் தலையை அம்மியா வெச்சு அரைச்சுடுவாங்க அரைச்சு...'
'அய்யோ விடும்மா. திவாகர் பற்றி, நான் இன்னும் முழுசா புரிஞ்சுக்கணும். அப்புறம் பேசலாம்...' என்றாள், மினி.
'மினி, மாப்பிள்ளை, உன் வழிக்கு வந்தான்னா சரி... இல்லேன்னா, நேரா கிளம்பி இங்க வந்துடு பார்த்துக்கலாம். கோர்ட், கேசு, லாயர்ன்னு நமக்கு நிறைய இருக்கு. சரியா?' என்றாள், பத்மா.
அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தான், பெரிய மகன்.
''இருப்பா, அடுத்த, 'ரெகார்டிங்' கேளு. இது, உன் தம்பி மனைவி பிரேமாவும், வினியும் பேசினது...'' என்று, சரோஜா பதிவைத் தேடி எடுத்து, நீட்டினாள்.
முதலில் மென்மையாக ஒலித்தது, பிரேமாவின் குரல்.
'கண்ணு வினி, நீ சொல்றது புரியுதுடா கண்ணா... தனிக்குடித்தனம்ன்னு தான் பேரு. ஆனால், சொந்தங்கள் எப்பவும் வருவதும் போவதுமா இருக்காங்க. மாமியார் வீடு அடுத்த தெருவில் இருக்கிறதால ஓடி வந்துடறாங்க. எனக்கும் வேலை செஞ்சபடியே இருக்க வேண்டியதாக இருக்குன்னு சொல்ற...
'கண்ணு, நீயும் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் தானே... இதுக்கு இருக்கிற பலம் உனக்கு தெரியாதா? வருத்தங்களை பகிர்ந்துக்க முடியும். சந்தோஷங்களை பல மடங்காக்கி கொள்ள முடியும்.
'பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தின்னு, நீயும், மினியும், 20 ஆண்டுகள் எவ்வளவு பாசமா, மகிழ்ச்சியா பறவைகள் மாதிரி வளர்ந்தீங்க... அதுக்கு இந்த மனிதர்கள் தானே காரணம்? அன்பான உறவுகள், பெரிய பலம் கண்ணு...'
'சரி, வேலைகள் அதிகமா இருக்கும்மா. தினேஷ் நல்லவர் தான். ஆனால், நான் இன்னும் முழுசா அவரை புரிஞ்சுக்கல. இந்த பொசிஷன்ல எனக்கு மட்டும் வீடு, ஆபிஸ், கிச்சன்னு, 'லோட்' அதிகமா இருக்கிற மாதிரி இருக்கும்மா... ஓடி நம் வீட்டுக்கு வந்து, உன் மடியில் படுக்கணும் போல இருக்கும்மா...'
'அடடா கண்ணா, இதுவும் உன் வீடு தான். நீ எப்ப வேணா வரலாம். அம்மா, எப்பவும் உனக்காகக் காத்திருப்பாள். நீயே சொன்ன மாதிரி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ள நிறைய காலம் தேவைப்படும்.
'பெண்கள், நாம நிச்சயமா ஆண்களை விட நுட்பமா சிந்திப்பவர்கள். தினேஷை நீ சீக்கிரம் புரிந்து கொள்வாய் கண்ணு... அவரிடம், குறைகளும் இருக்கும்; நிறைகளும் இருக்கும். ஏன் நம்மகிட்டயும் அப்படித்தானே...
'மனிதர்கள் எல்லாருமே குறைகளும், நிறைகளும் கொண்டவர்கள் தானே? மாற்ற முடிந்ததை மாற்ற முயற்சி பண்ணு. மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளணும்; அது தன்மானத்தையும், உழைப்பையும் பாதிக்காத வரை.
'உறவுகள் பற்றி இன்னும் ஒண்ணே ஒண்ணு... வேலைகள், சண்டைகள் வாக்குவாதங்கள்ன்னும் இருக்கும். ஆனால், அடிப்படையாக, பிரியமும், புரிஞ்சுக்கிற தன்மையும், மன்னிக்கிற மனசும் இருக்கும்.
'அனுபவத்தில் சொல்றேன், உன் படிப்பையும், அறிவையும், உறவுகளைப் பேணுவதில் பயன்படுத்து. பெண்ணுக்குக் கிடைத்த கல்வி, அவளை இன்னும் பண்பட்டவளாக, புன்னகையுடன் வீட்டை நிர்வகிப்பவளாக, உலக நியாயம் புரிந்தவளாக மாற்றணும். சரியா கண்ணா?'
'சரிம்மா, அழகா சொன்ன. இப்ப ஏதோ ஜன்னல் திறந்து காத்து வருகிற மாதிரி இருக்கு. தினேஷ் வரட்டும், அவர் ஆசைப்படுகிற மாதிரி, 'பீச்'சுக்கு போயிட்டு, ராத்திரி, 10:00 மணிக்கு வரோம். தாங்க்ஸ்மா!'
தாயைப் பார்த்தபடி, இமைகளைப் படபடத்தான், பெரிய மகன்.
''தம்பி... வழி வானத்தில் இல்லை, இதயத்தில் இருக்குன்னு நீயும் படிச்சிருப்ப. வாழ்க்கையும் இதயத்தில் தான் இருக்கு. அதுவும் பெரும்பான்மையா பெண்களைப் பெற்ற அம்மாக்களின் இதயத்தில் இருக்கு.
''பாலை விஷமாகவும் ஆக்கலாம், பாயசமாகவும் ஆக்கலாம். பிரேமா, தன் மகளுக்கு நேர்மையாக சிந்திக்கவும், உதவிகரமாக வாழ்வதற்கும் சொல்லித் தருகிறாள். போராட்டம் என்பது பேச்சுவார்த்தையும், பிரச்னைகளை சரியாக புரிந்து கொள்வதும்தான்னு கற்றுக் கொடுக்கிறாள்.
''கொஞ்சம் விட்டுக் கொடுப்பதும், தன்மையாக இருப்பதும், நாகரிகமாக நடந்து கொள்வதும் நம்மை மேலே மேலே உயர்த்தும் என்று சொல்லித் தருகிறாள்,'' என்றாள், சரோஜா.
''புரிந்தது அம்மா. வாழ்க்கை கல்வியை, குழந்தைகளுக்கு கற்று தருவதற்கு முன், பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையா?'' என்றபடி, பத்மாவை நோக்கி நடந்தான்.
வி. உஷா

