PUBLISHED ON : ஜூலை 28, 2024

''ஒரு உசுரும் தப்பாது, எல்லாரையும் ரத்தம் கக்க வெச்சுக் கொன்னுப்புடுவேன். யாரு வீட்டை யாரு விற்கிறது? இது என் வீடு. நான் தான் இங்க இருப்பேன்...'' தலையை அப்படியும், இப்படியுமாக நான்கு முறை சுற்ற விட்டு, கர்ண கொடூரமாய் கண்களை உருட்டி சொன்னாள், சங்கரி.
அவளது தோற்றமும், வார்த்தைகளும், நாரயணனுக்கு உயிர் குலையையே உருவி எடுப்பது போல இருந்தது; பதற்றம் பல மடங்கு எகிறியது.
பரிதவிப்புடன், அவளது கைகளைப் பற்றி, ''அமைதியா இரு, சங்கரி. என்ன ஆச்சுடி உனக்கு, எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்? உனக்கு ஒன்னும் இல்லடியம்மா. சத்தம் போடாத,'' என்றார், நாராயணன்.
அவ்வளவு தான்! அப்படி அவர் சொல்லி முடித்ததும், கண்களின் ஓரம் ரத்தமாய் சிவந்திருக்க, ''யாருடா சங்கரி, நானா... சொல்லு, நானா சங்கரி?'' பார்வையே திகிலறைந்து, மிரள வைத்தது.
''ஆமாம்மா, நீ சங்கரி தானே. உன் பேரு அதுதானே?''
''நான் சங்கரி இல்லடா, மல்லிகா...'' என்று, உரத்த குரலில் கத்தினாள்.
''மல்லிகாவா, என்னம்மா சொல்ற?''
''ஆமாடா, நான் மல்லிகா தான். இந்த வீட்டுல குடியிருந்தப்ப, நாலு ஆண்டுக்கு முன், நாண்டுக்கிட்டுச் செத்தேனே, டீச்சர் மகள் மல்லிகா. அவளே தான் நான். ஞாபகமிருக்கா?''
''ஆமா, அவ நாண்டுக்கிட்டுத்தான் செத்துப் போனா. அவ பொணத்த நானும் கூட பார்த்தேனே,'' மூச்சு முட்டலுடனும், விபரீதத்தின், மன உலுக்கலுடனும் சொன்னான், நாராயணன்.
''ஆமா, அவளே தான். நான் பேயாகி, இந்த சங்கரி உடம்புக்குள்ள புகுந்திருக்கேன். இந்த வீட்டை, ஓனரு செல்லப்பா விற்கப் போறானாமே... யாராச்சும் இந்த வீட்டை விற்கறதுக்கு பேச்செடுத்தா, ஒரு உசுரும் தப்பாது. ரத்தம் கக்க வெச்சு சாகடிச்சிருவேன்; இது என் வீடு.''
''என்னம்மா, ஏதேதோ சொல்லி, இப்படி குண்டைத் துாக்கிப் போடற... இது, உன்னோட வீடா?'' ஆலைக்குள் நுழைந்த கரும்பாக, மனநிலை பிழியப்பட, சக்கையாக்கித் துப்பப்பட்டுக் கொண்டிருந்தது, நாராயணனின் நிம்மதி.
''பின்னே, உன் வீடாடா ராஸ்கல்?'' அவள் ஆவேசமாகக் கேட்டு முடித்ததும், 'ராஸ்கல்' என்ற வார்த்தை, அவனைக் குப்பென்று மிரட்சியில் வியர்க்க வைத்தது. ஆனாலும், 'அப்படி திட்டுனது நம் சம்சாரமில்லையே... அவளுக்குள்ள இருக்குற மல்லிகாவோட ஆவிதானே...' என்றெண்ணி, கொஞ்சம் ஆறுதல் அடைந்தான்.
காலையில் சமைக்கிற வேலையில் ஈடுபட்டவாறு, தனக்குத்தானே சிரிப்பதும், புலம்புவதுமாக இருந்த, சங்கரி, திடீரென்று இப்படியொரு அவதாரம் எடுப்பாள் என எதிர்பார்த்திருக்கவில்லை, நாராயணன். இதுவரைக்கும், ஒருமுறை கூட அவள் இந்த மாதிரி பேயாட்டம் போட்டதில்லை.
இன்னும் சொல்லப் போனால், பேய் மீதான நம்பிக்கையெல்லாம் அவளுக்கு இருந்ததே இல்லை. 'பேயாவது பிசாசாவது, அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அப்படி ஒண்ணு இருக்கிறதா கதை விட்டுட்டு இருக்காங்க...' என்று, தத்துவ ஞானி போல பேசுவாள்.
'எப்படி இப்படி ஆயிட்டாள்ன்னு வெளங்கலையே?' என்று, மனசுக்குள் தவித்துக் கிடந்தான்.
தன்னோட சம்மதமில்லாம, யாரோ ஒரு பெண்ணைக் காதல் கல்யாணம் பண்ணினதுக்காக, சொந்த மகனுக்கே இந்த வீட்டைக் கொடுக்காத ஜென்மம் அந்த ஆளு, செல்லப்பா. நாண்டுக்கிட்டு செத்துப் போனவ ஆவியா வந்து, தன் வீடுன்னு உரிமை கொண்டாடினா, விட்டுட்டுப் போயிருவாராக்கும் என்ற கேள்வி, நெஞ்செல்லாம் நஞ்சாய் நின்று ஆடியது.
செல்லப்பாவின் மகன் ராகவனின் காதல் மனைவி மகேஸ்வரியை, 20 நாட்களுக்கு முன், தற்செயலாக கடை வீதியில் சந்திக்க நேர்ந்தது. கண்கள் கசிய, நா தழுதழுக்க, எல்லா விபரங்களையும், சங்கரியிடம் சொல்லி அழுதாள், அந்தப் பெண்.
'நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணினதால, எங்களை பக்கத்துலயே அண்டவிட மாட்டேங்கிறாரு, எங்க மாமனாரு. எங்களுக்கு குழந்தையும் பொறந்திருச்சு. நீங்க குடியிருக்கிறது, எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கு வீடு, சங்கரி அக்கா.
'எங்களுக்கு அந்த வீடு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே, அந்த வீட்டை விற்கறதுக்கு, தீவிரமா ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம். அதையும் வித்துட்டா, நாங்க எங்க போவோம்?' என்று கூறியிருந்தாள்.
அவளைப் பார்ப்பதற்கே, பாவமாக இருந்தது. ஏதேதோ சொல்லிச் சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தாள், சங்கரி.
'இது, ரொம்ப அநியாயம்ங்க. பெற்ற பிள்ளை வாடகை வீட்டிலிருந்து கஷ்டப்படும் போது, காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டாங்கிற காரணத்துக்காக, அவனுக்கு சேர வேண்டிய சொந்த வீட்டை, வேணும்ன்னே அவசியமே இல்லாம விற்க முடிவு பண்றது, எவ்ளோ பெரிய துரோகம்...' என்று, நாராயணனிடம் அடிக்கடி சொல்லி புலம்பினாள், சங்கரி.
அவ்வப்போது, யார் யாரோ வந்து வீட்டை பார்ப்பதும், அதற்கான விலை பற்றிப் பேசுவதுமாக இருந்தனர். அதனால், அந்த வீட்டை விற்பதற்கு, செல்லப்பா தீவிரப்பட்டிருப்பது தெரிந்தது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும், இன்னும் சங்கரியின் பேயாட்டம் நின்றபாடில்லை. அவளது பார்வையும், துடுக்கான வார்த்தைகளும், பதற்றத்தை முடுக்கி விட்டன, நாராயணனுக்கு.
''உடனே, இந்த வீட்டு ஓனரை வரச்சொல்லுடா. இல்லேன்னா, இந்த உசுரு, ஒரு நாழி தாங்காது,'' என்று, கைகள் இரண்டையும் தரையில் உரக்கத் தட்டிக் கொண்டே சொன்னாள், சங்கரி.
வேகமாய் போய் மேஜை மேல் இருந்த, மொபைல் போனை எடுத்து, செல்லப்பாவை அழைத்தான், நாராயணன்.
''சார், நான் உங்க வீட்டுல குடியிருக்கிற, நாராயணன் பேசுறேன். தயவு செஞ்சு, உடனே இங்க வாங்க. உசுரு சம்பந்தப்பட்ட பிரச்னை,'' என்றான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் பக்கத்து தெருவில் குடியிருக்கிற, செல்லப்பா, வந்து சேர்ந்தார்.
''என்னம்மா சங்கரி, எதுக்கு இப்படி தலைவிரிக் கோலமா உட்கார்ந்திருக்க?'' பதைபதைக்க கேட்டார்.
அதுவரையிலும் பற்களை, 'நற நற'வென கடித்துக் கொண்டும், கோலிக் குண்டாக கண்களை உருட்டி திரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள், ''வாடா, வா. நீ தான் இந்த வீட்டை விற்கிறதுக்கு ஏற்பாடு பண்ணினவனா?
''நான், சங்கரி இல்லைடா, மல்லிகா,'' என்றவாறு, விரித்துப் போட்டிருந்த தலைமுடியை, அங்கிட்டும், இங்கிட்டுமாக, இரண்டுமுறை சுற்ற விட்டு, சற்று அடங்கினாள்.
ஏதோ ஒன்று புரிபட்டவராக, ''சரிம்மா, இப்ப எதுக்கு இந்த பிள்ளை மேல புகுந்து இம்சை பண்ணுற... உனக்கு என்ன தான் வேணும்?'' என்று, கேட்டார்.
உடனே, 'ஹ்ஹ்ஹ்... ஹ... ஹா... ஹ்ஹா...' என்று, ஆக்ரோஷமாக சிரித்தாள்.
செல்லப்பாவை பார்த்து, ''ஏன்டா, வீட்டு ஓனரு, இந்த வீட்டை விற்கப் போறீயாமே. உனக்கு அம்புட்டு தெனாவெட்டா?'' என்று ஆக்ரோஷமானாள், சங்கரி.
ஒருமையில் அவள் அப்படிக் கேட்டதும், அவர் அதிர்ச்சியடைந்தார்.
''என்னம்மா, மருவாத கொறையுது?''
''என் வீட்டை விற்கிறதுக்கு அலையிற, உனக்கு என்னடா மருவாத வேண்டி கெடக்குது?''
''இது என்ன, உன் வீடா?'' என்று திகிலறையக் கேட்டார். அப்படியே உடம்பெல்லாம் உதறலெடுக்க, நாராயணனைப் பார்த்தார்.
''நாராயணா, இப்படி பேசி ரகளை பண்றது, நெசமாவே உன் சம்சாரம் இல்லப்பா. அவளோட உடம்புக்குள்ளார புகுந்திருக்கிற ஆவி. இந்த வீட்டுல ரொம்ப நாளைக்கு முன், குடியிருந்து நாண்டுட்டுச் செத்துப் போன, மல்லிகாவோட ஆவி தான் வந்து ரகளை பண்ணிக்கிட்டிருக்கு.
''நம் ஊரு மாயாண்டி பூசாரிக்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போயி, மந்திரிச்சிட்டு வந்துரு,'' என்று நிறுத்தியவர், அவளைப் பார்த்து, ''சரிம்மா, சங்கரி... இப்ப இந்த வீட்ட விட்டும், இந்த பிள்ளையை விட்டும் போகணும்ன்னா, நீ என்ன எதிர்பார்க்குற? கோழி ரத்தம், ஆடு ரத்தம் படையல் வேணுமா?''
''அதெல்லாம் வேணாம்டா, இந்த வீட்டை யாருக்கோ விற்கப் போறதாச் சொன்னியாமே. இதை விற்கக் கூடாது; இது என்னோட வீடு. நான் செத்துப் போனதுல இருந்து, இந்த வீட்டுலே தான் இருக்கேன்.
''இனி, எப்பவும் இங்கே தான் இருப்பேன். வீட்டை விற்கணும்ன்னு பேச்செடுத்தா, இந்த வீட்டுக்கு யாரு குடி வந்தாலும், அவங்களை ரத்தங்கக்கிச் சாவடிக்காம விட மாட்டேன்; ஒரு உசுரு தப்பாது.''
நாக்கைத் துருத்தி, உக்கிரமாய் பார்த்தவாறு, அவள் அப்படி சொல்லவும், ஆடி போனார், செல்லப்பா.
பின் ஒரு முடிவுக்கு வந்தவராக, ''சத்தியமா நான் யாருக்கும் இந்த வீட்டை விற்க மாட்டேன். மொதல்ல, நீ இந்த பிள்ளையை விட்டு வெளியேறு,'' என்றார், செல்லப்பா.
''சரிடா, போயிடறேன். நீ என்கிட்ட கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது. மீறீனா, உன் வீட்டுல ஒரு உசுரையும் விட மாட்டேன். அத்தனை பேரையும், நாசமாக்கிருவேன்,'' என்று திண்ணமாகச் சொன்னாள். நாக்கை முழுவதுமாக வெளியில் நீட்டியவாறு, நான்கைந்து தடவை, தலையை வேகமாய் சுற்றிவிட்டு, அப்படியே கீழே விழுந்தாள்.
சிறிது நேரத்தில், மெதுவாக அவனுக்கருகில் வந்தாள், சங்கரி.
''ஏங்க, இந்த வீடு வேணாங்க. என்னையப் புடிச்சு ஆட்டிவெச்ச மல்லிகாவோட ஆவி, அடுத்து, உங்களையும், நம் பிள்ளைங்களையும் புடிச்சு ஆட்டாதுன்னு என்ன உத்திரவாதம்? உடனே இந்த வீட்டை காலி பண்ணிட்டுப் போயிருவோம்.''
அவனும் அந்த சூழல் உணர்ந்து அதற்கு சம்மதித்தான். அடுத்த சில தினங்களில், அந்த வீட்டைக் காலி செய்து, பக்கத்து தெருவில் குடியேறினர்.
இவளுக்கு பேய் பிடித்த சங்கதி, அந்த கிராமம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவி அது, 'பேய் வீடாக' ஆகி, பீதி கிளம்பி இருந்தது.
இரண்டு தினங்கள் கடந்த பின், செல்லப்பா சொல்லி இருந்தவாறு, மாயாண்டி பூசாரியிடம் மந்திரிப்பதற்காக, சங்கரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான், நாராயணன்,
''சங்கரி அக்கா, உங்களைத்தான்...'' தனக்குப் பின்னாலிருந்து, தன் மனைவியை யாரோ ஒரு பெண் உரத்த குரலில் கூப்பிடுவதை கேட்டு, சடன் பிரேக்கிட்டு நின்று, திரும்பி பார்த்தான்.
இவர்களை நோக்கி மூச்சிரைக்க வந்து நின்றாள், செல்லப்பாவின் மருமகள், மகேஸ்வரி. கண்களில் ஆனந்தக் கண்ணீர், முகமெல்லாம் மகிழ்ச்சி பெருக்கு.
மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி, ''மகேசு... என்ன விஷயம்?'' புரியாமல் கேட்டாள், சங்கரி.
''ரொம்ப நன்றி, சங்கரி அக்கா. உங்களுக்குப் பேய் பிடிச்சிருக்கிறதாவும், நீங்க குடியிருந்த என் பங்கு வீட்டுல பேய் இருக்கிறதாகவும் நாடகமாடி இருக்கீங்க. அந்த வீட்டைக் காலி செஞ்சு, அதை பேய் வீடுன்னு ஊரை நம்ப வெச்சு, எங்களுக்கு கிடைக்க வேண்டிய வீட்டை, கிடைக்க செஞ்சுட்டீங்க.
''இனி, சும்மாவே கொடுத்தாலும் பேய் பயத்தால, அந்த வீட்டை யாரும் வாங்க மாட்டாங்க. எனக்கு சேர வேண்டிய அந்த வீடு, இனி யாரு கைக்கும் போகாது. இதுக்கு நீங்க தான் காரணம். ரொம்ப நன்றிங்க அக்கா,'' என்று சொல்லி இரு கைகளையும் கூப்பியவாறு, அங்கிருந்து நகர்ந்தாள், மகேஸ்வரி.
நாராயணனுக்கு, இது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
'அடிப் பாதகத்தி, இதுக்குத்தான், பேய் நாடகம் போட்டியா?' என்றெண்ணியவாறு, சங்கரியை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவன், மோட்டார் சைக்கிளை வந்த வழியே திருப்பி நிறுத்தினான்.
''என்னங்க, எதுக்கு மறுபடியும் வந்த பக்கமாவே, பைக்கைத் திருப்புறீங்க. மந்திரிச்சுட்டு வரலாம்ன்னுதானே கூட்டிட்டு வந்தீங்க?'' என்றாள், சங்கரி.
''உனக்கென்ன பேயா பிடிச்சிருக்கு, மந்திரிக்கிறதுக்கு? புண்ணியம்தானே பண்ணியிருக்க. நல்லது பண்ணினவங்களுக்கு, யாராச்சும் மந்திரிப்பாங்களா?'' என்றான், நாராயணன்.
அவனை இறுகக் கட்டிக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள், சங்கரி.
தாமோதரன்