sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

புரிந்துகொள்ளும் நேரமிது!

/

புரிந்துகொள்ளும் நேரமிது!

புரிந்துகொள்ளும் நேரமிது!

புரிந்துகொள்ளும் நேரமிது!


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊரிலிருந்து பெரியப்பா வந்திருக்க, அவருடன் பேசிக் கொண்டிருந்தான், பாஸ்கரன். சமையலறையில் இருந்த உமாவுக்கு எரிச்சலும், கோபமும் வந்தது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை கிராமத்திலிருந்து, வத்தல், வடகம் என, எதையாவது துாக்கிக் கொண்டு வந்துவிடுவார். பாஸ்கரனும் அவரை நன்றாக உபசரித்து, போகும் போது நாலாயிரம், ஐயாயிரம் என, பணம் கொடுத்து அனுப்புவான்.

'எப்ப வந்தாலும் இப்படி பணத்தை தாராளமாக கொடுத்து அனுப்பறீங்க... நாளைக்கு நமக்குன்னு சேமிப்பு வேண்டாமா?' என்பாள், உமா.

'ஏன், உமா, இப்படி சொல்றே. நான் கொடுப்பது சிறிய தொகை தான். ஆனால், அவர் எனக்கு, எவ்வளவு உதவிகள் செய்திருக்கார் தெரியுமா! அப்பா இறந்து கஷ்டப்பட்ட சமயத்தில், என்னைப் படிக்க வச்சதே அவர் தான். அதையெல்லாம் மறந்துடக் கூடாது இல்லையா!' என்பான், பாஸ்கரன்.

'அதற்கு நன்றிக்கடனாக தான், அவர் மகள் ரம்யா கல்யாணத்திற்கு, கேட்காமலேயே லட்சக்கணக்கில் கொடுத்தீங்களே... அப்புறம் என்னங்க?'

'இருக்கட்டும், உமா. இதை பெரிசுபடுத்தாதே. நமக்காக செலவு செய்ததாக நினைச்சுக்குவோம்...' என்பான், பாஸ்கரன்.

காபியைக் கொண்டு வந்து, அவர்களுக்கு கொடுத்தவள், பெரியப்பா பேசுவதைக் கவனித்தாள்.

''ரம்யா பேரில் இடம் வாங்கியிருக்கேன், பாஸ்கர். கிராமத்தில் தான். இருந்தாலும், நாளைக்கு நல்ல விலை போகும். பணம், 'செட்டில்' பண்ணிட்டேன். இப்ப அவ பேரில் இடத்தை, 'ரிஜிஸ்டர்' செய்யணும், அதுக்கு பணம் தேவைப்படுது. அடுத்த வாரம் வர்றதாக சொல்லியிருக்கா, ரம்யா. அவ வந்ததும், அவ பேரில், 'ரிஜிஸ்டர்' பண்ண வேண்டியது தான். ஏதோ என்னால் முடிந்தது. அவளுக்கு ஒரு இடம் வாங்கி கொடுத்த திருப்தி கிடைச்சிருக்கு,'' என்றார், பெரியப்பா.

உள்ளே வந்த, உமாவுக்கு, இப்போது எதற்காக வந்திருக்கிறார் என்பது புரிந்து போனது.

'மகள் பெயரில் வாங்கிய இடத்தை, 'ரிஜிஸ்டர்' பண்ண, இவரிடம் பணம் வாங்கிப் போக வந்திருக்கிறார். இவரும் நிச்சயம் யோசிக்காமல் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கொடுத்து விடுவார்...' என, நினைத்துக் கொண்டாள்.

மார்க்கெட் போன உமா, அங்கு முருகனைப் பார்த்தாள். சட்டென்று மனதில் ஒரு யோசனை வந்தது. இவன், அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில், 'அட்டெண்டர்' ஆக வேலை செய்பவன். அவர்கள் இருக்கும் ஏரியாவில் இருப்பதால், நல்ல பழக்கம்.

பாஸ்கர், பெரியப்பாவுக்கு பணம் கொடுத்தாரா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக உணர்ந்தாள்.

அதற்குள் உமாவைப் பார்த்த முருகன், ''நல்லாயிருக்கீங்களா... மேடம். வங்கி பக்கமே வரலையே! நேத்து சார் வந்து பணம், 'டிரா' பண்ணிட்டு போனாரு. கூட்டமாக இருந்தது. நான் தான் ஐம்பதாயிரம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன்,'' என, அவள் கேட்காமலேயே தகவல் சொல்லிவிட்டு போனான்.

இப்படி சொந்தம், உறவு என்று சொல்லி, ஏமாளித்தனமாக பணத்தை செலவு செய்கிறாரே! நிச்சயமாக இதுபற்றி பேசினால், தங்களுக்குள் பிரச்னை வரும் என்பதால், கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

நிறைய முறை இதுபற்றி பாஸ்கர், அவளிடம் பேசுவான் என, எதிர்பார்த்து ஏமாந்து போனாள், உமா.

''பெரியப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். ரம்யா போனில் சொன்னாள். ஒரு தடவை நாம் கிராமத்துக்குப் போய் பார்த்துட்டு வரணும், உமா,'' என்றான், பாஸ்கர்.

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள், உமா.

ஒரு மாதத்துக்கு பின், உமாவின் தம்பி போன் செய்து, ''அக்கா, நாளைக்கு அங்கே வரேன். உன்னையும், மாமாவையும் பார்த்துட்டு போகணும். வேலையில் சேர்ந்ததற்கு அப்புறம் வரமுடியலை...'' என்றான்.

''என் தம்பி, நாளைக்கு வர்றானாம். பெங்களூரில் நல்ல கம்பெனியில் போன மாசம் வேலைக்குச் சேர்ந்திருக்கான். இரண்டு நாள், 'லீவில்' பார்த்துட்டு போக வரேன்னு சொன்னான்,'' என்று, சந்தோஷக் குரலில் சொன்னாள், உமா.

''நாளைக்கா... ஆபீஸ் வேலையாக, வெளியூர் போக வேண்டியிருக்கு, உமா. உன் தம்பி வந்தால் நல்லா கவனிச்சு, அனுப்பு. அடுத்த முறை வரும்போது பார்க்கலாம்ன்னு சொல்லு,'' என்று, பாஸ்கர் கூறியதும், உமாவின் முகம் வாடியது.

''என்னங்க இது. ரொம்ப நாளைக்கு அப்புறம் வீடு தேடி வர்றான். நீங்க இல்லாமல் இருந்தால் எப்படிங்க?'' என்றாள்.

''அதுக்கு என்ன பண்றது, உமா. சூழ்நிலை அப்படி. அடுத்த தடவை வரும்போது பார்க்கலாம்.''

ஊரிலிருந்து பெரியப்பா வந்தால், நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுகிறார். தன் உறவு சொந்தம் வரும்போது, அலட்சியப்படுத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தம்பிக்கு பிடித்த பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி என, தடபுடலாக சமைத்து பரிமாறினாள், உமா.

''உன் மாமாவுக்கு வெளியூர் வேலை வந்துடுச்சு. அதான் ஊரில் இல்லை. நீ வர்ற சமயம் இருக்க முடியலைன்னு வருத்தப்பட்டாரு,'' என்று, கணவனுக்காக சமாதானமாக பேசினாள்.

''இருக்கட்டும்கா. எனக்கு வேலை 'கன்பார்ம்' ஆகி, ஐம்பதாயிரம் ரூபாயை இரண்டு நாளில் 'டெபாசிட்' செய்யணும்ன்னு சொன்னாங்க.ஏற்கனவே நம்ப நில சம்பந்தமாக கோர்ட், கேஸ்னு செலவு பண்ணிட்டு இருக்காரு, அப்பா...

''சரி மாமாகிட்டே கேட்போம். வேலைக்கு சேர்ந்த பிறகு, திருப்பிக் கொடுத்துடலாம்ன்னு, அவரைப் பார்க்க புறப்பட்டு வந்தேன்.

''அ-ப்போது மாமா, அவருடைய பெரியப்பாவை பஸ் ஏற்றிவிட, பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தாரு. அங்கேயே அவரைப் பார்த்துட்டேன்.

''விஷயத்தைச் சொன்னதும், 'இதுக்காகவா புறப்பட்டு வந்தே. போனில் சொல்லியிருந்தா, பணத்தை, 'டிரான்ஸ்பர்' செய்திருப்பேனே... சரி, வா, வங்கியில் இருந்து, 'டிரா' பண்ணித் தரேன்னு, கையோடு அழைச்சுட்டு போய், பணத்தை எடுத்துக் கொடுத்தாரு.

''அதுமட்டுமில்லாமல், 'இதை நீ திருப்பி தரணும்ன்னு அவசியமில்லை. நீ, உமாவுக்கு மட்டும் தம்பி இல்லை. எனக்கும் தம்பி தான். நல்லபடியாக வாழ்க்கையில் முன்னுக்கு வரணும். நீ புறப்படு'ன்னு, ஹோட்டலில் சாப்பாடு வாங்கித் தந்து, அனுப்பி வச்சாரு...

''மாமாவுக்கு ரொம்ப நல்ல மனசுக்கா. அவர், நம் வீட்டு மாப்பிள்ளையாக வந்ததுக்கு, நாம் கொடுத்து வச்சுருக்கோம்,'' என்று, தம்பி கூறியதை கேட்டு, அமைதியாக நின்றாள், உமா.

அப்போது, அவளுடைய மொபைல் போன் ஒலிக்க, எடுத்தாள்.

''உமா... நான் ஊரிலிருந்து மாமா பேசறேன்மா. உன் அத்தை, மாங்காய் வற்றல் போட்டிருக்கா. கொண்டு வந்து நேரில் கொடுத்துட்டு போகலாம்ன்னு பார்த்தா, உடம்புக்கு கொஞ்சம் முடியலை. கொரியரில் போட்டு அனுப்பட்டுமா?'' என்றார், பாஸ்கரின் பெரியப்பா.

''வேண்டாம், மாமா. அவர் ஊரில் இல்லை. வந்ததும் நாங்க இரண்டு பேரும் நேரில் வந்து உங்களைப் பார்த்துட்டு, வாங்கிட்டு வர்றோம். உடம்பை பார்த்துக்குங்க,'' என்ற உமாவின் குரலில், உண்மையான அன்பு தெரிந்தது.

- பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us