sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமன்!

/

சமன்!

சமன்!

சமன்!


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அக்னி நட்சத்திரமே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இந்த வெயிலு சக்கப் போடு போடுதே...' என, வழிந்தோடும் வியர்வையை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டினேன். நாக்கு வறண்டு, தொண்டை உலர ஆரம்பித்தது. வழக்கமாய் இளநீர் குடிக்கும் கடைக்கு முன், வண்டியை நிறுத்தினேன்.

என்னை கண்டதும், ''வணக்கம் சார், வழுக்கையா, தண்ணீரா?'' என்றார், கடைக்காரர்.

''நல்லா தண்ணி உள்ளதா பார்த்து கொடுப்பா. நாலு இளநீரை பார்சலா கட்டு,'' என்றவாறே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

''ஐயா சாப்பிட ஏதாவது...'' என, குரல் வந்த திசையை பார்த்தேன்.

நல்ல திடகாத்திரமான தேகம் தான். மீசையும், தாடியும் நரைத்துப் போய், மழிக்கப்படாமல் வளர்ந்து இருந்தது. 70 வயதிற்குள் இருப்பார். தோளில் ஒரு பையை வைத்திருந்தார்.

தன் வலது கையை என்னை நோக்கி நீட்டியவாறே, மீண்டும், ''ஏதாவது கொடுங்கையா,'' என்றார்.

சட்டைப்பையை துழாவி, பத்து ரூபாய் தாளை எடுத்து, அவரிடம் நீட்டினேன். மகிழ்வோடு பெற்றுக் கொண்டவர், ''ஐயா ஒரு இளநீர் வாங்கி தாங்களேன்,'' என்றார்.

''இதை முதல்லயே சொல்லியிருக்கலாம் இல்லை. காசையும் வாங்கிக்கிட்டு, இளநீரும் கேட்டா என்ன அர்த்தம்? கொடுக்கறதை வாங்கிகிட்டு சந்தோஷமா போங்க,'' எங்கிருந்தோ வந்த கோபத்தில் வார்த்தைகள் தெறித்து விழுந்தன. பரிதாபமாய் பார்த்தாரே தவிர, ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.

''நல்லா தெடமாத்தான் தெரியறாரு. இவரு வயசுல எத்தனை பேரு உழைச்சிக்கிட்டு இருக்காங்க. உடம்பு வலிக்காம, கையை நீட்டி காசு பார்த்து பழகிட்டாரு. கிடைக்கிற காசை வெச்சி, தண்ணி அடிச்சுக்கிட்டு, இப்படி நா கூசாம, யார்கிட்டயாவது சாப்பாட்டுக்கும் கையேந்திக்கிட்டாப் போதும். என்ன பொழப்போ, சே...'' என்றேன், இளநீர் விற்பவரிடம்.

அவர் எதுவும் பேசாமல் சிறு சிரிப்போடு, தன் வேலையைத் தொடர்ந்தார்.

'ஒருவேளை நான் வாங்கி கொடுத்திருந்தால், கூடுதலா ஒரு காய் அவருக்கு வித்திருக்குமோ; அது நடக்காமல் போனதால் அமைதியா நிற்கிறாரோ...' என்று, குருட்டு கணக்குப் போட்டது, என் மனம்.

அந்த மனிதர் நின்று கொண்டிருக்கும் போது என்னால், இயல்பாய் இளநீரைக் குடிக்க முடியவில்லை. வேக வேகமாய் குடித்துவிட்டு, இடத்தை காலி பண்ணுவதிலேயே குறியாய் இருந்தேன்.

பைக்கில் கிளம்பும்போது, பெரியவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். வழக்கமாய் வாங்கி செல்லும், நாலு இளநீரும் இன்று, நாற்பதாய் மாறி கனக்கத் துவங்கியது.

'சே, இதிலிருந்தாவது ஒன்றை அந்த பெரியவருக்கு கொடுத்திருக்கலாம். நாற்பது ரூபாயில் என்ன கோட்டையா கட்டிவிடப் போகிறேன்? 'பழனி பாத யாத்திரை குழு' என்று அச்சிடப்பட்ட பையை வேறு வைத்திருந்தாரே...

'ஒரு வேளை, பாத யாத்திரை போகிறவராய் இருக்குமோ! சே... சே இருக்காது. இந்த மாதத்தில் யாரும் போவதாய் கேள்விப்படவில்லையே... அப்படியே சென்றாலும், தனியாகவா போவார்? இதற்கு முன் இவரை இங்கு பார்த்ததே இல்லையே...'

அவரைப் பற்றிய குழப்பத்திலேயே, வண்டி இன்னும் மெதுவாய் ஊர்ந்தது. குடித்த இளநீரும், வியர்வையாய் வழிந்தோட ஆரம்பித்தது.

'வண்டியை திருப்பி, அவருக்கு ஒரு இளநீரை வாங்கி கொடுத்திடுவோமா?' என்று, ஒரு கணம் யோசித்து வண்டியை நிறுத்தினேன்.

'வேண்டாம், வேண்டாம். அந்த கடைக்காரன் தான், என்ன நினைப்பான். அவனோடு எத்தனை ஆண்டு கால பழக்கம். அவர் கேட்ட போதே, வாங்கி கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, இப்போது மீண்டும் போய் பார்த்தால்...

'வேண்டாம். அதான், பத்து ரூபாய் கொடுத்தாச்சே. இதே மாதிரி இன்னும் மூணு பேர் கொடுத்தாலே போதும். அவரே வாங்கி குடிச்சிக்கிடலாம். காசு எதுவும் கொடுக்கலைன்னா தானே நான் வருத்தப்படணும்? கேட்டதையெல்லாம் துாக்கி கொடுத்திட முடியுமா?

'தனக்கு போக தானே, தானமும், தர்மமும். ஏதோ, என்னால முடிஞ்சதை கொடுத்துட்டேன். அவ்வளவு தான்...'

என்னை நானே சமாதானப்படுத்த, என் செயலை நியாயப்படுத்த, ஏதேதோ முயற்சிகளை மேற்கொண்டபடியே, வீட்டிற்கு வந்தேன்.

சோர்வாக நாற்காலியில் அமர, என் மணக்கண்ணில் மீண்டும் அந்த பெரியவர், அதே யாசகம்.

''என்னாச்சு. ஒரு மாதிரி இருக்கீங்க?'' என்றாள், என் மனைவி.

நடந்ததை சுருக்கமாக கூறினேன்.

''பாவம் அடிக்கற வெயிலுக்கு, வாய் விட்டு கேட்டிருக்காரு. வாங்கி கொடுத்திருக்க வேண்டியது தானே,'' என்றாள்.

''அதான், பத்து ரூபா காசு கொடுத்திருக்கேனே போதாதா?'' என்றேன், கோபமாக.

''அப்போ விடுங்க. அதையே ஏன் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க...'' என்றாள்.

பதில் சொல்லத் தெரியாமல் முழித்தேன்.

''தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காதீங்க. நாளைக்கு அந்த பக்கமா போகிறப்போ, அவரைப் பார்த்தா வாங்கி கொடுத்திடுங்க...'' என்றாள்.

''சரி,'' என்று, தலையாட்டினேன்.

மனம் லேசாய் சமாதானமானது போல் இருந்தது. ஏதோ ஒரு உறுத்தல் மனசுக்குள் ஓடிக்கொண்டும் இருந்தது. அந்த நிகழ்வை மறக்க ஏதேதோ செய்து பார்த்து, தோற்றுக் கொண்டே இருந்தேன்.

மறுநாள் -

அந்த பகுதி முழுவதும் அவரை தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்புகையில், ஏனோ இளநீர் குடிக்க தோணாமல், டீ குடிக்க ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன்.

''ஹலோ, ராஜன். எல்லாரும் நல்லா இருக்கீங்களா?'' என்ற குரல் கேட்டு திரும்பிய என் பார்வையில், வங்கி மேனேஜர் நரசிம்மன் நின்றிருந்தார்.

இருவரும் ஒரு காலத்தில், அடுத்தடுத்த அப்பார்ட்மென்டில் இருந்த போது, ஒன்றாய், 'வாக்கிங்' போவதும், ஒரே குடும்பமாய் பழகியதும், பசுமையாய் மனதிற்குள் வந்து சென்றன.

நரசிம்மனின் வேலை நிமித்தமாக, அவர்களது குடும்பம் வெளியூர் சென்றுவிட, வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் இவரை பார்க்கிறேன்.

''அடடே நீங்களா! வணக்கம் சார். எல்லாரும் எப்படி இருக்காங்க? பார்த்து எவ்வளவு நாளாச்சு? தினமும் ஒரு குட் மார்னிங் மெசேஜ் போட்டுக்கிடுவோம். அவ்வளவு தான். நீங்க இங்க வர்றதை சொல்லி இருக்கலாமே... சரி, வீட்டுக்கு வாங்க,'' என்றேன்.

''இன்றைக்கு ஆபிஸ் வேலையா, எதிர்பாராதவிதமா வந்தேன். அதனால தான், எதுவும் சொல்லிக்க முடியல. வந்த வேலை முடிந்தது. இப்போ, ஊருக்கு கிளம்புறேன். இன்னொரு நாள் கண்டிப்பா, குடும்பத்தோடு வாரேன். என் மனைவியும், உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு சொல்லிட்டே இருக்கிறா,'' என்றார்.

'ஆர்டர்' கொடுத்த டீயைக் குடித்தவாறே, சில நினைவுகளை அசைபோட துவங்கினோம்.

''சார், வேற ஏதாவது வேணுமா?'' என்று கேட்ட சர்வரின் குரலில், எங்களது உரையாடல் சற்று தடை பட்டது.

''இல்லை அவ்வளவு தான்,'' என்ற நரசிம்மனிடம், 'பில்'லை நீட்டினார், சர்வர். வேகமாக அவரிடம் இருந்து அதை பறித்தேன்.

''நான், 'பே' பண்றேன், சார். ராஜா மாமா, ஸ்வீட் வாங்கிக் கொடுத்ததா, பசங்கக்கிட்ட சொல்லிடுங்க,'' என்றேன்.

முதலில் மறுத்தவர், பின், என் அன்புக்கு கட்டுப்பட்டார். நிறைவோடு வீட்டிற்கு திரும்பும் போது, ஏனோ தவிர்க்க முடியாமல், அந்த முதியவரின் ஞாபகம்.

'ஐநுாறு ரூபாய்க்கு மேல் வந்த பில்லை, நரசிம்மன் சார் மறுத்தும், நான் கொடுத்திருக்கேன். இந்த தயாள குணம், எதுவுமே இல்லாத அந்த பெரியவரிடம் ஒரு, 40 ரூபாய்க்கு ஏன் என்னால் காட்ட முடியவில்லை? என் உதவிகளெல்லாம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் மட்டும் தானா...'

மனசாட்சி சம்மட்டியாய் மாறி, என்னை அடித்தது.

பள்ளியில் படிக்கும் போது, எதிர்வீட்டு கணேசன், அவனது தாத்தாவை பராமரிக்க முடியாமல், திருச்செந்துார் பஸ் ஸ்டாண்டில், அவனது அப்பா தொலைத்து விட்டு வந்ததை சொன்ன கதை, ஏனோ என் நினைவிற்குள் வந்தது.

'அப்படி யாராவது இவரை தென்காசி பஸ் ஸ்டாண்டில் தொலைத்துவிட்டு போயிருப்பார்களோ? பாவம்...'

என் மனம் அவருக்காக பரிதாபப்பட துவங்கியது.

''வாங்கி வந்த இளநீர் அப்படியே இருக்கு. அதைக் குடிச்சா என்ன?'' என்றாள், அதட்டலுடன் என் மனைவி.

அதை பார்த்ததும் என் மனம் கசந்தது. அவளுக்கு பதில் சொல்லாமல், இளநீர் பையை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

''இன்னுமா அந்த தாத்தாவை நினைச்சுட்டு இருக்கீங்க?'' என்று வியப்பாக கேட்டாள்.

தலையசைத்தபடியே சென்றேன்.

பாக்கெட்டில் இருந்த, மொபைல் போன் ஒலிக்க துவங்கியது. எடுத்து பார்த்தேன். என் நண்பன் மூர்த்தியின் பெயர் ஒளிர்ந்தது. அனிச்சையாக போனை, 'ஆன்' செய்தேன்.

''ராஜன், நாளைக்கு, 'லீவு' தானே? குற்றாலத்துக்கு வர்றீயா?'' என்றான்.

''என்ன விஷயம்?''

''எங்க, 'ரோட்டரி கிளப்'ல ஒரு, 'மீட்டிங்' நடக்குது. அது மதியத்தோட முடிஞ்சிடும். அதுக்கப்புறம் அப்படியே, குற்றாலத்திலே ஒரு குளியல் போட்டுட்டு வருவோம்,'' என்றான்.

''இன்னும் சீசனே ஆரம்பிக்கலையேடா, ஏதோ சாயங்காலம் பெய்யுற மழையால தானே தண்ணி விழுது. இந்த தண்ணியில குளிச்சா உடம்புக்கு சேராதே,'' என்றேன்.

''அடிக்கிற வெயிலுக்கு கொஞ்சம் அப்படியே, 'ரிலாக்ஸா' போயிட்டு வருவோமே,'' என்றான்.

''சரி உனக்காக வாரேன். 'மீட்டிங்' சீக்கிரமா முடிஞ்சிடும்ல?'' என்றேன்.

''அதெல்லாம் கரெக்டா முடிஞ்சிடும். கலெக்டர் விழா என்பதால், எல்லா ஏற்பாடும் பக்காவா நடக்குது,'' என்றான்.

ஒன்றை மறக்க வேண்டும் என்றால், வேறு ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அவனோடு கொஞ்சம் வெளியே சென்று வந்தால் மனதிற்குள் ஆறுதலாய் இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.

மூர்த்தி சொன்ன மாதிரியே எல்லா நிகழ்வுகளும் திட்டமிட்டபடியே அழகாக, விரைவாக நடந்து கொண்டிருந்தது. வசதியான ஒரு இருக்கையில், என்னை அமர வைத்துவிட்டு, பம்பரமாய் தன் ரோட்டரி கழகத்தோடு இணைந்து விழாவை, நேர்த்தியாய் நடத்திக் கொண்டு இருந்தான், மூர்த்தி.

''நம்ம ரோட்டரி கழகத்தோட முயற்சியாலேயும், மாவட்ட ஆட்சித் தலைவரோட முழு ஒத்துழைப்பும் இணைந்து, நம்ம பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு புது வாழ்வு மையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். உங்களால முடிந்த ஆதரவை எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்,'' என்று, 'மைக்'கை பிடித்து பேசினான், மூர்த்தி.

அடுத்தடுத்த உறுப்பினர்கள் பேச துவங்க, மெதுவாக இருக்கையை விட்டு எழுந்தேன். அந்த அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது, அதன் மையத்தில், அந்தப் பெரியவர், யாரிடமோ, எதையோ கேட்டபடியே, அதே பை, அவரது தோளில் தவழ்ந்தபடி, ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பரவசத்தோடும், அதிர்ச்சி விலகாத பார்வையோடும் திரும்பிய போது, எதிரில் நின்றிருந்தான், மூர்த்தி.

''என்னடா போர் அடிக்குதா? இன்னும் கொஞ்ச நேரம் தான். உன்னால முடிஞ்சா கொஞ்சம் கூல்ட்ரிங்ஸ் பாட்டில் வாங்கிட்டு வர்றியா?'' என்றான்.

''அதில்லைடா. அந்த பெரியவர்...'' என்று, அவர் அமர்ந்திருந்த திசையைக் காட்டினேன்.

''ஓ... அவங்க எல்லாரும் எங்க கிளப் மூலமா புதுவாழ்வு மையத்திற்கு போறவங்க,'' என்றான்.

''பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்டவங்க தான். தென்காசி ஊர் முழுக்க சுத்திக்கிட்டு இருந்தாங்க. அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்து, இந்த முகாமுக்கு அனுப்ப போறோம். நிறைய பேர் இதுக்காக ரொம்பவே முயற்சி எடுத்துக்கிட்டாங்க.

''நம்ம கலெக்டரும் முழு ஆதரவு கொடுக்கிறார். உனக்கு தெரிஞ்ச, 'டோனர்ஸ்' யாராவது இருந்தாலும் சொல்லு. நல்ல முறையில இந்த மையம் நடக்கணும்ங்கிறது கலெக்டரோட ஆசை,'' என்றான், மூர்த்தி.

''நிச்சயமா சொல்றேன்டா. இவங்களுக்கு இப்ப கூல்ட்ரிங்ஸ் கொடுக்கறதுக்கு பதிலா, என்னோட செலவுல இளநீர் வாங்கி கொடுக்கட்டுமா?'' என்று கேட்டேன்.

''தாராளமாக கொடு. செயற்கையான கூல்ட்ரிங்ஸ்களை விட, இளநீர் நல்லது தானே,'' என்றான்.

எங்கிருந்தோ ஒரு மனநிறைவு என்னை அப்பிக் கொண்டதும், மகிழ்வோடு இளநீர் வாங்க கிளம்பினேன்.

வே. சரஸ்வதி உமேஷ்வயது: 43,

படிப்பு: எம்.எஸ்சி., பி.எட்., எம்.பில்.,

பணி: அறிவியல் ஆசிரியை.

இதுவரை, 70 சிறுகதைகள் மற்றும் 10 சிறுவர் நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்துப் பணிக்காக பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்பது இவரது லட்சியம்.

கதைக்கரு பிறந்த விதம்: கோடைகாலத்தில், ஒரு நாள், கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது கவனித்த நிகழ்வை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட கதை இது.






      Dinamalar
      Follow us