
கருமாதி கூடத்தில் ஏற்பட்ட சலசலப்பு, வாசலில் போடப்பட்டிருந்த பந்தல் வரை பரவியது. ஊர் தலைவர் காதில் கிசுகிசுக்கப்பட்டது. தலைவரின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே... எரிமலை வெடித்து சிதறியது கண்களில்!
உள்ளே -
'என்னாடி இது?' என்று கேட்டு, வாயில் கையை வைத்து பொத்தியபடி, பெண்கள் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்தனர்.
பின், அவர்கள் எல்லாருடைய பார்வையும், திருமேனியை ஒரு சேர மொய்த்தது.
யாராலும் எதுவும் பேச முடியவில்லை; பெரும் அதிர்ச்சி அவர்களை தாக்கியிருந்தது.
சில நிமிடங்களுக்கு முன், திருமேனி சொன்ன அந்த வார்த்தைகள் தான், அத்தனை பேரின் மேனியிலும் தீயை அள்ளி கொட்டியிருந்தது.
'என்னாடி அநியாயம் இது... இவளுக்கு பைத்தியம் ஏதாவது புடிச்சிட்டா?'
'ஆமா... பைத்தியம் தான் புடிச்சிட்டு; இல்லாட்டி புருஷனை பறி கொடுத்தவ எவளாவது இப்படி சொல்வாளா?'
'புருஷன் மேல பைத்தியமா இருக்க வேண்டியது தான்; அதுக்காக இப்படியா சொல்றது. பொம்பளை தானா இவ...'
'கோவிலே இடிஞ்சிடுச்சாம்; கொடி மரம் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன...'
'புருஷன் போனப்புறமும் தாலிய கழட்டி, பால்ல போட மாட்டேங்கறாளே... சாகற வரைக்கும் என் புருஷன் கட்டின தாலிய கழட்ட மாட்டேன்னு சொல்றாளே...'
'ஊரு உருப்பட்ட மாதிரி தான்...'
இப்படி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்த போது, ''அவ அவ புருஷன் இருக்கும் போதே, தாலிய கழட்டிப் போட்டுட்டு கெடக்காளுவ,'' என்றாள், கஸ்துாரி.
''ஆமா... நீதான் கண்டே,'' என்றாள் ஒருத்தி.
''காணாம என்னடி... பெரிய வூட்டு பவுசு உனக்குத் தெரியுமா? சகுந்தலா கெழவி வாழாது வாழ்ந்தவ... பழுத்த சொமங்கலின்னு, ஊருக்குள்ள விதை எடுத்துக் கொடுக்கிறதிலேர்ந்து, விவாகத்துல தாலி எடுத்துக் கொடுக்கறது வரை, அவளை கூப்பிட்டுத் தான் முன்னாடி நிறுத்தறாங்க. ஆனா, அவ கதை தெரியுமா? ராத்திரியில தாலிய கழட்டி, ஆணியில மாட்டிட்டு துாங்குவாளாம்,'' சொல்லிவிட்டு, காவிப் பல் தெரிய, 'கபகப'வென சிரித்தாள், கஸ்தூரி.
''ம்கும்... அதை மட்டும் தானா நீ கண்டே... சுண்ணாம்புக்காரன் பொண்டாட்டி ஜோதி, போன வாரம் என்ன பண்ணினா தெரியுமா... புருஷனோட போட்ட சண்டையில, தாலிய கயிட்டி அவன் மூஞ்சியிலேயே வீசி புட்டா,'' என்றாள், மற்றொருத்தி.
உடனே, திருமேனியைப் பற்றி பேச ஆரம்பித்தனர்...
'அப்படிப் பட்டவளுங்க இருக்கற ஊர்ல, இவ என்னடான்னா, உயிர் போற வரைக்கும் புருஷன் கட்டின தாலிய கயிட்ட மாட்டேன்னு ஒரநாட்டியம் புடிச்சி ஒக்காந்திருக்கா...'
'புருஷன் மேல அவளுக்கு அம்புட்டு ஆசை; என்ன செய்ய... விதி கொண்டுக்கிட்டுப் போயிட்டு...'
'எமன்கிட்ட போராடி புருஷன் உயிரை மீட்டாளாம், சாவித்திரி. அவளை மாதிரி தானே இவளும், நாலு வருஷமா போராடுனா. புண்ணியம் இல்லயே... போயி சேந்துட்டானே...'
'கொஞ்ச நஞ்ச பாடா பட்டா... தஞ்சாவூர்ல அவன் பொழைக்க மாட்டான்னு கைய விரிச்சிட்டாங்க. ஊரே, 'மனசை தேத்திக்க; அதான், உன் தலையில விதிச்சது'ன்னு ஆறுதல் சொல்லியும் கேட்டாளா... உயிரை கொடுத்தாவது, என் புருஷன காப்பாத்திடுவேன்னு மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டுப் போனா. 'ப்ரைவேட்' ஆசுபத்திரியில வச்சு ஒத்தையாளாவே பாத்தாளே...
'இருந்த கொஞ்ச நஞ்ச, நெலம் நீச்சயும் வித்தா. மிஞ்சிக் கிடந்தது இந்த வீடு மட்டும் தான். அதையும் வித்து வைத்தியம் பார்த்தா. எல்லாத்தையும் முழுங்கிட்டு அவன் போயி சேந்துட்டான். முன்னாடியே போக வேண்டியவன்; இப்ப போயிருக்கான். நாலு வருஷம் வாழ்ந்தான் பாரு அதான், திருமேனிக்கு லாபம்...'
'அதனால தான், எல்லாத்தையும் இழந்துட்டமே, தாலியையாவது கழுத்துல போட்டுப்போம்ன்னு நினைக்கிறா போலிருக்கு...'
'யாருக்குத் தான் தாலிய கழட்டிப் போட மனசு வரும்? ஆனா, சாஸ்திரம்ன்னு ஒண்ணு இருக்குல்ல... புருஷன் போன பின்னாடி, அவன் கட்டின தாலிய கழட்டுறது தானே அவனுக்கு செய்ற மரியாதை. காலங்காலமா இருக்கற பழக்கத்தை மாத்த நாம யாரு...'
இப்படி ஆளாளுக்கு சலசலத்துக் கொண்டிருந்தனர். அதில் சில பெண்கள், 'இந்தா செல்லாயி... நீ ஊர்ல பெரியவ. நீ அவளுக்கு எடுத்து சொல்லு. பொம்மைய புடுங்கினா அழுது ஆர்ப்பாட்டம் பண்ற கொழந்தை கணக்காத் தான், இப்ப அவ மனசு இருக்கும். பக்குவமா பேசி, தாலிய கழட்டி பால்ல போட சொல்லு...' என்று செல்லாயியை உந்தித் தள்ளினர்.
மடித்து வைத்ததைப் போன்ற தன் உடலை, தட்டுத் தடுமாறி துாக்கியபடி, திருமேனியின் அருகே நகர்ந்தாள், செல்லாயி கிழவி.
நடுநாயகமாக அமர்ந்திருந்த திருமேனியை சுற்றி அமர்ந்திருந்த பெண்கள், அவளை ஏதோ அதிசயம் போல், மோவாயில் கையை வைத்து, பார்த்துக் கொண்டிருந்தனர்.
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த திருமேனியின் அருகே வந்த செல்லாயி, அவளுடைய தாடையைப் பற்றி உயர்த்தினாள்.
''இந்தா புள்ள... நீ செய்றது சரியில்ல; புருஷனை பறி கொடுத்தவ, தாலிய கழட்டணும்ங்கறது உனக்குத் தெரியாதா? கழட்ட மனசு வராது தான்; நீ கழட்டாதே. நான் கழட்டி பால்ல போடறேன்,'' என, அவளுடைய கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றில் கை வைக்கப் போனாள், செல்லாயி.
அடுத்த கணம், நெருப்பைத் தொட்டதைப் போல், செல்லாயி கையை தட்டிவிட்ட திருமேனி, ''என்னால கழட்ட முடியாது,'' உறுதியாக சொன்னாள்.
அப்போது, ஒருவன் உள்ளே வந்தான்.
''செல்லாயி... உன்னை தலைவரு கூப்பிடுறாரு,'' என்றான்.
''பிரச்னையை பெரிசாக்காதே... பாரு தலைவரு கூப்பிடறாரு,'' என்று சொன்னவள், தட்டுத் தடுமாறி பந்தலுக்கு வந்தாள்.
ஆண்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது, பந்தல். வெள்ளை வேட்டி கும்பலில், நடுநாயகமாக அமர்ந்திருந்த ஊர் தலைவரின் எதிரே வந்து நின்றாள், செல்லாயி.
''தம்பி... கூப்பிட்டிங்களாமே,'' என்றாள்.
''ஆமா... உள்ள என்ன, என்னமோ பேச்சு ஓடிக்கிட்டிருக்கு? அந்த திருமேனி என்னமோ சொல்றாளாமே...'' என்றார்.
''ஆமா தம்பி... ஐம்பது வயசு ஆயிட்டு; ஆனாலும் பக்குவம் பத்தல. பொம்பளைக்கு மனசு வராது தான். என்னா பண்றது... நம்ம தல விதின்னு நினைக்கணும்.
''ஐம்பது வயசுல அறுக்கறதுக்கே இவ்வளவு யோசிக்கிறா. நான், ஆறே மாசத்துல அறுத்துப் போட்டுட்டு, எம்பது வயசுக்கும் கெடக்கறேன்,'' என்றவள், கல்யாணமான ஆறு மாசத்தில் இறந்த போன புருஷனை, இப்பொழுது நினைத்து, பழுதடைந்த கண்களில் கண்ணீர் பெருக்கினாள், செல்லாயி.
''இந்தா... இன்னைய கதைய பேசு. அவ என்ன தான் சொல்றா?''
''அதான் சொல்றேன்ல. அறுக்க மாட்டாளாம்,'' என்றாள், செல்லாயி.
''சரி... நான் பேசிக்கறேன்,'' என்று சொல்லி, 'சட்'டென எழுந்த ஊர் தலைவர், தன் நரைத்த மீசையை முறுக்கியபடி, கருமாதி கூடத்திற்கு வந்தார்.
கூடம் நிறைய அமர்ந்திருந்த பெண்கள், அவரைக் கண்டதும் எழுந்து கொண்டனர். சிலர் நகர்ந்து அமர்ந்தனர். திருமேனியிடம் வந்தார்.
திருமணமாகி வந்த நாளன்று இருந்ததை போன்றே திருமேனி இப்போதும் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது.
'ஐயோ... பாவம்' என்ற கழிவிரக்கம் எல்லாரையும் போல், அவர் மனதிலும் ஓடத்தான் செய்தது.
ஆனாலும், விட்டுக் கொடுக்க முடியாத விவகாரமாக அல்லவா இருக்கிறது!
அவரைக் கண்டதும் அவளும், மற்ற பெண்களைப் போல் எழ முயற்சித்தாள்.
இடது கை நீட்டி தடுத்தவர், ''இந்தா புள்ள... இந்த மரியாதையை எல்லாம் இப்ப நான் எதிர்ப்பாக்கல. நீ சடங்கு, சம்பிரதாயத்துக்கு கட்டுப்பட்டா போதும். எங்களுக்கு மட்டும் என்ன, உன்னை அறுத்து போட்டுப் பார்க்க ஆசையா? சடங்குன்னு ஒண்ணு இருக்குல்ல...
''நீ இப்படி செய்தா, நாளைக்கு மத்த பொம்பளைங்களும் இதையே செய்ய ஆரம்பிச்சுடுவாளுங்க. ராசா பொண்டாட்டிக்கும், நடவு நடற பொம்பளைக்கும் இந்த விஷயத்துல ஒரே நீதி தான். புருஷன் போன பொறவும், நீ தாலிய கழட்டாம திரிஞ்சா, அப்புறம், கட்டுக் கழுத்திக்கும், அறுத்துப் போனவளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? அதனால, பேசாம தாலிய கழட்டி, பால்ல போடு,'' பொறுமையாக சொன்னார்.
அவர், அமைதியாகத் தான் சொன்னார். ஆனால், அதில் அதிகாரம் கலந்திருந்தது. ஊருக்குள் புது கலாசாரம் முளைவிட்டு விடக் கூடாதே என்ற பதற்றம் இருந்தது.
''மன்னிக்கணுங்க ஐயா... இது, என் புருஷன் கட்டுன தாலி; அதை போட்டுக்கவும், அறுக்கவும் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. அதனால, இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்,'' என்றாள், பட்டென!
ஊரே மரியாதைக் கொடுக்கும் அவருக்கு, அவளின் இந்த பதில், 'பளார்' என, கன்னத்தில் அறைந்தது போன்று இருந்தது.
சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தவர், பின், கோபத்துடன், ''இதோ பார்... சாஸ்திர, சம்பிரதாயத்தை மீறி, நீ இந்த ஊருக்குள்ள இருக்க முடியாது. அப்பறம், உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கற மாதிரி ஆயிடும்.
''எங்க பேச்சுக்கு கட்டுப்பட்டா, புருஷன், புள்ளை இல்லாத நீ, இந்த ஊர்ல இருக்கலாம்; இல்ல, காலையில விடியறதுக்குள்ள நீ ஊரை விட்டுப் போயிடணும்,'' என்று சொல்லி விட்டு, 'விருட்'டென அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார், ஊர் தலைவர்.
பெண்கள் கண்கள் கலங்க, பெரிதாக ஒப்பாரி வைத்து அழுது, அவளை வழிக்கு கொண்டு வரப் பார்த்தனர்.
திருமேனியிடம் எதுவும் நடக்கவில்லை.
ஊர் எல்லையைத் தாண்டிவிட்டாள், திருமேனி. தான் வாக்கப்பட்டு வந்த ஊரை நின்று, திரும்பி ஒரு நிமிடம் பார்த்தாள். அழுகை பொங்கி வந்தது. கணவன் பொன்னம்பலத்துடன் வாய்க்கா, வரப்பு என, உடன் சேர்ந்து உழைத்த ஊரை, ஒரு நிமிடம் கண்ணுக்குள் ஆழமாக வாங்கி, இமைகளை மூடியதில், கண்ணீர் கன்னத்தில் கரை புரண்டு ஓடியது.
பொன்னம்பலம் இறந்த போது கூட, அவள் அழவில்லை. அவனுடைய மரணத்தை, நாலு வருஷமாக அணு அணுவாக அருகேயிருந்து பார்த்தவள் தானே. அப்பொழுதே அழுது தீர்த்ததாலோ என்னவோ, இறுதியாக இருந்த ஒரு சொட்டு கண்ணீரும் உதிர மறுத்துவிட்டது.
இரண்டு கிட்னியும் பழுதுபட்டு, வைத்தியம் வைத்தியம் என போராடி, இறுதியில் போய் சேர்ந்து விட்டான்.
இப்போது ஊரை விட்டுப் போகிறாள். எங்கே போக, அவளுக்கே தெரியவில்லை.
எல்லையம்மன் கோவில் படியில், தளர்ச்சியாய் உட்கார்ந்து விட்டாள், திருமேனி. கையில் ஒரு துணிப் பை. அவ்வளவு தான் அவளுடைய சொத்து.
கோவில் துாணில் சாய்ந்து அமர்ந்தவள், தான் வைத்திருந்த துணிப் பையிலிருந்து, பிரேம் போட்ட புகைப்படத்தை எடுத்தாள்.
புகைப்படத்தில், 'பளிச்'சென சிரித்தபடி இருந்தான், பொன்னம்பலம்.
ஆசையாக, அவன் முகத்தை கையால் தடவியபடி, 'தாலிய கழட்டி பால்ல போட எனக்கும் ஆசை தான். ஆனா, உன் மானம், மரியாதை போயிடுமே... உன் வைத்திய செலவுக்கு கடைசியா விற்க, கையில் எதுவுமே இல்லாத நிலையில, அந்த தாலிய கழட்டி வித்துத் தானே உனக்கு வைத்தியம் பார்த்தேன்...
'அது உனக்குக் கூடத் தெரியாதே... தாலி கயித்தை வெளியில எடுத்தா, அதுல தாலி இல்லாதது ஊருக்குத் தெரிஞ்சு, உன் மானம் போயிடுமே. 'பாரு, தாலியை கூட விட்டு வைக்காம போயிட்டானே'ன்னு, உன்னை ஊர் துாற்றுமே...
'உன்னையப் பத்தி பேசும் போதெல்லாம், தாலியைப் பத்தியும் பேசுமேய்யா. அந்த பழி உனக்கு வந்துடக் கூடாதுன்னு தான், தாலிய கழட்டி, பால்ல போட மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டேன்.
'என்னை சம்பிரதாயத்தை மீறினவளா, ஏதோ புரட்சி பண்ணினவளா ஆளாளுக்கு பேசி, ஊரை வுட்டே ஒதுக்கி வச்சுட்டாங்க. ஊரை விட்டு ஒதுக்கினாலும் பரவாயில்ல; உன் பேரு ஊருக்குள்ள கெட்டுப் போகாம பாத்துக்கிட்டேனே அது போதும்...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், பெரிதாக ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினாள், திருமேனி!
ஆர். சுமதி