sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வரும், போகும்!

/

வரும், போகும்!

வரும், போகும்!

வரும், போகும்!


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என்னங்க உங்க அம்மாவை பார்க்க, தினமும் யாரோ ஒரு பெண்மனி வீட்டுக்கு வர்றாங்க... அவங்க கிட்ட ஏதோ ரகசியமா பேசிட்டு இருக்காங்க, உங்க அம்மா,'' என, மொபைலில், கணவன் அரவிந்தனிடம் கூறினாள், சித்ரா.

''என்ன பேசறாங்க? அவங்க யார்ன்னு கேட்டியா?''

''நான் கேக்கல. உங்க அம்மாவே என்கிட்ட சொன்னாங்க. அவங்களோட சின்ன வயது தோழியாம். அம்மா கூட டீச்சர் வேலை பார்த்தவங்களாம். அடுத்த தெருவில் புதிதாக குடி வந்திருக்காங்களாம்.''

''சரி, சரி விடு, சித்ரா. அவங்க பேசட்டும். வயசானவங்க பொழுது போகணுமே,'' எனக் கூறி, போனை வைத்தான், அரவிந்தன்.

சித்ராவின் கணவன் அரவிந்தன், பெங்களூரில் பணிபுரிகிறான். சித்ராவோ, வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தின் கீழ் பணிபுரிபவள். எட்டு மற்றும் 10 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, காலையில், 'டிபன்' செய்து, 'கேரியரில் பேக்' செய்வாள்.

குழந்தைகள் இருவருக்கும் தலைவாரி பின்னி, அவர்கள் புறப்பட்டதும், மாமியார் - மாமனாருக்கு கஞ்சி போட்டு வைத்து, பாதி சமையலை முடிப்பாள். அதன் பின், அவளும் தயார் ஆகி, கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தால், மத்தியம், 2:00 மணிக்கு தான் அறையை விட்டு வெளியில் வருவாள்.

மாமியார் மரகதம், மீதி சமையலை முடித்து, கணவனுக்கு பரிமாறி, தானும் சாப்பிட்டு, அவர்கள் அறையில், 'டிவி சீரியல்' பார்க்க போய் விடுவார்.

சித்ராவும் அரக்க பரக்க சாப்பிட்டு, சமையல் பாத்திரங்களை, 'சிங்கில்' போட்டு, கேஸ் துடைத்து விட்டு, ஆபீஸ் போன் அழைப்புகளை, 'அட்டென்ட்' செய்ய, அவள் அறைக்கு திரும்பவும் புகுந்து விடுவாள்.

இரண்டு மூன்று நாட்களாக இந்த பெண்மணியின் வருகை, சித்ராவுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் பேச்சும், வருகையும் இவள் வேலைக்கு தடங்கலாக இருந்தது. மறுநாள் மீண்டும், அரவிந்தனிடம் போனில் சொல்லியே விட்டாள்.

''அவங்க பேசட்டும். அதுக்காக அந்த அம்மா வந்து, 'இந்த காலத்து பொண்ணுங்க, 'ஆன்லைன்'ல வேண்டாத, விதவிதமான பொருட்களை வாங்கி குவிக்கிறாங்க. பணத்தின் அருமை தெரியலை...' அப்படி இப்படின்னு, என் காதுப்பட பேசினா நல்லாவாயிருக்கு. நேற்று குழந்தைகளுக்கு, ரெண்டு ஷூ, 'ஆன்லைனில் ஆர்டர்' செய்தேன். அது வந்தததைப் பார்த்து தான் இந்த பேச்சு.''

''அப்படியா? வம்பு தும்பு பேசுவதெல்லாம் அம்மாவுக்கு பிடிக்காதே, சித்ரா.''

''ஆமாங்க. ஆனா, வந்த அந்த தோழி பேசினா, அம்மா பாவம் என்ன செய்வா?''

''இரு இரு நான் அம்மாக்கிட்டே நாளைக்கு போன் போட்டு சொல்றேன். 'யாரும்மா அது தினமும் அரட்டை அடிக்க வரும், உன் புது தோழின்னு. அப்பாக்கும் உடம்பு சரியில்லை, சித்ராக்கும் ஆபீஸ் வேலை இருக்கு. இனி, உன் தோழி, அடிக்கடி நம் வீட்டுக்கு வரவேண்டாம்மா...' என சொல்லிடறேன். அம்மா புரிஞ்சுப்பா,'' என சித்ராவிடம் சொல்லி, போனை, 'கட்' செய்த அரவிந்தனுக்கு அலுப்பாக இருந்தது.

பத்து ஆண்டு ஆபீஸ் சர்வீஸை மதிக்காத, 'மேனேஜ்மென்ட்' திடீரென, 20 பேரை வேலையிலிருந்து எடுத்து விட்டது. அதில் ஒருவன், அரவிந்தன்.

வேலை போனதும் திடீரென நிலை தடுமாறி என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறு வேலைக்கு, 'அப்ளிகேஷன்' போட்டும், ஆறு மாதமாக எந்த வேலையும் கிடைக்காமல், மொத்த குடும்பமும் திணறியது.

இதன் நடுவில் அப்பாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போக, ஆஸ்பிட்டல், மருந்து என, கையிருப்பு பணம் செலவாக திண்டாடி விட்டான், அரவிந்தன். சித்ராவிற்கு வரும் சம்பளத்தில் குடும்பம் ஏதோ கொஞ்சம் தள்ளாடாமல் ஓடியது.

அம்மா மரகதத்தின் வேண்டுதலுக்கு, ஆண்டவன் கண் திறந்தான். போன மாதம் தான் அரவிந்தனுக்கு, புது வேலை கிடைத்தது; ஆனால், பெங்களூரில். வேலைக்கு சேர்ந்த புதிது, வேலை, பாஷை, மனிதர்கள், அறை, சாப்பாடு மற்றும் சீதோஷ்ண நிலை என, அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இதன் நடுவில் ஆபீஸில் வேலை டென்ஷன். வீட்டிற்கு போன் போட்டால், இந்த மாதிரி புகார்.

மருமகள் சித்ரா மற்றும் பேத்திகளுடன் மிகவும் அன்பாக இருப்பவர், அம்மா. 10 ஆண்டுகள் ஒரு தனியார் பள்ளியில், ஸ்கூல் டீச்சராக இருந்தவர். பொறுமை, நிதானம், சட்டென யாரிடமும் கோபமாக பேசாதவர். ரொம்ப பெரிய ஆசையெல்லாம் இல்லாதவர்.

திடீரென இன்று காலை போன் செய்து, ''அரவிந்தா எனக்கு மாசா மாசம், ஐந்தாயிரம் ரூபாய் அனுப்ப முடியுமா?'' என, கேட்டார், மரகதம்.

''ஐந்தாயிரமா... எதுக்கும்மா? உனக்கென்ன செலவு? உனக்கு என்ன வேண்டுமோ கேள், நான் வாங்கி தரேன்.''

''இல்லப்பா எனக்கு வேணுங்கிறதை நான் வாங்கிக்கணும் அவ்வளவு தான்...'' என கூறி, போனை வைத்து விட்டார்.

'புரிந்து விட்டது. புதிதாக உறவு கொண்டாடி வீட்டிற்கு வரும், அந்த தோழி என்ன சொல்லி அம்மா மனசில் ஆசையை வளர்த்தாளோ தெரியலையே!

'புடவை சீட்டு, நகை சீட்டு போடு என, சொல்லியிருப்பாளோ? உனக்குன்னு அவசர தேவைக்கு கைவசம் பணம் வெச்சுக்கோ மரகதம் என்றும் சொல்லியிருப்பா... அதுவும், மாசா மாசம் ஐயாயிரம் கேட்கிறாங்களே, அம்மா. கண்டிப்பாக இது, பாத்திர சீட்டோ, புடவை சீட்டோ, இல்லை நகை சீட்டு தான், சந்தேகமில்லை.

'வெளியூரிலிருக்கும் தங்கை பிருந்தாவின் பெண்ணுக்கு, 10 வயதாகிறது. அவள், பருவ மெய்தும் சமயம். மாமா - மாமி சீர் செய்ய வேண்டும். பாட்டி - தாத்தாவாக, அம்மாவுக்கும் செலவு இருக்குமே! அதற்காக சீட்டு போட்டு நகை, பட்டு புடவை வாங்க போகிறாரோ?' என, நினைத்துக் கொண்டான்.

மறுநாள், சித்ராவிடமிருந்து போன் வந்தது.

''நான் நினைச்சது சரிதாங்க.''

''என்ன நினைச்சே, சித்ரா, விபரமா சொல்லு.''

''அதாங்க தினமும் வீட்டுக்கு வரும் உங்க அம்மாவின் திடீர் தோழி, இன்னைக்கு அவங்க வீட்டுக்காரரையும் கூட்டிட்டு, நம்ப வீட்டுக்கு வந்துட்டா. எனக்கோ, 'ஆபீஸ் மீட்டிங்!' அம்மா எனக்கு அவரை அறிமுகப்படுத்தினா. நான் ஒரு, 'ஹாய்' சொல்லிட்டு, அறைக்குள் போயிட்டேன். நீங்க போன் போட்டு அம்மாகிட்ட பேசுறதாக சொன்னீங்களே, பேசினீங்களா?''

''இல்லை, சித்ரா. பேசணும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள அம்மாவே நேத்து எனக்கு போன் போட்டு, 'எனக்கு மாசா மாசம் ஐந்தாயிரம் ரூபாய் வேணும்'ன்னு கேட்டாங்க. 'எதுக்கும்மா? உனக்கு அவ்வளவு பணம்'ன்னு கேட்டா, 'எனக்கு இஷ்டப்பட்டதை வாங்கணும்'ன்னு சொல்றாங்க. அந்த புது தோழி தான், ஏதோ ஓதிவிட்டு இருக்கணும்.''

''ஆமாங்க. அது தான் எனக்கும் சந்தேகம். அந்த தோழியின் கணவர், எங்கோ, ஏதோ கடன் வாங்கி, இ.எம்.ஐ., கட்ட முடியாம பண முடை போல. அதான் அம்மாவிடம் வந்து நேரடியாக உதவி கேட்டிருக்கார்.

''நம்மிடம் சொன்னால், நாம பணம் கொடுக்க ஒத்துக் கொள்ள மாட்டோம். அம்மாவுக்கு உதவி செய்யும் இளகிய மனசு, அதான் உங்களிடம் பணம் கேட்டிருக்கா. அம்மாவுக்கு பணம் தேவைன்னா நாம கொடுக்கலாம். ஆனா, யாரோ பட்ட கடனுக்கு, நாம கொடுக்க கூடாதுங்க. நீங்க என்ன நினைக்கறீங்க... அம்மா கேட்ட பணத்தை அனுப்ப போறீங்களா?''

''அம்மா பாவம், சித்ரா,'' என, வாய் சொன்னாலும், அரவிந்தனின் மனம் பின்னோக்கி ஓடியது.

'இதுவரை அம்மா, என்னிடம் எதையும் கேட்டதில்லை. அப்பாவின் ஓய்வூதிய பணம் முழுவதையும் கேட்காமலேயே, வீடு வாங்கும் சமயம் எங்களிடம் கொடுத்து விட்டாள். இதுவரை என்னிடமோ, சித்ராவிடமோ புடவை, நகை, பணம் என, எதுவும் கேட்டதில்லை, அம்மா.

'நான் வாங்கி கொடுத்தாலும், கண்டிப்புடன் மறுத்து விடுவார். 'போதும்பா வீணாக புடவையில பணம் போடாதே. என்கிட்டே இருப்பது போதும், அரவிந்தா. வளரும் குழந்தைகளுக்கு வாங்கி கொடு. சித்ராவுக்கு எது பிடிக்குமோ அது வாங்கி கொடு...' என, இங்கிதமாக கூறிய அம்மாவின் மனதை, இன்று வந்த அந்த பெண்மணி மாற்றி விட்டாளோ...' என, நினைத்து கொண்டான்.

''என்னங்க, என்ன ஒண்ணும் பேசலை. என்ன யோசனை? அம்மாவுக்கு பணம் அனுப்ப போறீங்களா, இல்லையா?''

''இரண்டு நாள் ஆபீஸ், 'லீவு' வருது, சித்ரா. நான் எப்படியும் சென்னைக்கு உங்க எல்லாரையும் பார்க்க வரப் போறேன். அப்பா, அம்மாவோட நேரா பேசி, அம்மா கேட்ட பணத்தை கொடுத்து விடலாம்ன்னு இருக்கிறேன், சித்ரா.

''அம்மா, நமக்கு கொடுத்த, பத்து லட்ச ரூபாயை கொடுக்காமல் வங்கியில் வைத்திருந்தால், மாசம் வட்டியே, ஆறாயிரம் ரூபாய் வந்திருக்கும். ஆனா, தன் தோழிக்கு கடனாக கொடுக்கிறேன், உதவி செய்கிறேன் என்றால், பணம் கொடுக்க மாட்டேன். வந்து பேசிக்கிறேன், சித்ரா. போனை வைக்கட்டுமா,'' என்றான், அரவிந்தன்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகனிடம், ''அரவிந்தா, பணத்தை வங்கியில் இருந்து, 'டிரா' செஞ்சுட்டியாப்பா. ஏன்னா? என் தோழி இப்போ வந்துடுவா. 'செக்' கொடுத்தா கூட போதும்,'' என ஆரம்பித்தாள், மரகதம்.

''அம்மா... உங்கிட்டே கொஞ்சம் பேசலாமா?''

''என்னப்பா?''

''இப்போ எதுக்கும்மா உனக்கு அவ்வளவு பணம்? அதுவும் மாசா மாசம் கேக்குறே. நகை சீட்டு கட்டப் போறீங்களா? ஏமாற்றுபவர்கள் அதிகம். உன் தோழியின் கஷ்டத்திற்கு உதவ போறீயா? பணத்தால் பகை வரும்மா. பணம் கொடுத்து சேவை செய்வது, ப்ளீஸ் எதுவும் வேண்டாம்மா. கண்டிப்பா பணம், ஐந்தாயிரம் உனக்கு கொடுக்கிறேன்மா.''

''இனி நீ கஷ்டப்படக் கூடாதுன்னு தான் பணம் கேட்கிறேன், அரவிந்தா.''

''புரியலையேம்மா.''

''அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத சமயம் நீ, எதுவும் யோசிக்காமல் உன் சேமிப்பெல்லாம் ஆஸ்பிட்டல் செலவிற்கு கொடுத்துட்டே. எங்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லாததால், உனக்கு எவ்வளவு பணம் கஷ்டம் ஏற்பட்டது.

''இந்த காலகட்டத்தில், வேலை எப்ப போகும், நோய் எப்போ வரும் என, யாருக்கும் தெரியாது. வேலை பளு, பண பற்றாக்குறையால், வயதான, நோய் தாக்கின பெற்றோர்களை பராமரிப்பதும் இக்கால பிள்ளைகளுக்கு சிறிது சிரமம் தான். ஆனா, அதை எதிர்கொள்ளும் பக்குவமும், முன் எச்சரிக்கையும் வேணும்.

''பேச்சு வாக்கில், என் தோழியின் கணவர், எல்.ஐ.சி.,யில் இருப்பதை அறிந்தேன். அவரும் நம் வீட்டிற்கு வந்து, வயதான பெற்றோர்களின் மருத்துவ காப்பீடு பற்றி, விலாவாரியாக சொன்னார். ஒரே சமயம், 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பது உனக்கு சிரமம். மாசா மாசம், ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால், அவ்வளவாக உன் கையை கடிக்காது.

''நல்லதே நினைப்போம், அரவிந்தா. நோயோ, பண கஷ்டமோ யாருக்கும் வர வேண்டாம். வரும்முன் காப்பது நல்லதல்லவா. மருத்துவ காப்பீடும், சேமிப்பும், மருத்துவ சேவையை விட சிறந்தது, அரவிந்தா,'' என்று, அம்மா பேசப் பேச ஆச்சர்யமாக பார்த்தான், அரவிந்தன்.

'எவ்ளோ முன்னெச்சரிக்கையா யோசிச்சிருக்கேம்மா. ஆசிரியராச்சேம்மா, நீ...' என, அம்மாவை நினைத்து, சந்தோஷத்தில் கண்களில் நீர் தளும்பியது, அரவிந்தனுக்கு.

ராதா நரசிம்மன்






      Dinamalar
      Follow us