
கடந்த, 2001ல், தமிழக சட்டசபை தேர்தலில் வென்று, தமிழக முதல்வரானார், ஜெயலலிதா. 2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை, அ.தி.மு.க.,
இதுகுறித்து, பி.பி.சி., சார்பாக, பிரபல பத்திரிகையாளர் கரன் தாப்பர், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுத்தார்.
அப்போது, 'உங்களை மக்கள் தவறாக புரிந்து கொண்டனரா அல்லது நீங்கள் தவறு செய்தீர்களா? உங்கள் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே... இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?' என்று கேட்டார், கரன் தாப்பர்.
'இதை நான் அவமானகரமான விஷயமாக கருதவில்லை...' என்றார், ஜெயலலிதா.
'உங்களைப் பற்றி பத்திரிகைகள் உருவாக்கிய தோற்றம் தான், உங்களுக்கு எதிராக இந்த முறை வேலை செய்திருக்கும் என, நம்புகின்றனர், மக்கள். உங்களை ஜனநாயகம் அற்றவராக, பகுத்தறிவற்றவராக, வன்மம் படைத்தவராக, பொறுப்பற்றவராக கூட பேசியிருக்கின்றனர். உங்களை, அவர்கள் தவறாக புரிந்து கொண்டனரா அல்லது உண்மையிலேயே நீங்கள் தவறு செய்தீர்களா?' என்று கேட்டார், பேட்டியாளர்.
'நான் பொறுப்பற்றவர் இல்லை. ஆனால், என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் எல்லாரும், எல்லா நேரமும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப் போனால், அரசியலுக்கு நான் சற்றும் லாயக்கு இல்லை. இந்த அரசியல் ஆட்டத்தின் விதிமுறையில், கொஞ்சம் நடிப்பும் தேவைப்படுகிறது. திரைப்படங்களில் கேமராவுக்கு முன் நடித்துள்ளேன், நான். ஆனால், நிஜ வாழ்க்கையில் நடிப்புத்திறன் அற்றவள்...' என்று, அந்த பேட்டியில் கூறினார், ஜெயலலிதா.
****
தன் குருவான, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி, பழம்பெரும் நகைச்சுவை நடிகர், காக்கா ராதாகிருஷ்ணன், ஒரு பேட்டியில் கூறியது:
எனக்கு, 5 வயது இருக்கும் போது, என் அப்பா இறந்து விட்டார். சொந்தக்காரர் ஒருவர், மதுரை, ஸ்ரீபால கான சபாவில் சேர்த்துவிட்டார். கட்டுப்பாடுமிக்க, சபா அது.
அதிகாலை எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு, பாடம் படிக்கணும். நாடக வசனங்கள் எழுதியிருக்கும் பெரிய நோட்டை வாங்கி வந்து, வசனங்களை மனப்பாடம் செய்யணும். பின்னர் பத்திரமாக நோட்டை திருப்பி கொடுக்கணும். அந்த நோட்டை வாங்குவதில் எனக்கும், சிவாஜி கணேசனுக்கும் எப்போதும் போட்டி இருக்கும்.
இந்த சபாவில் தான் முதன் முதலாக, கலைவாணரை சந்தித்தேன். அவர் எல்லாருக்கும் ஒரு பெயர் வைத்திருப்பார். சபா உரிமையாளரான, டி.பி.பொன்னுசாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' என்று பெயர் வைத்திருந்தார்.
ராமசாமிக்கு, 'புளிமூட்டை'ன்னு பெயர் வைத்ததும், அவர் தான். மேற்படி இரண்டு பெயர்களுமே அவர்களுக்கு, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை என்றும், புளிமூட்டை ராமசாமி என்றும் பின்னர் நிரந்தரமாக நிலைத்து விட்டது.
சபாவிற்குள் அவர் வந்துவிட்டால், கலகலப்பாக இருக்கும். அவர் வருத்தப்பட்டு பார்த்ததே இல்லை. எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருப்பார். எல்லாரையும் சிரிக்க வைப்பார். யாரையும் கஷ்டப்படுத்தியது இல்லை.
'எவனாவது அடிக்க வரும்போது, நீ சிரிச்சா, அடிக்க வர்றவன் அசந்து போவான்...' என்று சொல்வார்.
இதுபோன்று பலவாறாக, கலைவாணரின் புகழை அடுக்கிக்கொண்டே சென்றார், காக்கா ராதாகிருஷ்ணன்.
*****
- நடுத்தெரு நாராயணன்