sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவேன்! (10)

/

விண்ணையும் தொடுவேன்! (10)

விண்ணையும் தொடுவேன்! (10)

விண்ணையும் தொடுவேன்! (10)


PUBLISHED ON : மே 11, 2025

Google News

PUBLISHED ON : மே 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும், கயல்விழியின் அம்மாவை, யாரோ, கொன்று கிணற்றில் துாக்கிப் போட்டிருந்தனர். விஷயம் அறிந்த டி.எஸ்.பி., ஈஸ்வரியும், புகழேந்தியும், அவரது இறுதி சடங்கை செய்தனர். இதையறியும், முதல்வர், புகழேந்தியை போனில் அழைத்து பாராட்டினார்.

பத்திரிகையாளர்களிடம், கயல்விழி மற்றும் அவளது பெற்றோர் பற்றி சுருக்கமாக கூறினான், புகழேந்தி. கயல்விழி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அங்கு படையெடுத்து, அவளது முகம் மறைக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டன, ஊடகங்கள். இது, விவாத பொருளாக மாற, சுபாங்கியின் அப்பா, அவளுக்கு போன் செய்து, 'இதெல்லாம் ஒரு கலெக்டர் செய்யலாமா?' என, கோபமாக கேட்கிறார்.

வீட்டுக்கு சாப்பிட வரும் புகழேந்தியிடம், தன் அப்பா கோபப்பட்டதையும், கலெக்டருக்கு உரிய வேலையை மட்டும் பார்க்க சொன்னதாகவும் கூறினாள், சுபாங்கி. -

''என்ன பேச்சு பேசறீங்க? அப்பாவையா இப்படி பேசுறீங்க. எவ்வளவு தைரியம் உங்களுக்கு. அப்பா நினைச்சா உங்களை எதுக்கும் உபயோகமில்லாத, 'போஸ்டிங்'ல போட்டு, மூலைல உட்கார வச்சிடுவாருன்னு தெரியுமில்ல!''

''முதல்ல அதைச் செய்ய சொல்லு. நிம்மதியா எழுத ஆரம்பிப்பேன்.''

அவள் அதற்கு பதில் சொல்ல வாயெடுத்த போது, அவனது மொபைல் போன் ஒலித்தது.

''சொல்லு, பிரபா. இந்த சந்தர்ப்பத்துல நீ, இங்க வர்றது எனக்கு ரொம்ப பெரிய பலம். நேரா வீட்டுக்கு வந்துடு,'' என்ற, புகழேந்தியின் முகம் அதிபிரகாசமானதை கவனித்தாள்.

''இப்ப இவன் ஒருத்தன் தான் குறைச்சல்ன்னு, வந்து சேர்றான்,'' என, கடுகடுத்தாள், சுபாங்கி.

ஆருயிர் நண்பன், பிரபாகர், தன் வீட்டுக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான், புகழேந்தி.

அவனை வரவேற்று, ''வா, முதலில் சாப்பிடு. அப்புறம் பேசலாம்.''

''வழியில் சாப்பிட்டுத்தான் வந்தேன்,'' என்றவன், சுபாங்கியை பார்த்ததும், கை கூப்பி, ''நல்லா இருக்கீங்களா?'' எனக் கேட்டான்.

''உங்க நண்பருக்கு வாழ்க்கை பட்டதுக்கப்புறம் எப்படி நல்லா இருக்க முடியும்?'' என்றாள்.

''ஏன், அப்படி சொல்றீங்க?''

''எதற்கும் ஒரு தகுதி, தராதரம் வேணாமா? ஒரு கலெக்டர் மற்றும் மந்திரியோட மருமகன் எப்படி நடந்துக்கணுமோ, அப்படி நடந்துக்க வேணாமா?''

''அப்படி என்ன செஞ்சிட்டாரு?''

''இன்னும் என்ன செய்யணும்? நீங்க பேப்பரோ, 'டிவி'யோ பார்க்கலைன்னு தோணுது.''

''என்ன விஷயம்?''

''ஏதோ ஒரு பொம்பள செத்துக் கிடந்திச்சாம். யாரோ ஒரு பொண்ணு கற்பழிக்கப்பட்டாளாம். உடனே உதவிக்கரம் நீட்டுறாரு. இதுக்கெல்லாமா, ஐ.ஏ.எஸ்., படிச்சு, கலெக்டர் ஆனாரு?

''அன்பு, அனுதாபத்தை வீட்ல காட்டணும். திறமையை பதவியில் காட்டணும். அதுக்குத்தான் கலெக்டர் பதவி கொடுக்கப்பட்டதே தவிர, இந்த மாதிரி, 'சோஷியல் ஒர்க்' பண்ண இல்லை. அப்பா இவரை கழுவி கழுவி ஊத்தறாரு.''

''நிஜம் தான், நீங்க சொல்றதும். உங்கப்பா சொல்றதும் சரி தான். புகழ் ஒருவனால் மட்டுமா, ஊர் உலகத்தை திருத்திவிட முடியும்? நம்ம வேலையைப் பார்த்தமா, காசு பணம் சேர்த்தமா, குடும்பத்தை மட்டும் கவனிச்சம்மா...

''பொண்டாட்டியை சந்தோஷப்படுத்தினோமா, அவளுக்கு புடவை, நகைன்னு வாங்கிக் குவிச்சமா, ஏக்கர் கணக்குல நிலமும், வீடுகளும் வாங்கிப் போட்டமான்னு இருந்திருக்கணும். அப்படியில்லாம வித்தியாசமானவனா இருந்து தொலைச்சிட்டாரு.

''நேர்மையா இருக்கறதால், யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க? நேர்மையாளர்களை விட, அப்படி, இப்படி இருந்தாலும் வேலையை முடிச்சுக் கொடுக்கிற அதிகாரிங்களைத்தான் ஆட்சியாளர்களுக்கு பிடிக்கும்.

''அதிலும், உங்கப்பா தடாலடியாகவாச்சும் வேலையை முடிச்சு கொடுக்க சொல்றவரு. அவருக்கு, 'ரிசல்ட்' தான் முக்கியமே தவிர, வழிமுறை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவரு. எதையும் அவர் கண்டுக்கவும் மாட்டாரு; கவலைப்படவும் மாட்டாரு,'' என்றான், பிரபாகர்.

''உங்களுக்கு தெரியுது. நடைமுறை விபரம் புரியுது. ஆனால், இவரு தெரிஞ்சுக்கவுமில்ல, புரிஞ்சுக்கவும் மாட்டேங்கிறாரே.''

''நீங்க கவலைப்படாதீங்க. நான் சொல்லி புரிய வைக்கிறேன். இப்ப, சூடா ஒரு கப் டீ கிடைக்குமா?''

''உட்காருங்க. சுடச்சுட பஜ்ஜி போட்டு, அருமையான பில்டர் காபி தரச் சொல்றேன்.''

''பஜ்ஜியெல்லாம் வேணாங்க. டீ கொடுங்க போதும்.''

சுபாங்கி சமையலறை பக்கம் நகர்ந்ததும், பிரபாகரைப் பார்த்தான், புகழேந்தி.

''கட்சி மாறிட்டியா, பிரபா?''

''நான் இன்னும் நாலு நாள் இங்க தங்க வேண்டாமா, புகழ்?''

இருவரும் சிரித்தனர். டீ வந்ததும் குடித்து விட்டு காரில் கிளம்பினர்.

''என்ன ஆச்சு, புகழ்? நீ, ஏன் இவ்வளவு, 'இமோஷனல்' ஆன? இப்படியெல்லாம் ஆகக்கூடியவன் இல்லையே, நீ?''

''நீயே வந்து பாரு, பிரபா. மனசு துடிக்கும். யு.பி.எஸ்.சி., பரீட்சைக்கு தன்னை தயார் பண்ணிக்கிட்டிருந்த ஒரு பெண்ணை அநியாயமாக சிதைச்சிருக்காங்க?''

''நம்ம நாட்டுல மட்டும் இத்தனை பாலியல் குற்றங்கள் நடக்க என்ன காரணம், புகழ்? சிறுமிகளை கூட விட்டு வைக்காதது, எதனால்ன்னு நினைக்கிற?''

''எனக்கு ஒரு காரணம் தோணுது, பிரபா.''

''சொல்லு, புகழ்?''

''பொண்ணுன்றவ இங்க இருக்கிறவர்களுக்கு அபூர்வமா, எளிதில் எட்ட முடியாதவளாக இருக்கா. இங்கே இருக்கும் இளைஞர்கள், 30 வயதுக்கு மேல் தான், கல்யாணம் செய்துக்க முடியுது. உத்தியோகம் தான் கல்யாணத்துக்கான துருப்புச் சீட்டு.

''படிச்சு முடிச்சு, வேலையில் சேர்ந்து, அந்த வேலை நிரந்தரமானதும், குடும்பத்தை நடத்துவதற்கான சம்பளத்தை பெற்ற பிறகே, கல்யாணத்தை பற்றி ஒரு இளைஞனால் நினைக்க முடியும்.

''நம்ம நாட்டுல, கல்யாணம் மட்டுமே பெண்ணை உடல் ரீதியாக அணுகக் கூடிய விஷயமா இருக்கு. அதற்கு முன்னால், பெண்ணுங்கிறவ அவனுக்கு எட்டாக் கனி.''

''இதுக்கும், நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம், புகழ்?''

''இரு, நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல. முடிச்சப்புறம் உனக்கே புரியவரும்.''

''சரி, சொல்லு.''

''அவனுக்கு பொண்ணு கிடைக்கிறது, 30 வயசுக்கு மேல. ஆனா, அவன் உடம்பு விழிச்சிக்கிறது, 18 அல்லது 20 வயசுல.

''இந்த இடைப்பட்ட காலத்துல அவன் என்ன செய்வான். தேவைக்கு எங்க போவான்?''

''என்ன புகழ் நீயே இப்படி பேசற?''

''நானா பேசல நண்பா. ஒரு வெளிநாட்டு பத்திரிகை, இந்திய இளைஞர்களின் செயலை ஆராய்ந்து எழுதின கட்டுரையை தான் சொல்றேன்.''

''இந்திய இளைஞர்களை பற்றி மட்டுமா?''

''ஆம், வெளிநாட்டு இளைஞர்கள், அநேகமாக வன்புணர்வு செய்வதில்லை. கூட்டுப் பாலியலில் ஈடுபடுவதில்லை. பெண்களை மானபங்கப் படுத்துவதில்லை.''

''உண்மை தான்!''

''இதற்கான காரணத்தையும் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. வெளிநாடுகளில், ஆண் - பெண் வித்தியாசமில்லாமல் பழகறாங்க, நட்பாகவும் இருக்காங்க. ஒரு வயசை எட்டினதும், 'டேட்டிங்' வச்சுக்கறாங்க.

''தாங்களே சம்பாதிச்சு, அந்த சம்பாத்தியத்தில் படிக்கிறாங்க. சொந்தக் காலில் நிற்க கத்துக்கறாங்க. எந்த வேலையானாலும் செய்யறாங்க. ஹோட்டல்களில் தட்டு கழுவுறது, டாய்லெட் கழுவுறது எதுவானாலும் செய்யிறாங்க.

''அங்கு, 'டிக்னிட்டி ஆப் லேபர்' இருக்கு. ஜாதி இல்லை. பாகுபாடு இல்லை. இந்த வேலை செய்தால் இழுக்கு என, நினைப்பதில்லை. தங்களின் படிப்பு செலவை, பெற்றோர் செய்யணும்ன்னு நினைக்கறதில்லை; எதிர்பார்ப்பது இல்லை. அடுத்த தலைமுறை வரை சொத்து சேர்க்க ஆசைப்படுவதில்லை,'' என, சற்று நிறுத்தினான், புகழேந்தி.

ஆச்சரியத்தோடு பார்த்தான், பிரபாகர்.

''என்ன அப்படி பார்க்குற, பிரபா? நான் சொல்றதெல்லாம் உண்மையா, இல்லையான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. தாங்களே சம்பாதிச்சு, அந்த சம்பாத்தியத்துல படிச்சா, அவங்களுக்கு தன்னம்பிக்கை வரும். கண்ணியமான வாழ்க்கை தெரியும். கண்ணியம் பழகப் பழக, தரக்குறைவான செயலை செய்யவே மாட்டார்கள்.''

''அதெல்லாம் சரி புகழ். நான் கேட்டது...''

''அதற்கும் வரேன்,'' என, இடைமறித்தான், புகழேந்தி.

''ஏற்கனவே நான் சொன்ன மாதிரி இங்க, பெண்ணுன்றவ பேசிப் பழகக் கூட அபூர்வமாகி போகிறாள். அதுவும் இப்போதெல்லாம் பெண்கள், கல்யாணமே செய்துக்க மாட்டேங்கறாங்களாம்.

''ஆண்களுக்கு சமமா படிச்சு, வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், சுதந்திரம் பறிபோய் விடும். சுயம் காணாமல் போய் விடும் என்றெல்லாம் யோசித்து, கல்யாணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்காங்களாம்.

''பெத்தவங்களும், பையன்கள் கவனிக்காததால், பொண்ணுங்களாவது கவனிக்கிறாங்களேன்னு அவங்க கல்யாணத்தை பற்றி கவலைப்படுவதே இல்லையாம்...'' எனக் கூறி முடித்தான், புகழேந்தி.

''அடேங்கப்பா! ஒரு கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா? ஆனா, இளைஞர்களை விட, நடுத்தர வயதுக்காரர்களும், முதியவர்களும் இந்த குற்றத்தில் அதிகமாக ஈடுபடுகின்றனரே!''

''அதற்கும் காரணம் இருக்கு, பிரபா. இங்க, நாற்பது, நாற்பத்தைந்து வயசுக்கெல்லாம் பெண்கள், உடல் ரீதியாக சலிப்படைந்து விடுகின்றனர். இல்லாட்டி, உடல் தேவையை அவமானமா நினைக்குறாங்க.

''இதுக்கு முக்கிய காரணம், வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பாங்களோன்ற கவலை. தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் பயம். வயசுக்கு வந்த பிள்ளைகளை வச்சுக்கிட்டு, என்ன விவஸ்தை கெட்ட தனம் என்று உற்றமும், சுற்றமும் ஏசும் என்ற தயக்கம். நிறைய வீடுகளில் அப்பாவும் - அம்மாவும் தனித்தனியாகத்தானே படுக்கறாங்க!''

''ஆமாம்!'' என, தலையாட்டினான், பிரபாகர்.

''இந்த ஆண் ஜென்மங்களுக்கு, 60 வயசுக்கு மேல் தான், ஆசை அதிகம் வரும். பெண்களுக்கு 50 வயசுக்குள்ள அடங்கி போகும். இந்த இடத்தில் தான் பிரச்னை ஆரம்பமாகுது.''

''ஒரு பத்திரிகை ஆசிரியரான நான் கூட இத்தனை யோசிக்கல. ஆனா, இந்த பெண் பாதிக்கப்பட்டது, இவை எதனாலும் இல்லையே, புகழ்.''

''இல்ல தான், பிரபா. அந்த பொண்ணு பாதிக்கப்பட்டதுக்கு காரணம், வன்மம், ஜாதி! இங்கு ஜாதி ஒழியாது, பிரபா. ஒழிக்க விடமாட்டாங்க. பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரை ஜாதி. பள்ளியிலிருந்து பாடையில் போகும் வரை, என்ன ஜாதின்னு தான் கேட்கறாங்க...

''ஜாதியின் பேர்ல எத்தனை அரசியல் கட்சி இருக்கு. ஒரு நரிக்குறவன் படிச்சது, மாநாடு கூட்டினது, சமத்துவம் பேசினது தப்பா? இதையெல்லாம் செய்த காரணத்துக்காக, அவளது அப்பாவை வெட்டிக் கொன்னாங்க.

''தம்பி, ஊர் தலைவரோட பெண்ணோடு ஓடிப்போன காரணத்துக்காக, இவளை கூட்டு பலாத்காரம் செய்து, அம்மாவை கொன்று, கிணற்றில் வீசியிருக்காங்க. சென்னையில குடிமைப் பயிற்சிக்கு தன்னை தயார் பண்ணிக்கிட்டிருந்த பொண்ணு...'' என்றான், புகழேந்தி.

''அம்மாவை இழந்தது, அந்த பெண்ணுக்கு தெரியுமா?''

''தெரியாது. இன்னும் அந்தப் பெண்ணுக்கு நினைவே திரும்பல,'' என்ற போது, மொபைல் போன் ஒலித்தது.

ஈஸ்வரி அழைத்திருந்தார்.

''சொல்லுங்க... வெரிகுட்! அந்த பொண்ணுகிட்ட யாரும் எதுவும் பேச வேண்டாம். டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும் சொல்லிடுங்க. நான் இதோ வந்திடறேன்.''

வண்டி திரும்பியதை கண்ட பிரபாகர், ''மருத்துவமனைக்கா போறோம், புகழ்?''

''எஸ்!''

இது போன்றதொரு மனநிலையில், புகழேந்தியை கண்டிராத, பிரபாகர், அதற்கான காரணத்தை தேடினான்.



— தொடரும்இந்துமதி






      Dinamalar
      Follow us