
'நடிகர் அமலன், ஐ.பி.எல்., போட்டியில், 'கேலரி'யில் நின்று நடனமாடினார்...' என்ற செய்தியை வாசித்ததும், ஒருவித எரிச்சலோடு பேப்பரை துாக்கி எறிந்தார், ராமநாதன்.
''இப்படி வீட்டுகுள்ளேயே பட்டம் விட்டுட்டு இருந்தா, பின்னாடி ஓடிவந்து பால் பொறுக்க எனக்கு வயசு, இருபத்தைஞ்சு இல்ல, அறுபத்தைஞ்சு,'' மனைவியின் புலம்பலோ, எரிச்சலோ அவரை எட்டவே இல்லை. தினமும் ஒரு செய்தி. அதுவும் அவர் கண்ணில் படும்படியாக...
அமலன் ஐ.பி.எல்.,லில் நடனமாடினார்; அமலன், ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்; அமலன், சிறுசேமிப்புத் துறை விழாவில் கலந்து கொண்டார்; 'டிவி' தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'இந்தப் புகழும், பணமும், இத்தனை வீரியமானதா? ஆசைக்கும், பேராசைக்கும் நடுவே எத்தனை காலத்துக்கு இந்த உடம்பும், ஆன்மாவும் ஓடும்...' என, நினைக்கும் போதே, சலிப்பாக இருந்தது. ஆனால், அதை அனுபவிப்பவர்களுக்கு அது சலிப்பேனா என்கிறதே!
டீ எடுத்து வந்து வைத்துவிட்டுப் போன, மனைவி வனஜா, இது எதையுமே விசாரிக்காமல் கடந்து போனது, இன்னும் எரிச்சலை கிளப்பி விட்டது.
''வயசானா மனுஷனுக்கு ஆசை குறையும்ன்னு சொல்வாங்க. ஆனால், இந்த, 'செலிபிரட்டி'களுக்கு மட்டும் அப்படி எதுவும் இருக்காது போல.''
''அடுத்தவங்க பிரச்னைகளுக்கு நீதிபதி வேலை பார்க்காதீங்க. மிளகாய், தனியா காயவச்சு எடுத்து வச்சிருக்கேன். கார் எடுத்துட்டுப் போய் அரைச்சுட்டு வந்துடுங்க,'' எந்தப் பதட்டமும் இல்லாமல் வெகு இயல்பாகச் சொல்லிய மனைவியை வெகுண்டு பார்த்தார்.
அரசு 'டிவி'யில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், ராமநாதன். பணி காலத்தில் அவர் சந்திக்காத, பேட்டி எடுக்காத வி.வி.ஐ.பி.,களே இல்லை. அவர் போய் மிளகாய், தனியா அரைத்து வருவதா!
''என்ன நினைச்சிட்டு இருக்கே. நான் வகித்த பதவியென்ன. என் சம்பளம், தகுதி, தராதரம் என்ன? 'ரிட்டயர்ட்' ஆன, எட்டு வருஷத்துல எல்லாம் மறந்து போயிடுச்சா உனக்கு. என்னையென்ன அந்த கூத்தாடி அமலன்னு நினைச்சியா? காசுக்காக இருந்த இடத்தையும், அடைந்த புகழையும் அசிங்கப்படுத்த,'' என்று, கொதித்துப் போய் பேசியவரை, ரசத்துக்கு புளியை கரைத்துக் கொண்டே வேடிக்கை பார்த்தார், வனஜா.
''நீங்க எதுவா இருந்திருந்தாலும் என்ன, வீட்டுல கணவர், அப்பா, தாத்தா. அதுதான் பிரதானம். படிப்பாலேயும், தகுதியாலும் அடைந்த பதவிக்கெல்லாம், 'ரிட்டயர்மென்ட்' உண்டு. ஆனால், பந்தத்தால வர்ற பதவிகளுக்கு அது இல்லை.
''கடைசி மூச்சு உள்ள வரைக்கும் நீங்க எனக்கு கணவர் தான். ரம்யாவுக்கு அப்பா தான். பேரப் புள்ளைகளுக்கு தாத்தா தான். அதுக்கு, ஆயுள் சந்தா இருக்கு. இல்லாத அந்த பதவியோட டாம்பீகத்தைக் காட்டாம, இப்போ நிலையா இருக்கிற பதவிக்கு உண்மையா இருங்க.
''ரம்யா அடுத்த வாரம், 'லீவு' முடிஞ்சு, யு.எஸ்., கிளம்பறா. போகும் போது அவளுக்கு அரைச்ச மசாலா, ரெடிமிக்ஸ் எல்லாம் கொடுத்தனுப்பணும். பணி பொண்ணு ஊருக்கு போயிருக்கா. டிரைவரும், 'லீவு'ல இருக்கார். இல்லைனா நானே போய் அரைச்சிட்டு வந்துடுவேன்.''
எந்த அலட்டலும் இல்லாமல் சொல்லிட்டு உள்ளே நகர்ந்தவளைப் பார்த்து, பற்களை, 'நறநற'வென கடித்தாலும், 10 நிமிடத்தில் வாளிகளை, 'டிக்கி'யில் அடைத்து, மிஷினுக்கு கிளம்பித் தான் இருந்தார்.
அரவை மில்லில் பொருட்களைத் தந்துவிட்டு, அரை மணி நேரத்தில் திரும்ப வருவதாகச் சொல்லி, பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையில் சென்று அமர்ந்து கொண்டார். அங்கிருந்த, 'டிவி'யில் செய்தி ஓடிக் கொண்டிருக்க, ஏதோ சிறிய அமைப்பின் கிளை திறப்பு விழாவிற்கு, அமலன் சென்று அமர்ந்திருக்கும் காட்சி திரையில் வந்தது.
இந்த இடம், இந்தப் புகழ் அனைத்தையும் தொட, அமலன் எத்தனை போராடினார் என்று அறிந்தவர், ராமநாதன். அதற்கு, இவ்வளவு தான் மரியாதை போலும் என்று தோன்றியபோது கசப்பாக இருந்தது.
இதே, அமலனை எத்தனையோ முறை பேட்டி எடுத்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த இடத்தைத் தொட, அவர் பட்ட கஷ்டங்களைச் சொல்லியதை நேரிலேயே கேட்டவர். அதையெல்லாம் மறந்து, அமலன் தன்னைத் தானே தரை லெவலுக்கு இறக்கிக் கொண்டது ஒவ்வாமையாக இருந்தது.
'வாக்கிங்' சென்றிருந்தவரை, வனஜாவின் போன் அழைப்பு கவனம் திருப்பியது. 'இப்போதுதான் கிளம்பி வந்தேன். அதற்குள் என்ன தலை போகும் காரியம்...' என்ற எரிச்சலோடு எடுத்தார்.
''இப்போத்தானே வந்தேன். அதுக்குள்ளே என்ன?'' என்றார், எரிச்சலான குரலில்.
''வரும்போது, அரைக்கிலோ உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வரச்சொல்லலாம்ன்னு தான்,'' வனஜா சிரிக்காமல் சொல்ல, வெகுண்டு போனார், ராமநாதன்.
''நான்சென்ஸ். உனக்கெல்லாம் விளையாட்டா போச்சு இல்ல. 'ரிட்டயர்மென்ட்' ஆனதும் நான், உன் கண்ணுக்கு இளப்பமா தெரியறேனோ? யானை படுத்தாலும் குதிரை மட்டம்.''
''அட ஆண்டவா, யாரும் உங்களோட மட்டத்தை குறைச்சு பேசல. வாயைத் திறந்தால் உங்க பிரதாபத்தை ஆரம்பிச்சுடாதீங்க. நேசமணி சார், உங்களை பார்க்க வந்திருக்கார். 'வெயிட்' பண்ணிட்டு இருக்கார். அப்படியே வீட்டுக்கு திரும்பி வாங்க.''
பத்து நிமிடத்தில் வீடு திரும்பியவர் கைகளில், பேட்மிட்டன் அசோசியேஷன்ஸ் கட்டட திறப்பு விழா அழைப்பிதழை திணித்தார், நேசமணி.
''நேரில் பார்த்து கொடுக்கணும்ன்னு முடிவோடு வந்திருக்கேன். வழக்கம் போல, ஏதாவது காரணம் சொல்லிட்டு வராம இருந்திடக் கூடாது, மிஸ்டர் ராமநாதன். விழாவுக்கு, நடிகர் அமலன் சார், சிறப்பு விருந்தினரா வர்றார். அதனால, நல்லபடி கூட்டம் நடத்தி காட்டணும்.''
ராமநாதனுக்கு வெறுப்பாக இருந்தது. ஆனாலும், பொதுவாக தலையசைத்து சம்மதம் சொல்லி அனுப்பி வைத்தார்.
கட்டடத்தின் மேற்கூரை திருத்தி, டைல்ஸ் மாற்றி, வண்ணமேற்றி, பின்பக்கம் சின்னதாய் காலியாக இருந்த இடத்தை, வண்ணத் தோட்டமாக மாற்றி இருந்தனர். இதற்கு ஒரு திறப்புவிழா; அதற்கு, அமலன் வேறு வருகிறார்.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே, அமலன் அங்கு வந்து சேர்ந்திருந்தார். எளிமையான உடையுடன் எப்போதும் போல கவனத்தை ஈர்த்தார். திரையில் பார்ப்பதை விட, நேரில் பார்க்கும் போது அதிக முதுமை தெரிந்தது.
'விளையாட்டுகள் உடலையும், மனதையும் புத்துணர்ச்சி ஆக்கும்...' என்று மனப்பாடம் செய்து வந்திருந்த உரையை, அமலன் பேசி முடிக்க, கை தட்டல் கிடைத்தது.
'இதோ இந்த கை தட்டும் சத்தம் தான், இந்த வயதிலும் அவர்களை இப்படி அலைய வைக்கிறது போலும்...' என, கைகளை கட்டிக் கொண்டு, அமைதியாக அமர்ந்திருந்தார், ராமநாதன்.
தேநீர் நேரம் ஆரம்பிக்க, அங்கிருந்தவர்கள் ஆர்வமாக அமலனிடம் சென்று பேச, ராமநாதன் தனக்கான தேநீர் கோப்பையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும்.
''மிஸ்டர் ராமநாதன், எப்படி இருக்கீங்க?'' அருகில் வந்து, அமலன் கைகளைப் பற்றி குலுக்க, வியந்து போய் நிமிர்ந்து பார்த்தார், ராமநாதன்.
''நான் நல்லா இருக்கேன். என்னை நினைவில் வச்சிருக்கிறது ரொம்ப வியப்பா இருக்கு. பொதுவா நம்ம சொசைட்டியில ஒரு அபத்தமான நடைமுறை இருக்கு. படிப்பாலேயும், திறமையாலேயும் உயரத்தை அடையற அதிகாரிகளை, யாரும் நினைவுல வச்சுக்கிறது இல்ல.
''ஆனால், சினிமாவிலேயும், அரசியல்லேயும் ஒரு துண்டு, 'ரோல்' செய்திருந்தாலே அவர்களை வி.ஐ,பி.,ன்னு சொல்லி உலகமே கொண்டாடுது. அதனால தான் நீங்க, என்னை நினைவில் வச்சிருக்கிறதுல ரொம்ப வியப்பா இருந்தது,'' என்று, வார்த்தைகளில் சுருக்கென ஊசி ஏற்றினார், ராமநாதன். அமலன் அப்படியே புன்முறுவலுடன் நின்றார்.
''வாங்களேன் மாடிக்குப் போய் பேசுவோம்,'' என, அமலனே அழைக்க, இருவரும் மாடிப் படிகளில் ஏறினர். மூன்றாவது தளத்தில் இருந்த மொட்டை மாடிக்கு வந்து நின்றனர்.
''நான் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவங்கிற உரிமையில கேட்கிறேன், அமலன் சார். இந்த உயரத்தை அடைய நீங்க தந்த உழைப்பு ரொம்ப பெரிசு. அதற்கு பிறகும் இந்த கை தட்டலிலும், சின்னச் சின்ன அங்கீகாரத்திலயும் என்ன சுகமிருக்கு?
''யோசிச்சுப் பாருங்க, வாரத்துல, ஏழு நாளும் ஏதாவது ஒரு விழாவில, நிகழ்ச்சியில தலைகாட்டிட்டே இருக்கீங்க. உங்களோட உயரத்துக்கு சம்பந்தமே இல்லாத, 'ரோல்'ல நடிச்சிட்டு இருக்கீங்க.
''படிப்பால இந்த மாதிரி உயரத்தை அடைந்த எந்த அதிகாரியும், தன்னுடைய அலுவலகத்திலேயே, பியூன் வேலைக்கு போக மாட்டாங்க. ஆனால், உங்களை மாதிரி நடிகர்கள் அதைச் செய்றாங்க.
''நீங்க மறுத்தால், இந்த வாய்ப்பு ஏதாவது வளரும் நடிகர்களுக்கு கிடைக்குமே சார். அடுத்த தலைமுறைக்கு வழி விடறதும் சிறந்த பண்பு இல்லையா?'' என்று, நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை கேட்டே விட்டார், ராமநாதன்.
அமலன் முகத்தில் கோபத்தை எதிர்ப்பார்க்க, எப்போதும் போல அதே முறுவல்.
''மிஸ்டர் ராமநாதன், நீங்க சொன்னது ஒரு வகையில் உண்மை தான். இந்த உயரம் கஷ்டப்பட்டு அடைஞ்சது தான். ஆனால், இந்த வாழ்க்கையில் எங்களுக்குன்னு நெருக்கமான நட்போ, உறவோ இல்லை. அப்படி இருக்கிறவர்கள் கிட்டேயும் மனம் விட்டு எதையும் பகிர்ந்துக்க முடியாது.
''யார், எப்போ நம்முடைய பலகீனத்தை, நமக்கெதிரான ஆயுதமா மாற்றுவாங்களோங்கிற எச்சரிக்கை உணர்வு இருந்துட்டே இருக்கும். உபாதை, பயம், தனிமை என்று எதையும் வெளிகாட்டிக்க முடியாத ஒரு அவஸ்தை.
''திரையில மட்டுமில்லை, நிஜ வாழ்க்கையிலும் இந்த உயரத்தில் இருக்கிறவங்க நடிச்சே ஆக வேண்டிய அவலம். சம தளத்தில வாழ்ந்த போது இந்த உயரத்து மேலே போதையா இருந்துச்சு. ஆனால், இப்போ...
''சின்னச் சின்ன சந்தோஷங்களை எனக்கு பிடிக்கிற மாதிரி வெளிப்படுத்திக்க முடியவில்லை. ஓய்வு காலமும் வந்தது. மனைவியும் தவறிப் போயாச்சு. உடம்பு முழுக்க ஆயிரத்தெட்டு நோய். கோவில், யாத்திரைன்னு எங்கே போனாலும் அது செய்தியாகுது; எங்களை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிடுது.
''வலியையோ, அவஸ்தையையோ முகத்தில கூட வெளிக்காட்டிக்க முடிவதில்லை. இந்த நடிகருக்கு இந்த நோய்; இந்த அமைச்சருக்கு இந்த வியாதின்னு, அடுத்தநாளே பத்திரிகைகள் செய்தி வெளியிட ஆரம்பிச்சிடும்,'' என, சொல்லிவிட்டுச் சிரித்தார்.
ராமநாதனுக்கு என்னவோ போல் இருந்தது.
''கை தட்டலுக்கோ, பணத்திற்காகவோ இந்த மாதிரி இறங்கி வர்றது இல்ல, ராமநாதன். மிச்சமிருக்கிற சொற்ப வாழ்க்கையிலாவது, மனிதர்கள் நடுவுல சமமான உயிரா வாழணும்ன்னு ஆசையா இருக்கு.
''எல்லாரும் என்னைப் பார்க்கணும்ங்கிற ஆசையை விட, இதோ இதுமாதிரி யார்கிட்டேயாவது மனம்விட்டு பேசணும்ன்னு தான். தானம், தர்மம் மற்றும் பக்தி இதெல்லாம் புண்ணியத்தை தந்தது, ஆனால், நிம்மதியைத் தரல.
''பார்த்த வேலை, செய்த சாதனைகள், அடைந்த உயரம் எதுவுமே பெரிதாக தெரியாத ஒருநாள் வரும், சார். அன்றைக்கு நான் ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்னு உங்களுக்குப் புரியும்,'' என்றார், அமலன்.
அமலன் அருகில் வந்து, அவர் கைகளைப் பற்றி கொண்டார், ராமநாதன். தான் கணித்து வைத்திருந்ததை விட, அமலன் உயரமானவர்; மனம் விட்டு பேசிய போது தான், அவர் உயரம் புரிந்தது.
எஸ். பர்வின் பானு