
தர்ப்பூசணி - வெட்டிவேர் ஜூஸ்!
தேவையானவை: வெட்டிவேர் - 10 கிராம், துண்டுகளாக நறுக்கிய தர்ப்பூசணி - நான்கு கப், புதினா இலை - 10, இஞ்சி - சிறு துண்டு, கறுப்பு உப்பு - ஒரு தேக்கரண்டி, தேன் அல்லது சர்க்கரை - அரை கப், மிளகுத் துாள் - அரை தேக்கரண்டி.
செய்முறை: வெட்டிவேரை நன்றாகக் கழுவி, இரண்டு டம்ளர் வெதுவெதுபான நீரில், எட்டு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டவும். தர்ப்பூசணி துண்டுகளை இஞ்சியுடன் சேர்ந்து நைசாக அரைக்கவும்.
சர்க்கரையை, வெட்டிவேர் வடிகட்டிய நீரில் கரைத்து, லேசாக கொதிக்க விடவும். கறுப்பு உப்பு சேர்க்கவும். அதில், பழக்கலவையைக் கலந்து சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து எடுக்கவும். மேலாக, மிளகுத்துாள், புதினா இலைகளை துாவி, ஜில்லென்று பருகலாம். பித்தம் குறையும். உடலுக்கும் ஆரோக்கியம்.
நுங்கு ஜூஸ்!
தேவையானவை: சப்ஜா விதை - ஒரு மேஜைக் கரண்டி, நுங்கு - நான்கு, தோல் சீவி எடுத்துக் கொள்ளவும், தேன் - ஒரு மேஜைக் கரண்டி, சுக்குப் பொடி - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: சப்ஜா விதைகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். நன்றாக மலர்ந்து, ஜவ்வரிசி போல் ஆகும். இத்துடன், நறுக்கிய நுங்கு, சுக்குப் பொடி சேர்த்து, மிக்ஸியில் ஜூஸாக்கி கொள்ளவும். குளிர வைத்து, தேன் கலந்து பருகலாம். கோடைக்கு இதமான பானம்.
நெல்லிக்காய் ஜூஸ்!
தேவையானவை: கேரட் - இரண்டு, நெல்லிக்காய் - நான்கு, புதினா இலைகள் - ஒரு மேஜைக்கரண்டி, எலுமிச்சை சாறு - அரை மேஜைக்கரண்டி, பனங்கற்கண்டு - ஒரு மேஜைக் கரண்டி.
செய்முறை: கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சதை பகுதியை நறுக்கிக் கொள்ளவும். புதினா இலையை சுத்தப்படுத்தி கொள்ளவும். பனங்கற்கண்டை லேசாகப் பொடித்து கொள்ளவும். எல்லாவற்றையும் மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வடிகட்டி, எலுமிச்சை சாறு பிழிந்து குளிர வைத்து பருகவும்.
இளநீர் ஜூஸ்!
தேவையானவை: இளநீர் - ஒரு கப், இளநீர் வழுக்கை - இரண்டு தேக்கரண்டி, சப்ஜா விதை - ஒரு தேக்கரண்டி, தேன் - இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: முதலில் சப்ஜா விதையை ஒரு பாத்திரத்தில் போட்டு, இளநீர் விட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து பார்த்தால், சப்ஜா விதை ஊறி, ஜவ்வரிசி போல வந்து விடும். இதில், இளநீர் வழுக்கையை நறுக்கி போட்டு, தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், வெயிலுக்கு சூப்பராக இருக்கும்.
ட்ரை கலர் ஜூஸ்!
தேவையானவை: துருவிய கேரட் - ஒன்று, நன்கு ஆய்ந்து கழுவிய புதினா, கொத்துமல்லி - ஒரு கப், தயிர் - ஒரு கப், மிளகுத் துாள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட் மற்றும் கொத்துமல்லி, புதினா இவற்றை தனித்தனியாக மிக்ஸியில் நீர்விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். ஜூஸ் டம்ளரில் மிளகுப் பொடி, உப்புப் போட்டு கொத்துமல்லி, புதினா ஜூஸை விடவும். அதன் மேல் தயிர் விட்டு, பிறகு கேரட் ஜூஸை சேர்க்கவும். அடியில், பச்சை, நடுவில் வெள்ளை, மேலே ஆரஞ்சு என்ற ட்ரை கலர் ஜூஸ் தயார்.