
கடந்த, 1816ம் ஆண்டு, போரில் தோல்வியுற்ற நெப்போலியன் போனபார்ட், செயின்ட் ஹெலீனா தீவில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, நெப்போலியனை காண வந்த, நெருங்கிய நண்பர் ஒருவர்,தங்கம் மற்றும் நீலம், மரகதம் ஆகிய கற்களால் செய்யப்பட்ட, சதுரங்க பலகை, காய்களை பரிசாகத் தந்தார்.
காவலர்களின் கண்காணிப்பு மிகவும் கடுமையாக இருந்தபடியால், ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வருத்தமாக திரும்பினார், நண்பர்.
நெப்போலியனும் அந்த காய்களை, வைத்து, தனியாகவே விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
நெப்போலியனின் மறைவிற்குப் பிறகு, அந்த சதுரங்க விளையாட்டுப் பலகை அதிக விலைக்கு ஏலத்தில் விடப்பட்டு, பின்னர் பலர் கைக்கு மாறியது. அப்படி அண்மையில் கைவரப் பெற்ற ஒருவர், சதுரங்கக் காய் ஒன்றை தற்செயலாக திருகிய போது, அது திறந்து கொண்டது. அதனுள்ளே ஹெலீனா தீவிலிருந்து தப்பிச் செல்வதற்கு வழி காட்டக் கூடிய வரைபடம் இருந்தது.
நெப்போலியனுக்கு அச்சமயம் அந்த காயை திறந்து பார்ப்பதற்கு தோன்றவில்லை. ஒரு வேளை திறந்திருந்தால், அந்த வரைபடத்தின் உதவியால், ஹெலீனா சிறையிலிருந்து தப்பியிருப்பார். சரித்திரமும் வேறு விதமாக மாறியிருக்கும்.
காங்கிரஸ்வாதியான, குமரி அனந்தன் ஒரு கட்டுரையில் எழுதியது:
சென்னை சட்டக் கல்லுாரிக்கு இலக்கிய சொற்பொழிவு ஆற்ற, என்னையும், கி.வா.ஜகந்நாதனையும் அழைத்திருந்தனர்.
நான் செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே, சட்டக் கல்லுாரியின் நுழைவாயிலை அடைந்து விட்டார், கி.வா.ஜ.,
என்னைக் கண்டதும், 'வாருங்கள் குமரி. இளைஞர்கள் உங்களைத் தான் எதிர்பார்க்கின்றனர்...' என்று கூறி புன்னகைத்தார், கி.வா.ஜ.,
நானோ சொல்லின் பொருளை உணர்ந்து சிரித்தேன். என்னோடு, மாணவர்களும் சேர்ந்து கொண்டனர். சிரிப்பு அலை நிற்பது வரை பேசாதிருந்தார், கி.வா.ஜ.,
என்னிடம், 'அனந்தன், நீங்கள் இப்போது எங்கு குடியிருக்கிறீர்கள்?' என்றார்.
நான், வண்ணாரப் பேட்டை என்று சொல்லி முடிப்பதற்குள், கண்ணை சிமிட்டிக் கொண்டு, 'வெளுத்து வாங்குங்கள்...' என்று சொல்லி எல்லாரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
நன்றாகப் பேசி விட்டால், வெளுத்து வாங்கி விட்டான் என்று சொல்வது உண்டல்லவா? அதை வண்ணாரப்பேட்டையோடு இணைத்தும், அதே நேரத்தில் என் சொற்பொழிவிற்குப் பாராட்டாக அமைத்தும், கணப் பொழுதில் கூறிய அந்த சொற்றொடர்கள், இன்றும் என் நெஞ்சில் நின்று ரீங்காரித்து வருகிறது.
நடுத்தொரு நாராயணன்