
ஆடிட்டர் ஜி.நாராயணசாமியின் சுயசரிதையான, 'தணிக்கைக்கு அப்பால்...' என்ற புத்தகத்தில், ராஜாஜி பற்றிய ஒரு செய்தியை, அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ராஜாஜி இறப்பதற்கு, ஆறு மாதத்திற்கு முன், அவரிடம் மொத்தமாக இருந்த சேமிப்பான, 60 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்துவிட முடிவு செய்தாராம். அதற்கான நன்கொடை வரி - 'கிப்ட் டாக்ஸ்' எவ்வளவு என கேட்டு, அதற்கும், 12 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, அவருக்கு வந்த முன்னாள் கவர்னர் ஜெனரல் ஓய்வூதியத்திலிருந்து கொடுத்துள்ளார்.
'இதற்கு வரி செலுத்தாமல் இருக்க வழி இருக்கிறது. நீங்கள் ஏன் அநாவசியமாக வரி செலுத்த வேண்டும்?' என்று கேட்டார், நாராயணசாமி.
அதற்கு, 'அதெல்லாம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் செய்யும் தந்திரங்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் அது போன்ற உத்திகளைக் கையாளக் கூடாது...' என்றார், ராஜாஜி.
*****
நம்முடைய கல்வி முறையை உருவாக்கியவர், லார்ட் மெக்காலே என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்தக் கல்விக் கொள்கையை அவர் ஏன் நமக்கு அறிமுகப்படுத்தினார் என்பது தெரியுமா?
அதை அறிமுகப்படுத்தும் முன், பிப்., 2, 1835ல், பிரிட்டிஷ் பார்லிமென்டில் அவர் பேசியது:
நான், இந்தியா முழுக்க சுற்றியிருக்கிறேன். ஒரு இடத்திலும் நான், பிச்சைக்காரர்களையோ, திருடர்களையோ பார்க்கவே இல்லை. அந்தளவுக்கு இந்தியா உயர்ந்த ஒழுக்கத்திலும், மதிப்பீடுகளிலும் செழிப்பாக இருக்கிறது.
அதனால், இந்தியாவின் முக்கியமான கலாசாரத்தின் பாரம்பரியத்தை உடைத்தால் ஒழிய, இந்தியாவை நாம் கைப்பற்ற முடியாது. இதற்கு ஒரே வழி, இந்தியர்களின் பழமையான மற்றும் பண்டைய கால கல்வி முறையை மாற்ற வேண்டும்.
இதன் மூலம், அவர்களது கலாசாரத்தைவிட, வெளிநாட்டவர்களின் கலாசாரம் உயர்ந்தது என்றும், அவர்களுடைய தாய் மொழியை விட, ஆங்கிலமே சிறந்தது என்றும் இந்தியர்களை கருத வைக்க முடியும்.
இதனால், இந்தியர்கள், தங்கள் சுயமரியாதையையும், சொந்த கலாசாரத்தையும் இழப்பர். அதன் பிறகு, நம் விருப்பப்படி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றார்.
****
ஒரு பேட்டியில், எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது:
சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் வீட்டுக்கு, எங்கிருந்தோ யாரோ கொடுத்து அனுப்பினர் என, தென்னங் கன்றுகளை வைத்து, அவை மூன்றாண்டிலேயே மிக நன்றாக உயர்ந்து, தேங்காய்கள் காய்த்து தொங்க ஆரம்பித்தன.
அண்ணாந்து பார்க்கத்தான் எனக்கு தெரிந்ததே தவிர, அதை ஏறிப் பறிக்கும் திறன் இல்லை. எனவே, யாராவது தேங்காய் பறிக்கிற ஆள் வருகிறாரா என்று நாளெல்லாம் பார்த்திருந்தேன். யாரையும் காணோம்.
ஒருநாள், நடுராத்திரி, 'பொத் பொத்' என்று சத்தம் கேட்டது. ஜன்னலைத் திறந்து பார்த்தால், ஒருவன் தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்துக் கொண்டிருந்தான்.
'என்னையா, உன்னை பகல் எல்லாம் தேடிக் கொண்டு இருந்தேன் காணவில்லை; இந்நேரத்தில் வந்திருக்கிறாயே. சரி, உனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, மீதியைப் போட்டு விட்டுப் போப்பா...' என்று கூறி, ஜன்னல் கதவை மூடி, நிம்மதியாக துாங்கினேன்.
என்ன ஆச்சரியம். மறுநாள் காலையில், ஒவ்வொரு மரத்தடியிலும் தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அன்று என் மனதில் ஒரு சிறு வருத்தமும் ஏற்பட்டது.
அந்தக் குவியலைப் பார்த்தபோது, அவன் தனக்கு கூலியாக சில தேங்காய்களாவது எடுத்து போயிருப்பானா? இல்லை, நல்ல நண்பனாக தன் உழைப்பை தானமாக தந்து இவற்றைப் பறித்துக் கொடுத்துவிட்டு, வெறுங்கையுடன் போயிருப்பானா என்ற சந்தேகம் தான். ஆனால், எதையும் எடுத்துக் கொண்டு போகாத அவன், ஓரிரு நாளில் திரும்பி வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட கணமே, எனக்கு உற்ற நண்பனாகி விட்டான்.
- நடுத்தெரு நாராயணன்