
பொதுக்காரியங்களுக்கு பணம் சேர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார், காந்திஜி. அந்த உதவிகளை செய்கிறவர்கள், நல்ல காரியத்திற்காகப் பணம் கொடுக்கிறவர்களின் மனம் நோகாமல், அவர்களிடம் எப்படி வசூல் செய்வது என்ற கலையை, கற்றுக் கொண்டிருந்தார்.
அதுமாதிரி ஒருத்தர் வாழ்க்கையில் ஒரு சம்பவம்.
பீஹாரில் பூகம்பம் வந்த நேரம். அப்போது, மிஜாபர்பூர் மகாராஜாவாக இருந்தார், மஹேஷ்கிரவேசி. அவர் வீட்டில் விருந்து சாப்பிட சென்றிருந்தார், காந்திஜி.
தடபுடலான விருந்து. ராஜாவின் மனைவி, பரிமாறினார். அவர் உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் போதே, அந்த ராணியை பார்த்தார், காந்திஜி.
கழுத்திலும், காதிலும், கைகளிலும் ஏகப்பட்ட நகைகளை அணிந்திருந்தார், ராணி. சுமக்க முடியாமல் அந்த நகைகளை போட்டுக் கொண்டு உணவு பரிமாறினார்.
'ஏம்மா இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டிருக்கிறீர்களே... உங்களுக்கு இவை சுமையாக இல்லையா?' என, ராணியிடம் கேட்டார், காந்திஜி.
அதற்கு, 'சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால், ராணி என்பதால் நகைகளை போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறதே...' என்றார், அவர்.
'அப்போ ஒன்று செய்யுங்கள். இந்த கனத்தை குறைப்பதற்கு நான், ஒரு ஏற்பாடு செய்கிறேன். அதே நேரத்தில் ஒரு சமூக கடமையை நிறைவேற்றிய மனநிறைவு உங்களுக்கு கிடைக்கிற மாதிரியும் இருக்கும்.
'பீஹார் பூகம்பத்தில் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ, நிறைய பணம் தேவைப்படுகிறது. நான், அந்த பணத்தை சேகரித்து கொண்டிருக்கிறேன். இப்போ நீங்கள் விரும்பினால், உங்க உடம்பில் இருக்கிற நகைகளை எல்லாம் கழட்டிக் கொடுக்கலாம். கொடுத்தால், அது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படும்...' என்றார், காந்திஜி.
மறு பேச்சு பேசாமல், நகைகளை கழட்டி, காந்திஜியின் பாதங்களில் வைத்தார், அந்த ராணி. அவர் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
'காந்திஜி கேட்டதும் இவ்வளவு நகைகளையும் கழட்டி கொடுத்து விட்டீர்களே. இப்ப நீங்க என்ன நினைக்கிறீர்கள்?' என, அங்கிருந்தோர் அவரிடம் கேட்டனர்.
அதற்கு, 'இதனால் என் உடம்பில் உள்ள பாரம் மட்டும் குறைந்ததாக, நான் நினைக்கவில்லை. இப்போது, என் மனதில் ஓர் அற்புதமான புத்துணர்ச்சி வந்திருக்கிறது.
'என்னுடைய நகைகள் எல்லாம் நல்ல காரியத்துக்கு பயன்பட போகிறது என, நினைக்கும் போது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
'தேவை இல்லாமல் நான் சுமந்து கொண்டு இருந்த சுமை, குறைந்து விட்டது. மனதில் ஒரு புத்துணர்ச்சி வந்திருக்கிறது...' எனக்கூறி, காந்திஜிக்கு நன்றி சொல்லி, அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
அன்றிலிருந்து அந்த ராணி, எளிமையான உடைகளை உடுத்த ஆரம்பித்தார்.
அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளையும் எழுதச் சொன்னார்.
அப்படி எழுதப்பட்டதில், 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்ற குறளை வைத்து, அண்ணாதுரையை மடக்க வேண்டும் என, நினைத்தார், எம்.எல்.ஏ., ஒருவர்.
சட்டசபையில், மேற்குறித்த குறளை சொல்லி, 'அந்தக் குறள் ஓட்டுனருக்கா, நடத்துனருக்கா, பயணிகளுக்கா?' என, சற்று கேலியுடன் கேட்டார்.
'இக்குறள் ஓட்டுனருக்கு என்றால், அவர் மனம் புண்படும்; நடத்துனருக்கு என்றால், அவர் சங்கடப்படுவார்; பயணிகளுக்கு என்றால், பயணிகள் வருத்தப்படுவர்...' எனச் சொல்லி நிறுத்தி அனைவரையும் பார்த்து, 'நாக்கு உள்ள அனைவருக்கும் பொருந்தும்...' என, சற்றும் அயராது பதிலுரைத்தார், அண்ணாதுரை.
கேள்வி கேட்டவர் வாயடைத்து போனார். சபையில் இருந்தவர்களோ, 'இது தான் அண்ணா...' என, புகழாரம் சூட்டினர்.
- நடுத்தெரு நாராயணன்