
அக்., 9 - அஞ்சல் தினம்!
'அன்புள்ள...' என்று ஆரம்பிக்கும் இந்த ஒற்றை வார்த்தையைக் கடந்து வராதவர்கள், பெரும்பாலும் குறைவே.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்வரை, அன்பை பரிமாறிக் கொள்ளவும், துாது புறாவாகவும் அஞ்சல் அட்டையும், இன்லேண்ட் லட்டரும் இருந்தது.
இன்றும் பல வீடுகளில், டிரங்க் பெட்டியில் பழைய கடிதங்களைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து, படித்து பரவசப்படுவோர், பலர் உள்ளனர். நமக்கான உறவுப் பாலத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் பெரும் பங்கு, தபால் துறையையே சேரும்.
கடிதங்களில் எழுதப்பட்டிருக்கும் வரிகளில், வீட்டில் இருக்கும் மாடு கன்று போட்டிருப்பது முதல், பக்கத்து வீட்டு ராமாயிக்கு திருமணம் நடந்தது வரை, அனைத்து தகவல்களும் இடம் பெறும். இரண்டே ரூபாயில் மாநிலம் விட்டு மாநிலத்திற்கோ, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கோ பரிமாறப்பட்டிருக்கும்.
இத்தகைய அன்பும், அன்னியோன்யமும் இன்று நாம் பேசி வரும், 'வீடியோ கால்'களில் கிடைப்பதில்லை.
தபால் துறையால் நாட்டின் எந்த மூலைக்கும் அதிகபட்சமாக, நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
மக்களின் நம்பகத்தன்மையை பெற்று, பல தகவல்கள், பாஸ்போர்ட்கள், ஆதார் அட்டைகள், மணியார்டர்கள் எனப்படும் பணப்பட்டுவாடா மற்றும் பொருட்கள் பரிமாற்றம் செய்வதே, இத்துறையின் முக்கியப் பணி.
தபால் துறையின் மற்றொரு சேவையான, 'ரயில்வே மெயில் சர்வீஸ்' எனப்படும், ரயிலில் அஞ்சலகப் பிரிப்பகம், தபால்கள், முக்கிய ஆவணங்கள், மருத்துவ பொருட்கள் பரிமாற்றம் என, தபால் மற்றும் விரைவு தபால் மூலம் செய்து வருகிறது.
தபால்களை பதிவு செய்தவுடனும், அதை பட்டுவாடா செய்யும் நிலைப்பாட்டையும், அவர்களின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியில், பதிவுத் தபால்களின் பதிவு முதல், பட்டுவாடா வரை, தொடர் தகவல்களை வாடிக்கையாளர் அறியும் சேவையை, indiapost.gov.in 67 GOT M என்ற வலைதளத்தில் அமைத்துள்ளது.
மக்களிடம் பலவகையான சேமிப்புத் திட்டங்களை கொண்டு சென்று, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மூத்த குடிமக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அரசுக்கு உதவியாக நிற்கிறது, தபால் துறை.
மத்திய அரசின் நலத்திட்டமான, தங்க மகள் சேமிப்புத் திட்டம்' எனப்படும், சுகன்ய சம்ரிதி திட்டத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தி, பெரும்பான்மையான பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை வளமாக்குவதிலும், தன்னம்பிக்கை ஊட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, தபால் துறை.
'கொரோனா' காலத்தில், பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்ட நிலையிலும், எந்தவித இடர்பாடுகளும் இன்றி, மக்களுக்கு சேவை செய்தது, தபால் துறை.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக, 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' எனப்படும், வங்கி சேவையையும் இத்துறை செய்து வருகிறது.
இந்தியன் போஸ்டல் பேங்க் மூலம், பணம் தேவைப்படுபவர்கள், குறுஞ்செய்தி அனுப்பினால், அவர்களின் இருப்பிடத்திற்கே போய் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இக்கட்டான நேரத்தில் உடனுக்குடன் சேவைகளை கொடுப்பதில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறது.
மக்கள் பணியில் ஓயாது உழைத்து சேவையாற்றி நன்மதிப்பை பெற்று கொண்டிருக்கும் தபால் துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!
- எஸ்.கே. மூர்த்தி