
''உங்களை டாக்டர் உள்ளே வரச் சொல்றார்,'' என கூறிவிட்டு, உள்ளே சென்று விட்டாள், நர்ஸ்.
டாக்டரின் அழைப்பிற்காகத் தான் அரைமணி நேரமாக அங்கே காத்திருந்தனர், கண்ணனும், கவிதாவும்.
தங்கள் அன்பு மகள், காவ்யாவுக்கு நேற்று நடைபெற்ற சோதனையின் முடிவு பற்றி, டாக்டர் என்ன கூறப் போகிறாரோ என்ற பதற்றம் இருவரிடமும் காணப்பட்டது.
தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் மன முருக வேண்டினாள், கவிதா; எந்த முடிவையும் ஏற்கத்தானே வேண்டும் என்ற தெளிவுடன் இருந்தான், கண்ணன்.
தயக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் டாக்டர் அறைக்குள் அவர்கள் நுழைந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
''வாங்க, உட்காருங்க,'' என்று, இருக்கைகளை காட்டினார், டாக்டர். அவரது முகக்குறிப்பு, எச்சரிக்கைக்கான முன் அறிவிப்பு போல் தெரிந்தது.
''சொல்றதுக்கு சிரமமாத்தான் இருக்கு. ஆனால், ஒரு டாக்டர்ங்கிற முறையில உண்மையைச் சொல்ல வேண்டியது, என் கடமை.''
''டாக்டர் நீங்க சொல்றதைப் பார்த்தா...'' அதற்கு மேல், கவிதாவால் பேச முடியவில்லை.
''பரவாயில்லை டாக்டர். எதுன்னாலும் நீங்க சொல்லலாம்,'' என, வேதனையை வெளிக்காட்டாமல் தைரியமாக கூறினான், கண்ணன்.
''ஓ.கே., உங்க பொண்ணுக்கு, ரெண்டு கிட்னியுமே பாதிப்படைஞ்சிருக்கு. ஒரு கிட்னி முழுதும் பாதிக்கப்பட்டதால், அதை உடனே எடுத்துட்டு, வேறு கிட்னி பொருத்தணும். அடுத்த, கிட்னியை இப்ப மாத்த வேண்டியதில்லை.''
''அடக்கடவுளே, நான் பயந்தது மாதிரியே ஆகிப்போச்சே,'' என, அழத் துவங்கினாள், கவிதா.
''கவலைப்படாதீங்கம்மா... பாதிக்கப்பட்ட கிட்னியை எடுத்திட்டாலும், உங்க பொண்ணு நல்லா இருப்பாங்க. ஆனால், அவங்களால, முன்ன மாதிரி, 'ஆக்டிவ்' ஆக இருக்க முடியாது.''
''அறுவை சிகிச்சையை உடனே செய்யணுமா டாக்டர்?'' ஆதங்கத்துடன் கேட்டான், கண்ணன்.
''எவ்வளவு சீக்கிரம் செய்றோமோ அந்த அளவுக்கு நல்லது. அதுக்குள்ளே கிட்னி கிடைக்கணும். சொந்தத்திலே ஏற்பாடு செய்ய முடிஞ்சா நல்லது.''
''கண்டிப்பா ஏற்பாடு செய்றோம். விரைவிலேயே உங்களை சந்திக்கிறோம். வர்றோம், சார்,'' மீண்டும் வணங்கினான், கண்ணன்.
''கவலைப் படாதீங்கம்மா, எல்லாம் நல்லபடியாய் நடக்கும். தைரியமா போய் வாங்க.''
ஆறுதல் கூறிய டாக்டருக்கு நன்றி கூறி, வெளியில் வந்தாள், கவிதா. என்றாலும், இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை.
''என்னங்க டாக்டர், இப்படிச் சொல்லிட்டாரு.''
''அவர் உண்மையைத்தானே சொல்லி இருக்காரு.''
''என் பொண்ணுக்கிட்டே இதை எப்படீங்க சொல்றது,'' அவள் கண்கள் கலங்கின.
''தெளிவான பொண்ணு, காவ்யா; அவள் சரியா புரிஞ்சுக்குவா. நீ அதை நினைச்சு கவலைப்படாதே. சரி வா போகலாம்,'' ஆறுதல் கூறினான், கண்ணன்.
பின்பு இருவரும் காரில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அவர்கள் வீட்டின் செல்லப்பெண், காவ்யா. திருமணமாகி பல ஆண்டுகள் பிள்ளை இல்லாத நிலையில், அந்த வீட்டு தேவதையாக தோன்றியவள்.
அதனால் தெய்வம் தந்த வரமாக மகளை எண்ணி வளர்த்தனர், கண்ணனும், கவிதாவும். படிப்பில் மட்டுமின்றி பேச்சு, பாட்டு, நடனம் மற்றும் விளையாட்டு என, அனைத்திலும், முதல் மாணவி, அவள் தான்.
தற்போது ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படிக்கும் அவளுக்கு, ஐ.ஏ.எஸ்., கனவும் உண்டு. அவள் படிக்கும் மகளிர் கல்லுாரியில், கிரிக்கெட் டீம் கேப்டன், அவள் தான். சில மாதங்களுக்கு முன், நடந்த கிரிக்கெட் மேட்சின் போது, எதிர் திசையிலிருந்து வீசிய பந்து அடிபட்டதில் அவள் கிட்னி பாதிப்புக்குள்ளானது.
ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாக பாதிப்பு தெரியவில்லை. பின்பு தான் அதன் விளைவு தெரிய வந்தது.
துவக்கத்தில் செய்த மருத்துவ சிகிச்சைகளால் தற்காலிகப் பயன்களே தெரிந்தன. பின்பு கிட்னி சிகிச்சை நிபுணரிடம் காட்டி, அவர் பல பரிசோதனைகள் செய்த பின்பு தான் உண்மை நிலை அறிய முடிந்தது.
சோதனைகளின் போதே, தன் உடல்நிலை பற்றி ஓரளவு தெரிந்ததால், என்ன நடக்கும் என்பதையும் அறிந்து அதற்கேற்ற மன உறுதியுடன் இருந்தாள், காவ்யா.
''என்னம்மா, டாக்டர் என்ன சொன்னார்?'' கல்லுாரியிலிருந்து வீட்டிற்குள் நுழையும் போதே கேட்டாள், காவ்யா.
''வந்ததுமே கேட்க ஆரம்பிச்சுட்டியா?''
''என் உடம்பை பற்றிய அக்கறை எனக்கு இருக்காதாம்மா?''
''நல்லாக் கேட்டே... பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லேம்மா. ஒரு ஆபரேஷன் செய்யணுமாம்,'' சமாளிப்பது போல் கூறினான், கண்ணன்.
''ஆபரேஷனா. மாற்று கிட்னி பொருத்துவது தானே, டாடி?''
''அது எப்படி உனக்கு தெரியும்? டாக்டரைப் பார்த்துக் கேட்டியா?'' பதற்றத்துடன் கேட்டாள், கவிதா.
''நேத்து சோதனை நடந்த போதே நான் புரிஞ்சுக்கிட்டேன். அடுத்த என்ன நடக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்; அதனால தான் சொல்றேன்.''
''உனக்கு அதைப்பற்றி பயம்லாம் இல்லையா?'' தயக்கத்துடன் கேட்டாள், கவிதா.
''இதுலே பயப்படறதுக்கு என்ன இருக்கு... செய்ய வேண்டியதை செஞ்சுதானே ஆகணும்,'' என, உறுதியுடன் கூறினாள், காவ்யா.
''உன்னோட தெளிவும், துணிவும் யாருக்கும் வராது,'' பெருமிதத்துடன் கூறினான், கண்ணன்.
''தேங்ஸ் டாடி. நீங்க கிட்னிக்கு ஏற்பாடு செய்யுங்க. தேவைப்படும் போது, 'லீவு' போட்டுக்கிறேன்,'' சிரித்தபடி, தன் அறைக்கு சென்றாள், காவ்யா.
''எவ்வளவு சீக்கிரம் பண்றோமோ அந்த அளவுக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னார். கிட்னி கிடைக்கணுமே...'' என, கவலையுடன் மனைவியை பார்த்தான், கண்ணன்.
''நான் தர்றேங்க. அம்மாவோட கிட்னி நிச்சயம் பொண்ணுக்கு பொருந்தும்,'' உற்சாகமுடன் கூறினாள், கவிதா.
''பொருந்தும் தான். ஆனால்...''
''நீங்க எதையும் யோசிக்க வேண்டாம். என் உள் மனசு சொல்லுது நல்லது நடக்கும்ன்னு. நாளைக்கே ஆஸ்பத்திரிக்கு போவோம் வாங்க.''
''நீயே இவ்வளவு துாரம் துணிஞ்சு முடிவெடுக்கும் போது, நான் மறுக்கவா போறேன்,'' கவிதாவை நினைத்துப் பெருமைப் பட்டான், கண்ணன்.
கவிதா நினைத்தபடியே நடந்தது.
மருத்துவ பரிசோதனை செய்ததில், கவிதாவின் கிட்னி, காவ்யாவிற்கு பொருந்தியது. உடனேயே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, காவ்யாவுக்கு பொருத்தப்பட்டது.
தன் ஒரு கிட்னி எடுக்கப்பட்டதை பற்றிக் கவலைப்படாமல், அன்பு மகள் புதுப்பிறவி எடுக்க உதவியதை நினைத்து மகிழ்ந்தாள், கவிதா.
பக்கத்து ஊரிலிருந்த கவிதாவின் தங்கை வந்து வேண்டிய உதவிகளை செய்தாள். சில வாரங்களிலேயே உடல் தேறினாள், கவிதா. பழைபடி வீட்டு வேலைகளை பார்க்க துவங்கிவிட்டதால், தங்கையை அவள் ஊருக்கு அனுப்பினாள்.
காவ்யா குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகின. இப்போது அவளும் கல்லுாரி செல்லத் துவங்கிவிட்டாள்.
இன்னும் சில மாதங்கள் கழித்து விளையாட்டில் ஈடுபடுமாறு கூறினார், டாக்டர். அதனால், கிரிக்கெட் மேட்சுகளில் பங்கேற்பாளராக இல்லாமல், பார்வையாளராக இடம்பெற்று அணிக்கு ஆலோசனை வழங்கினாள்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை பக்கத்து தெருவில் உள்ள, தன் தோழியுடன் தவறாமல் அம்மன் கோவிலுக்கு செல்வாள், காவ்யா.
அன்றும் அப்படித்தான் சென்றாள்.
அம்மனை வழிபட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, தோழியின் அம்மா உடனே வருமாறு அவளை மொபைல் போனில் அழைத்ததால், அவள் சென்றுவிட்டாள்.
பிரகாரம் வலம் வந்தபின், அம்மன் சன்னிதிக்கு முன்புறம் உள்ள மேடையில் சிறிது நேரம் அமர்ந்தாள், காவ்யா.
காவ்யாவிற்குப் பின் பக்கத்தில், பாட்டியும், இளம்பெண் ஒருவரும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ பேசுகின்றனர் என்று தான் முதலில் நினைத்தாள். பேச்சின் இடையே கண்ணன், கவிதா என்றெல்லாம் கூறியதால், நம் வீட்டுப் பிரச்னையாய் இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர்கள் பேச்சை கவனித்தாள், காவ்யா.
அவள் நினைத்தது சரியாக இருந்ததுடன், அவள் நினைத்துக்கூட பார்த்திராத அதிர்ச்சி தகவலும் பாட்டியிடம் வெளிப்பட்டது. காவ்யாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது. வேகமாக அவள் வீட்டை அடைந்தாள்.
வீட்டின் கதவைத் திறந்த காவ்யா, சோபாவில் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த, கவிதாவைப் பார்த்தாள். ஓவென்று அவளைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, கவிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள். தன் இரு கைகளாலும், கவிதாவின் இரு கன்னங்களையும் பிடித்து, 'அம்மா' என்று அழைத்த போதே, காவ்யாவின் கண்கள் கலங்கின.
''என்னடா, என்னமோ புதுசாப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறே.''
''ஆமாம்மா, என் புது அம்மாவை தான் இப்பப் பார்க்கிறேன்.''
''என்ன, என்னமோ புதிர் போட்டு பேசுறாப் போல இருக்கு.''
''அம்மா, கேட்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க. எனக்கு கிட்னி கொடுக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?'' அவள் மன உறுத்தல் கேள்வியாக வெளிப்பட்டது.
''பெத்த பொண்ணுக்கு, அம்மா கொடுத்ததிலே என்ன ஆச்சரியம் இருக்கு?''
''பெத்த பொண்ணுக்கு தரலாம். ஆனால், தத்துப் பொண்ணுக்கு தருவது ஆச்சரியம் இல்லையா?''
காவியா கூறியதை கேட்டதும், தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள், கவிதா. எந்த உண்மை அவளுக்கு தெரியக் கூடாது என்று நினைத்தாலோ, அது நடந்து விட்டது.
''அது... அது எப்படி உனக்குத் தெரிஞ்சது,'' என்று, பதற்றத்துடன் கேட்டாள், கவிதா.
''கோவிலில், நம்ம தெரு பாட்டி, மற்றொரு பெண்ணிடம், நம் குடும்ப விஷயத்தை பத்தி பேசிட்டு இருந்ததை கேட்டேன். அவங்க என்னை பத்தியும் சொன்னாங்க.''
''ஆமாம்மா, எனக்கு கர்ப்பப் பையில பிரச்னை. அதை எடுத்திட்டோம். இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லேன்னு தெரிஞ்சப்புறம் தான், உன்னைத் தத்தெடுத்தோம். உனக்கு தெரிய வேணாம்ன்னு நெனைச்சோம். ஆனால்...''
''ஆனால், என்னம்மா. நான் எப்பவும் உங்க பொண்ணு தான். உண்மையைத் தெரிஞ்சப்பிறகு, உங்க ரெண்டு பேரு மேலேயும் அதிகப் பாசம் தான் ஏற்படுது. ஒரு தாய், குழந்தை கருவிலே இருக்கும் போதே உயிர் கொடுப்பாளாம். அம்மா... நான் இப்ப உயிரா இருக்க, நீங்க தானே காரணம்? அப்படி பார்த்தா நம்ம உறவும் ரத்த சம்பந்தப்பட்டது தானே?''
''அதிலே என்ன சந்தேகம்,'' என்று, கூறி, காவ்யாவை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, காவ்யாவை வயிற்றில் சுமந்தது போன்ற சுகமான அனுபவத்தை உணர்ந்தாள், கவித
கரு. நாகராஜன்