
''நேத்திக்கு போன போதே அஞ்சு லட்சத்தை கட்டி இருந்தா, நம்ம பொண்ணு கேட்ட அந்த எம்.வி.எம்., மகேஸ்வரி மண்டபம் கிடைச்சிருக்கும் இல்ல... கஞ்சன்,'' என்றாள், மனைவி கஸ்துாரி.
''யாராவது அஞ்சு லட்சத்தை கையில வச்சுக்கிட்டு மண்டபம் தேடுவாங்களா? அடுத்த நாள் பணத்தை எடுத்துட்டு போறதுக்குள்ள, 'புக்' ஆயிடுச்சு. அந்த மண்டபம் இல்லன்னா வேற மண்டபமே இல்லையா என்ன? நம்ம ஊர்ல மண்டபத்துக்கா பஞ்சம்,'' என்றார், சம்பத்.
''ஓஹோ! விட்டா நீங்க சமூக நல கூடத்துல கூட, என் பொண்ணு கல்யாணத்தை பண்ணிடுவீங்க. நம்ம அந்தஸ்துக்கும், கவுரவத்துக்கும், ஏத்த இடமா பார்க்க வேண்டாமா? சாயந்திரம் ராணி போன் செய்தா, எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு பதில் சொல்வீங்க?'' என, சரமாரியாக சாடினாள்.
மாலை 6:00 மணி அளவில், 'வாட்ஸ் -அப்'பில், அப்பாவை அழைத்தாள், ராணி.
அமெரிக்காவில் இருக்கும், ராணி வழக்கமாக அழைப்பது, அவளது தந்தையை தான். அம்மா மீது அன்பு இல்லாமல் இல்லை. இந்த நவீன யுகத்திற்கு ஏற்றார் போல ஸ்கைப்பில் ஸ்லோகம் வகுப்பு, நண்பர்களுடன் யோகா என்று, மாலை நேரங்களில் படு, 'பிசி'யாக இருப்பாள், அம்மா.
கஸ்துாரிக்கு நேர் எதிர், சம்பத். வீட்டில் இருப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் படிப்பது, சமைப்பது, குழந்தைகளுடன் ஆழமாக உரையாடுவது என, சம்பத்திற்கு அவரது வீட்டின் பால் ஈர்ப்பு அதிகம்.
''அப்பா நீங்க மண்டபம் எதுவும் கல்யாணத்துக்கு, 'புக்' செய்யலையே?'' என்று ஆரம்பித்தாள், ராணி.
''இல்லம்மா பார்த்துட்டு இருக்கேன்.''
''நல்ல வேளை, 'புக்' பண்ணாதீங்க! இல்லாட்டி பணத்தை திரும்ப வாங்குறதே கஷ்டமாயிடும்.''
''ஏன் திரும்ப வாங்கணும்? அமெரிக்காவிலயே சாவி எழுதின கதை மாதிரி, மேரேஜ் ஏதாவது பிளான் பண்ணிட்டீங்களா நீயும், மாப்பிள்ளையும்?''
''அப்பா... நான் சொல்ல போறத பதட்டப்படாம கேளுங்க. நானும், கிரணும் சேர்ந்து பேசி இந்த கல்யாணம் வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டோம். அவனோட பேமிலி கிட்ட சொல்லிடுவான், கிரண். அம்மா தான் கொஞ்சம் கஷ்டம், நான் எப்படியாவது, 'கன்வின்ஸ்' பண்ணிடுறேன். இட் இஸ் ஓவர்!''
''என்னம்மா சொல்ற... என்னவோ ஒரு புடவை பிடிக்கல, திரும்ப கொடுத்து வேற வாங்க போறேன்னு சொல்ற மாதிரி சாதாரணமா சொல்ற. உனக்கு பிடிச்ச பையன, உன் சம்மதத்தோடு தானே நிச்சயம் செஞ்சோம்?''
''அது சரிப்பா... அப்போ பிடிச்சது, இப்ப பிடிக்கல! அவனுக்கும் அப்படித்தான். சில ஆண்டு இருக்க போற புடவையை பிடிக்கலைன்னு திரும்பத் தரும்போது, வாழ்நாள் முழுக்க இருக்க போற பையனோட எனக்கு நிறைய விஷயங்கள் ஒத்துப் போகலைன்னு தெரிஞ்சு பிரியறது தப்பில்லையே... விவாகரத்துக்கு இது தேவலை.''
''என்னவோ ராணி, நீ சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியல. உங்க அம்மா சொல்லும் போதெல்லாம் எனக்கு தெரியல. ஆனா, நிஜமாவே உனக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன்னு தோணுது.
''இல்லாட்டி, எந்த பெண்ணும் சொல்ல தயங்குற ஒரு விஷயத்தை, இவ்வளவு சாதாரணமா, அதுவும் அப்பாகிட்டயே சொல்லுவியா நீ? உன் பேச்சே இன்னைக்கு சரியில்லை. நான் காத்திருக்கிறேன். உன் முடிவை நல்லா யோசிச்சு சொல்லு!''
''அப்பா! இதுல யோசிக்க ஒண்ணும் இல்ல. உங்கள மாதிரி, அம்மா மாதிரி, ஒரு பொருத்தம் இல்லாத கல்யாணத்துல மாட்டிக்கிட்டு கஷ்டப்பட, எனக்கு விருப்பம் இல்ல,'' என்றாள், ராணி.
''நீ செய்தது பெரும் தப்பு, ராணி. அதைப் பத்தி நான் கேட்டா, எங்க உறவை குறை சொல்றது அநியாயம். இப்போ என்ன சொல்ல வர? உன் முடிவுக்கு நாங்க தான் காரணமா?''
''அப்படி இல்லப்பா, ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன். நீங்க இந்த விஷயத்தில் ரொம்ப உணர்ச்சிவசப் படாதீங்க. கொஞ்சம் பொறுமையா யோசிச்சா, உங்களுக்கு நான் சொல்ல வர விஷயம் கண்டிப்பா புரியும்,'' என்று, ராணி பேசிக் கொண்டிருந்த போதே, அழைப்பை துண்டித்தார், சம்பத்.
அதன் பின், கஸ்துாரியிடம் வசவு வாங்கி, நெருங்கிய உறவுக்காரர்களிடம் திருமணம் தடைப்பட்டதை விளக்கி, அந்த நிலையை சமாளித்தார், சம்பத். ஆனாலும், அவரால் அவரது மகளை மன்னிக்க இயலவில்லை.
மகளது அழைப்புகளை அவர் எடுத்து ஓராண்டு ஆகிவிட்டது. கஸ்துாரி கூட, ராணியை மன்னித்து விட்டாள். ஆனால், சம்பத்தால் இன்னும் முடியவில்லை. உறவுகள் மற்றும் நண்பர்கள் என, அனைவரின் பார்வையிலிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
''என்னடா, சம்பத்! நீ செய்யறது எதுவும் சரி இல்லையாமே? தலைமை செயலகத்தில் இருந்து புகார் வந்திருக்கு,'' என்றான், சம்பத்தின் நண்பன், கதிர்.
''அவ கெடக்கா. சும்மா என்னை குறை சொல்றது தான் அவ வேலை.''
''கஸ்துாரிக்காக இல்ல, உனக்காக ஒரு விடுமுறை தேவைப்படுதுன்னு நான் நினைக்கிறேன். எனக்கு ஹிமாச்சல் பிரதேசத்தில், ஒரு, 'பிளாட்' இருக்கு. நான் அப்பப்போ அங்க போயி இருப்பது உண்டு. அந்த வீட்டை, என் நண்பர்களுக்கு மற்றும் மத்த சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு கொடுப்பதும் உண்டு.
''உனக்கு தான் நல்லா சமைக்க தெரியுமே... கொஞ்ச நாள் அங்க போய் இருந்துட்டு வா. உனக்கு நல்ல மாற்றமா இருக்கும். மொபைல் போன் சிக்னல் கூட அங்கு கிடைக்காது. நீ யாரிடமாவது பேச வேண்டுமென்றால் கூட, மலை அடிவாரத்தில் உள்ள, 'கபே'விற்கு தான் வரணும். அங்க சிக்னல், இன்டர்நெட், புக்ஸ் எல்லாம் உண்டு. என்ன சொல்ற?''
கதிரின் துாண்டுதலில், 'புதிய வானம், புதிய பூமி...' என்று, ஹிமாச்சல் புறப்பட்டார், சம்பத். அங்கு, சரோஜா தேவிக்கு பதிலாக அவர் சந்தித்தது, சாருமதியை.
சம்பத் அவ்வப்போது புத்தகம் படிக்க, இணையத்தை பயன்படுத்த, அங்குள்ள, கபேவிற்கு செல்வது வழக்கம். சாருவும் அங்கு, 'லேப்டாப்'புடன் அமைதியாக அமர்ந்திருப்பாள். எப்படியோ இருவரும் பேசத் துவங்கி, நடைப்பயிற்சி, தேனீர் இடைவெளி என, அவர்கள் நட்பு வளர்ந்தது.
தன் மகள் அளித்த ஏமாற்றம், மனைவியுடன் சரியான உறவு அமையாதது என, அவரை அறியாது, நிறைய சொந்த விஷயங்களை, சாருவிடம் பகிர்ந்தார், சம்பத். சம்பத்தின் மனக்குமுறல்கள் அனைத்திற்கும் செவி சாய்த்தாள், சாரு.
ஐம்பது வயதைத் தாண்டி இப்படி ஒரு நட்பு. அதுவும் ஒரு பெண்ணுடன் கிடைத்த நட்பு, சம்பத்திற்கு ஆச்சரியமாக தான் இருந்தது. எல்லாம் நன்றாக சென்ற நிலையில், திடீரென ஒருநாள், பெட்டி படுக்கையுடன், சம்பத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள், சாரு.
''சம்பத்! நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன். 30 ஆண்டு குடும்ப வாழ்க்கை... எண்ணற்ற பண்டிகைகள், குடும்ப விசேஷங்கள், உபசரிப்புகள் என, ஓயாம மிஷின் மாதிரி ஓடிட்டே இருந்தேன்.
''மாமியார், மாமனார், நாத்தனார், என் குழந்தைங்க, அவங்க கல்யாணம், டெலிவரின்னு... இதுக்கு நடுவுல ஒரு உத்தியோகம் வேற. அதெல்லாம் விட்டுட்டு ஓடணும்ன்னு நான் ஒருபோதும் நெனச்சதில்ல. ஆனால், ஒரு பிரேக், ஒரு விடுமுறை, கிடைச்சா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு.
''மூன்று மணி நேர சினிமாவுக்கே இடைவேளை தேவைப்படும் போது, நமக்கு, நம் வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து இதுபோன்ற தனிமை விடுமுறைகள் தேவை தான். ஆனா, அது நம்ம கடமைகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமா தப்பிக்க இல்ல.
''உங்க நட்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. அசோக வனத்துல, சீதை இருந்தது போல இருக்க நெனைச்சேன். உங்க இயல்பு, வசந்தம் மாதிரி என்ன சிரிக்க வச்சது. ஆனா, இது நிரந்தரம் இல்ல. நான் இப்ப திரும்ப என் குடும்பத்தோட வாழ புறப்பட்டுட்டேன்.
''இந்த விடுமுறை எனக்கு தெளிவை கொடுத்துச்சு. உங்களுக்கும் அந்த தெளிவு சீக்கிரம் கிடைக்கணும்ன்னு, கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்,'' என்று கூறி விடைபெற்றாள், சாருமதி.
சாரு கிளம்பிய பிறகு அமைதியாக அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார், சம்பத். அவர் மனதில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால், ஒரு தனிமை குடிகொண்டது.
ராணியிடம் அவர் பேசி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு முன்பு தினமும், 6:00 மணிக்கு அவரை தொடர்பு கொள்வாள், ராணி. அன்று மாலை, 6:00 மணிக்கு, ராணியை அழைத்தார், சம்பத்.
''ராணி, எப்படிம்மா இருக்க?''
''அப்பாடி, கோவம் போச்சா உங்களுக்கு? எங்க என்னோட பேசவே மாட்டீங்களோன்னு பயந்து போயிட்டேன்.''
''ஹா... ஹா... உன்னோட பேசாமல் அப்பா எங்கடா போவேன்? சரி சொல்லு, உன் வாழ்க்கையில் என்ன மாறுதல், ஏதாவது புதுசா கத்துக்கிட்டியா?''
''ஆமாம்பா! இங்க ஒரு டீச்சரிடம் வயலின் கத்துக்கறேன்.''
''கர்நாட்டிக்கா, வெஸ்டர்னா?''
''வெஸ்டர்ன் கிளாசிக்கல் பா.''
''இப்படி நாம ஜாலியா பேசி, ஓராண்டு ஆச்சு இல்ல ராணி? என்னை மன்னிச்சிடுமா. 'ஐ மிஸ் டு டாக்கிங் வித் யூ' எனக்கு என் பக்க நியாயம் மட்டும் தான் இதுவரை புரிஞ்சுது. உனக்கு என்ன கஷ்டம்? நீ, ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு நான் யோசிக்கவே இல்ல. அந்த விதத்துல இந்த விடுமுறை என்னை ஆராய உதவிச்சு. எனக்கு நல்ல தெளிவ கொடுத்தது.''
''பரவால்ல அப்பா. எதுக்கு மன்னிப்பு எல்லாம்? நீங்க நிச்சயம் என்னை புரிஞ்சுப்பீங்கன்னு எனக்கு தெரியும். உங்க விடுமுறை எப்படி போகுது? நீங்க இப்படி ஒரு, 'டிரிப்' தனியா போவீங்கன்னு நான் நெனச்சு கூட பார்க்கல.
''எப்போதும் அம்மா என்ன சொல்வாங்க, சொந்தக்காரங்க என்ன சொல்வாங்க, அப்படீன்னு உங்களுக்கு பிடிச்ச விஷயங்களை செய்யவே ரொம்ப யோசிப்பீங்க. உங்களுடைய இந்த மன மாற்றம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.''
''ஆமாம் ராணி எனக்கு கூட புதுசா தான் இருக்கு.''
''இன்னொரு விஷயம் சொல்லவா? அம்மா கூட உங்களை ரொம்ப, 'மிஸ்' பண்ணறாங்க இப்போ,'' என்றாள், ராணி.
மஞ்சுளா சுவாமிநாதன்