PUBLISHED ON : மார் 17, 2024

மனிதன் எப்போதுமே, பக்தியுடன் இருந்து, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தால், கடைசி காலத்திலும் பகவான் நாமம் வாக்கில் வரும். இது, அடுத்த பிறவியில் சுகம்பெற உதவும்.
அசுரக் குழந்தையாக இருந்தபோதும், விஷ்ணு பக்தியில் தீவிரமாக இருந்து, பகவானின் அருளைப் பெற்றான், பிரகலாதன். இது எப்படி என்றால், முன் ஜென்மாவிலும், விஷ்ணு பக்தனாக இருந்தான், பிரகலாதன்.
ஓரிடத்தில் அமர்ந்து, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டிருந்தான், பிரகலாதன். அந்த சமயம், முனிவர்களை துரத்தி வந்தனர், அரக்கர்கள். முனிவர்கள் பயந்து போய், 'அரக்கர், அரக்கர்...' என்று கூவியபடி, பிரகலாதன் இருந்த இடத்துக்கு ஓடி வந்தனர்.
இவர்களை, அரக்கர்கள் துரத்துவதை கண்ட பிரகலாதனும், 'அரக்கர் அரக்கர்...' என்று கத்தினான். அதேசமயம், அவனுக்கு மரணம் ஏற்பட்டது.
விஷ்ணு பக்தனாக இருந்த புண்ணியத்தால், அடுத்த ஜென்மாவில், பிரகலாதன் என்ற பெயருடன் விஷ்ணு பக்தனாகவும் இருந்தான். ஆனாலும், கடைசி காலத்தில்,'அரக்கன் அரக்கன்...' என்று சொன்னதால் அரக்கர் குளத்தில் பிறந்தான் என்று ஒரு கதை உள்ளது.
இதே போலத்தான் ஜடபரதர், கடைசி காலத்தில் மானையே நினைத்துக் கொண்டு உயிர் விட்டதால், அடுத்த பிறவியில் மானாக பிறந்ததாக, ஜடபரதர் சரித்திரத்தில் உள்ளது.
அதனால், மரண காலத்தில் பகவான் நாமாதான் வாக்கில் வரவேண்டும். இவனால் சொல்ல முடியா விட்டாலும் அருகிலிருப்பவர்கள், 'நாராயணா, கிருஷ்ணா, கோவிந்தா...' என்று சொல்லிக் கொண்டிருப்பர். இதனாலும், மரணமடைபவனுக்கு, அடுத்த பிறவி நல்ல பிறவியாக இருக்கும்.
ஆனால், நடைமுறையில் இப்படி பகவான் நாமாவை சொல்ல முடிவதில்லை. ஆசாபாசங்கள் வந்து விடுகிறது. தன் கடைசி காலத்தில் பெண், பிள்ளைகள் யார் யார் வந்திருக்கின்றனர், யார் யாருக்கு பணம், வீடு, நிலம் இவைகளை எப்படி பங்கிட்டு கொடுப்பது என்ற எண்ணம் மேலோங்கி விடுகிறது. பகவான் நாமாவை எப்படி சொல்ல முடியும்?
'ஏன்டா, இங்கே வா... நான் போய் விட்டால் சாஸ்திரிகளுக்கு ரொம்பவும் செலவு செய்யாதே. நம்ம சுப்பு சாஸ்திரிகிட்ட சொல்லியிருக்கேன். 5,000 ரூபாய்க்கு மேல செலவு செய்யாதே...' என்பார்.
பிள்ளையிடம், 'டேய், கொட்டகையில் இருக்கும் எருமை மாடு, கன்று போட்டு விடும் போலிருக்கு. கன்று போட்டால், நான்கு லிட்டர் பால் கறக்கும். இளம் மாடு தான் அதை விற்று விடாதே. வீட்டுக்கு வைத்துக் கொள்...' என்பார்.
இப்படி சொல்லி முடித்ததும், கண்ணை மூடி விடுவார்.
கடைசி காலத்தில், எருமை மாட்டையே நினைத்துக் கொண்டிருந்தால், அடுத்த பிறவியில் எருமை மாடாய் பிறந்து, 'ஙொய் ஙொய்' என, கத்திக் கொண்டிருப்பார்.
ஏன் இந்த நிலை, கடைசி காலத்தில் ஆசாபாசங்களை விட்டு விட்டு பகவான் நாமாவை சொல்லலாமே! முடியுமா?
பி.என்.பி.,