
முன்கதைச் சுருக்கம்: தனஞ்ஜெயன், தன்னை மிரட்டியதை, தன் அப்பா தாமோதரிடம் கூறினான், விவேக்.
தனஞ்ஜெயன், மூன்றாவது, 'அசைன்மென்ட்'டை முடிக்க விடாமல் தடுக்க, தான் தான், தன், 'அன்டர்கிரவுண்ட்' பார்ட்னர், ராமகிருஷ்ணனின் மகனை, தனஞ்ஜெயன் அக்காவுக்கு திருமணம் செய்து வைக்க, தரகரை ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகிறார், தாமோதர்.
தரகர் கூறிய வரனை, பெண் பார்க்க வர சொல்கின்றனர், தனஞ்ஜெயனும், அவன் அம்மாவும். வீட்டுக்கு வரும் ராமகிருஷ்ணனுக்கு, மலேஷியாவில் இருந்து போன் அழைப்பு வந்தது. ராமகிருஷ்ணனுடைய சட்ட விரோதமான செயல்களை செய்யும், ஏஜென்ட் ஒருவன், போலீசாரிடம் சிக்கிக் கொண்டான் என்ற தகவல் வர அதிர்கிறார், ராமகிருஷ்ணன்.
திகைத்துப் போய், குப்பென்று வியர்த்த வியர்வையை துடைத்துக் கொண்டே, ''என்னய்யா சொல்ற... உயிரே போறதா இருந்தாலும் காட்டிக் கொடுக்கக் கூடாதுங்கிறது தானே நம்ப சிஸ்டம்,'' என்று திணறல்களோடு கேட்டார், ராமகிருஷ்ணன்.
''ஏதோ 'சூப்பர் நார்கோ இஞ்ஜெக்ஷனாம்' அதை போட்டா, போன ஜென்மத்துல என்ன செய்தோம்கறதை என்பதை கூட சொல்லிடுவாங்களாமே?''
''சரி, இந்த செய்தி, 'ஸ்ப்ரெட்' ஆயிடிச்சா?''
''இல்ல, ஐ.பி., விங்குல இருக்கற நம்ப ஆளுங்கள்ல ஒருத்தர் இப்பத்தான் தகவல் கொடுத்தாரு. ஆனா, உங்களை தேட துவங்கிட்டாங்க. நீங்க, இப்ப சென்னையில், உங்க மகன் கல்யாணத்துக்காக போயிருக்கிறதும், கல்யாணம் நின்னு போனதும் தெரிஞ்சுருக்கு.
''அனேகமா, 'இன்டர்நேஷனல்' போலீசோட தகவல், சென்னை சி.பி.ஐ.,க்கு போயிருக்கும். அவங்க, உங்களை தேடி, எந்த நிமிஷமும் வரலாம். நீங்க தலைமறைவாயிடுங்க.''
''இங்க, என் பையனுக்கு வேற ஒரு பொண்ண பார்த்து முடிச்சுட்டேன். இப்ப நான் எப்படி தலைமறைவாகறது?''
''சிக்கினா தொலைஞ்சீங்க... முதல்ல, தப்பி ஓடக் கூடாதுன்னு உங்க காலை உடைச்சுடுவாங்க. கேட்டா, பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததா சொல்லிடுவாங்க. 'பெயின் கில்லர்' போட்டாலும், வலி குறையாது.
''முட்டியை பேத்துடுவாங்களாம். இது மாஜிஸ்திரேட்டுக்கு தெரிஞ்சாலும், அவர் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாராம்.''
''பயமுறுத்தாதய்யா... திடீர்ன்னு சொன்னா, நான் எங்கன்னு போய் ஒளிவேன்?''
''தாமோதர் சார்கிட்ட கேளுங்க, கொல்லிமலையில, 'மொபைல்போன் டவர்' வேலை செய்யாத இடத்துல, அவருக்கு ரகசிய இடம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுவும் மரங்களுக்கு மேல, 'உட் ஹவுஸ்' அங்க போயிடுங்க.''
மலேஷியாகாரர் பேசி முடித்தவுடன், போனை அணைக்கவும், அடுத்த வினாடியே, தாமோதரைத் தான் அழைத்தார், ராமகிருஷ்ணன்.
''என்ன ராமகிருஷ்ணா, உன் மருமகளை பார்த்து பேசிட்டியா. எதுவும் பிரச்னை இல்லையே?''
''இங்க எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, நம்ப ஏஜென்ட்ல ஒருத்தன், ஐ.பி.,காரங்ககிட்ட சிக்கி, என்னையும் காட்டிக் கொடுத்துட்டான். இப்ப தான் மலேஷியாவுல இருந்து போன் வந்துச்சு. மீடியாவுக்கு இன்னும் தெரியாது. இங்க, சி.பி.ஐ.,க்கு நிச்சயம் தகவல் வந்து, என்னை தேட ஆரம்பிச்சிருப்பாங்க. நான் தலைமறைவாகியே தீரணும்.''
''யார் அந்த ஏஜென்ட்? எதுக்கும் துணிஞ்சவங்களுக்கு தானே ஏஜென்சிய கொடுப்போம்... இவன் என்ன இப்படி பண்ணிட்டான்?''
''ஏதோ, 'சூப்பர் நார்கோ இஞ்ஜெக்ஷனாம்' கேன்சருக்கே மருந்து கண்டுபிடிச்சுட்டாங்க. நம்பள மாதிரி, 'டாண்'களுக்கும் கண்டுபிடிச்சிருப்பாங்கல்ல?''
''சரி, என்ன பண்ணப் போற?''
''நீ தான் சொல்லணும். கொல்லிமலை காட்டுக்குள்ள மொபைல்போன் டவரே இல்லாத இடத்துல, உனக்கு மர வீடு இருக்காமே?''
''அப்ப, நீ தலைமறைவாக தீர்மானிச்சுட்டியா?''
''வேற வழி?''
''அப்ப, இந்த கல்யாணம்?''
''கல்யாணத்தை எதாவது சொல்லி, ஆறு மாசம் இல்ல, ஒரு வருஷம் தள்ளி வெச்சுக்கலாம். அதுக்கு சம்மதிக்க லேன்னா போயிட்டு போகுது, நான் மட்டும் போலீஸ் கையில சிக்கிடக் கூடாது. ஏற்கனவே எனக்கு மூட்டு வலி.''
''ஸ்டுப்பிட்... இந்த தனஞ்ஜெயனும் கிட்டத்தட்ட, சி.பி.ஐ., மாதிரி தான். இவனை அடக்க, இந்த கல்யாணம் நடந்தே தீரணும்?''
''எந்த நிமிஷமும் போலீஸ் என்னை வளைக்கலாம்ங்கிற நிலையில, கல்யாணம் எப்படி நடக்க முடியும்?''
''நீ சொல்றதும் சரி தான். அப்ப ஒண்ணு பண்ணு, நான் சொல்ற மாதிரி கேள். கல்யாணமும் வேகமா நடந்துடும். நீயும், 'எஸ்கேப்' ஆயிடலாம்.''
''எப்படி?'' என, ராமகிருஷ்ணன் கேட்க, தாமோதர் தன் மாஸ்டர் பிளானை சொல்லி முடித்தார்.
ராமகிருஷ்ணன் முகத்தில் ஒரு வகை கனத்த அமைதி.
''என்ன ராமகிருஷ்ணா, பேச்சை காணோம்?''
''உன் திட்டம் பிசிறு இல்லாம, 'ஒர்க்-அவுட்' ஆகுமா?''
''அது, உன் கையில தான் இருக்கு. இக்கட்டான நேரங்கள்ல மின்னல் மாதிரி நடந்துக்கிட்டா தான் நீ டாண். இல்லேன்னா வீண்...''
''ரைமிங்கா பேசி, 'டென்ஷன்' பண்றியே, தாமோதர்?''
''நீ தான் இப்ப நேரத்தை விரயம் பண்ணிகிட்டிருக்க. முதல்ல, உன் மொபைல்போன்ல இருக்கிற, 'சிம்'மை கழற்றி எறி. பிறகு, நான் சொன்ன மாதிரி செய்.''
''சரி, முயற்சி செய்யிறேன். ஆமா, நான், 'சிம்'மை கழற்றிட்டா, உன் கூட எப்படி பேசுவேன்?''
''உன் பையன் போன் மூலமா பேசு. அவன் பேரை நான் போட்டு வெச்சிருக்கேன். கவலைப்படாதே.''
''சரி. இப்பவே ஆரம்பிச்சிடறேன். நீ போனை, 'கட்'பண்ணு,'' என்ற ராமகிருஷ்ணன் அடுத்த நொடியே, 'சிம்'மை கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
நெஞ்சைத் தேய்த்தபடியே, திரும்பி வந்து, ஹாலில் சோபாவில் அமர்ந்தார். முகத்தில் அஷ்ட கோணல்கள்.
அதைப் பார்த்து பதைக்க துவங்கினான், மாப்பிள்ளை மோகன்.
''டாட் என்னாச்சு?''
''நெஞ்சு வலிக்குது.''
''என்ன திடீர்ன்னு?''
''நெஞ்சு வலி, என்ன தகவல் சொல்லிட்டா வரும்?'' என்று கேட்டவர், அடுத்த வினாடியே சுருண்டு விழுந்தார்.
''சாருக்கு ஹார்ட் பிராப்ளம் இருக்கா?'' என்று கேட்டான், தனஞ்ஜெயன்.
''அப்பா ஒரு, 'ஹார்ட் பேஷன்ட், பைபாஸ் சர்ஜரி' ஆகியிருக்கு,'' என்றான், மோகன்.
அடுத்த நொடியே படப்படப்பானாள், ராமகிருஷ்ணனின் மனைவி, ரஞ்சிதம்.
''மை காட். அப்ப இது, 'அட்டாக்'கா கூட இருக்கலாம்,'' என்று குனிந்து அவரை உற்றுப் பார்த்தான்.
அவன் உற்றுப் பார்க்கவும், ''எக்ஸாக்ட்லி அதே தான். ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க,'' என்றார், ராமகிருஷ்ணன்.
''ஐயோ என்னங்க இது,'' என்று ரஞ்சிதமும் கதற, எல்லாரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதற்கிடையே, குமார் தன் மொபைல் போனில், கூகுளுக்கு போய் ஆம்புலன்ஸ் என்று டைப் செய்து, அந்த லொக்கேஷனுக்கு அருகிலுள்ள ஆம்புலன்ஸ் எண்ணுக்கு போன் செய்தான்.
சாந்தியும், சுசீலாவும், நல்ல காரியப் பேச்சு நடக்கும்போது இப்படி ஆகிவிட்டதே என்று, 'சென்டிமென்ட்'டாக வருந்தினர். ராமகிருஷ்ணனின் சட்டையை தளர்த்தி விட்டு சோபாவில் காலை நீட்டி படுக்க வைத்தான், மாப்பிள்ளை மோகன்.
ஓடிப்போய், தலைக்கு மேலான மின் விசிறியை, 'ஹை ஸ்பீடு'க்கு மாற்றி, 'ஏசி'யை போட்டாள், ஸ்ருதி.
குமாரும், தனஞ்ஜெயனும் பால்கனிக்கு போய் வெளியே ஆம்புலன்ஸ் வருகிறதா என்று பார்த்தனர். அதுவும், 'உய்ங்ங்... உய்ங்ங்...' சத்தமுடன் வருவது தெரிந்தது.
''டென்ஷனாகாத, தனா... எல்லாம் நல்லபடியா தான் முடியும்,'' என்று, ஆறுதல் சொல்லியபடி, ஆம்புலன்ஸ் ஆட்களை அழைத்து வர ஓடினான், குமார்.
அப்போது, மாப்பிள்ளை மோகன் மொபைல் போனில் அழைப்பொலி. அவன் காதைக் கொடுக்கவும், தாமோதர் தான் பேசினார்.
''அங்கிள் நீங்களா?''
''நானே தான். என்ன உன் அப்பனுக்கு, 'ஹார்ட் அட்டாக்'கா?''
''ஆமாம், அங்கிள். அதுக்குள்ள உங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சு... யார் சொன்னா?''
''ஒதுங்கி வந்து தனியா நின்னு பேசு. அது நிஜ, 'அட்டாக்' இல்லை. அவ்வளவும் நடிப்பு.''
''என்ன அங்கிள் சொல்றீங்க?'' என்றபடியே ஒதுங்கினான், மோகன்.
''உன் அப்பன், 'இன்டர்நேஷனல் போலீசோட, 'ஹிட் லிஸ்ட்'ல மாட்டிட்டான். எந்த நிமிஷமும் அவனை லோக்கல் போலீஸ் வந்து வளைக்கலாம். அவன், இப்ப உடனே தலைமறைவாகணும். அதே சமயம், உங்க கல்யாணமும் நடந்தாகணும்.''
''என்னென்னவோ சொல்றீங்களே, அங்கிள். எனக்கு ஒண்ணும் புரியல.''
''முதல்ல உன் அப்பனோட ஹாஸ்பிட்டலுக்கு போ. அங்க இருக்கிற டாக்டர் எனக்கு வேண்டியவர். ரொம்ப,'சீரியஸ்'ன்னு சொல்வார். உன் அப்பாவும், 'எனக்கு எது வேணா நடக்கலாம். அதுக்கு முந்தி நான், என் மகன் கல்யாணத்தை பார்க்க விரும்பறேன்'னு சொல்வான்.
''அந்த ஸ்பாட்லயே மாலையை மாற்றி, நீயும் தாலியை கட்டிடு. அப்படியே ரெஜிஸ்டர் ஆபீசுக்கு போய் ரெஜிஸ்டரும் பண்ணிடு. எல்லாமே அதிகபட்சம், மூணு மணி நேரத்துல நடக்கணும்.
''உங்கப்பாவை மலேஷியாவுக்கு கூட்டிட்டு போய் அங்க வெச்சு, 'ட்ரீட்மென்ட்' பண்றதா சொல்லி, என் ஆட்கள் கூட்டிக்கிட்டு போயிடுவாங்க. அதன்பின், உன் அப்பன் என், 'கன்ட்ரோலுக்கு' வந்துடுவான். அவனை தலைமறைவா வெச்சுக்கிறது என் பொறுப்பு.''
தாமோதர் சொல்லி முடிக்க, ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர் கச்சிதமாய் ஒருவரால் துாக்கி வரப்பட்டது. அதில், ராமகிருஷ்ணனும் அடங்கினார். அப்படியே துாக்கி செல்ல, கிசுகிசுப்பாய் பேசியபடி பின்னால் சென்றான், மோகன்.
ரஞ்சிதமும், பதட்டம் குறையாமல் ஓடினாள்.
தனஞ்ஜெயன், குமார் இருவரும், சுசீலா, சாந்தி அருகில் வந்து, 'டென்ஷன் ஆகாதீங்க. நாங்க போய் பக்கத்துல இருந்து பார்த்துட்டு தகவல் தரோம்...' என்றனர்.
''என்னடா தனா இது. ஒரு நல்ல காரியப் பேச்சு நடக்கும்போதா இப்படி நடக்கணும்?''
''அம்மா, நீ உடனே, 'சென்டிமென்ட்'ல போய் மாட்டிக்காதே. இன்னைக்கு, 'ஹார்ட் அட்டாக்'குங்கிறது சளி, காய்ச்சல் மாதிரி சாதாரண விஷயமாயிடிச்சு. அதுலயும் இவர், 'ஹார்ட் பேஷண்டாம்' கேட்கணுமா?''
''அதுக்கில்லடா, இப்படி நடக்கவும், 'ஆரம்பமே சரியில்லைன்னு, சாந்தியை வேண்டாம்'ன்னு சொல்லிடுவாங்களோ?''
''ஏம்மா இப்படி எல்லாம் கற்பனை பண்ற? அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. சாந்தி கல்யாணம் கட்டாயம் நடக்கும். தைரியமா இரு. நாங்க வந்துடறோம்,'' என்றபடி, இருவரும் லிப்டை நோக்கி ஓடினர். லிப்டில் ஏறவும், தனாவின் மொபைல் போன் சிணுங்கியது. காதுக்குள் விவேக்.
''என்ன தனஞ்ஜெயன், உங்கக்காவுக்கு அமெரிக்க மாப்பிள்ளைய பார்த்துருக்க போலிருக்கு?''
விவேக்கிடம் ஆரம்பமே அதகளம்!
''ஓ... உனக்கு அதுக்குள்ள தெரிஞ்சுடிச்சா...''
''இப்ப நீ என்ன கலர்ல சட்டை போட்டுருக்கேன்னு கூட எனக்கு தெரியும். கூட யார் உன் ஆருயிர் நண்பன் குமார் என்ற உன் டிரைவரா?''
''இதோ பார், இந்த கல்யாணத்துல எதாவது கலாட்டா பண்ணலாம்ன்னு நினைச்ச... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். என்னோட பதிலடியும் பயங்கரமா இருக்கும்.''
''என்ன பெரிய பதிலடி? நான்லாம் எதுவும் பண்ண வேண்டாம். அதான் பையனோட அப்பனுக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்துடிச்சே... அதுவே எல்லாத்தையும் தடுத்துடும்.
''கல்யாணம்ன்னு பேசும்போதே இப்படின்னா, கல்யாணமாகி வந்தா, இந்த வீடு அவ்வளவுதான்னு அவங்க முடிவு பண்ணி ஓடியே போயிடுவாங்க.
''வந்திருக்கிற, 'ஹார்ட் அட்டாக்' என் வேலையை சுலபமாக்கிடிச்சு. நான் சும்மா வேடிக்கை பார்த்தா போதும். அதை நான் நல்லாவே செய்வேன்,'' என்று போனையும் கத்தரித்தான்.
குமாரும் கவனித்து கச்சிதமாய் கேட்டான்.
''யார் அந்த விவேக்கா?''
''ஆமாம், இங்க நடக்கிற எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசறான். வீட்டுக்குள்ள மைக்ரோ போனோ, இல்ல சி.சி.டி.வி., கேமராவோ வெச்சுட்டானோன்னு சந்தேகமா இருக்கு.''
''என்ன சொன்னான்?''
''இந்த கல்யாணம் நடக்காதாம்,'' பீதியோடு கூறினான், தனா.
— தொடரும்
- இந்திரா சவுந்தர்ராஜன்