sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மாறிய நெஞ்சம்!

/

மாறிய நெஞ்சம்!

மாறிய நெஞ்சம்!

மாறிய நெஞ்சம்!


PUBLISHED ON : மே 12, 2024

Google News

PUBLISHED ON : மே 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகன் வேலைக்கு சென்றிருக்க, வாசலில் ஈசிசேரில் அமர்ந்திருந்தார், சந்திரசேகர். உள்ளே அவர் மனைவி ஜானகி, மருமகளோடு பேசியபடி சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

''அத்தை... காபி துாள் கொஞ்சம் தான் இருக்கு. வாங்கி வைக்க மறந்துட்டேன். சாயந்தரம் காபிக்கு என்ன செய்யிறது... மாமாகிட்ட சொல்லி வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?'' என்றாள், மருமகள்.

''மாமாகிட்டயா, வேண்டாம். தேவையில்லாமல் அவர்கிட்ட திட்டு வாங்கணுமா... ஒண்ணு செய்வோம், இருக்கிற துாளை வச்சு, மாமாவுக்கு காபி போட்டு கொடுத்துட்டு, நாம் டீ போட்டு குடிப்போம். அவனுக்கு போன் பண்ணி, சாயந்தரம் ஆபீஸ் விட்டு வரும்போது வாங்கிட்டு வரச் சொல்,'' என்றார், ஜானகி.

கணவரின் குணம் தெரிந்தது தான். ஆபீசர் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வேலைக்கு போகும் காலத்திலும், ஒரு துரும்பை கிள்ளிப் போட மாட்டார். அவர் உண்டு, அவர் வேலை உண்டு அவ்வளவு தான். அதே அதிகார தோரணை. ஒரு சின்ன வேலை சொன்னாலும் கோபம் வரும். ஜானகி தான் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வாள்.

இப்போது, ஓய்வு பெற்ற பிறகும், 'நான் என்ன உங்களுக்கு எடுபிடி வேலைக்காரனா... சாமான் இல்லைன்னா என்கிட்ட வந்து சொல்றீங்க... உடனே ஓடிப் போய் வாங்கிட்டு வர்றதுக்கு சின்ன வயசா...

'நாலு பேரை வேலை வாங்கிப் பழக்கப்பட்டவனை, 'ரிடையர்ட்' ஆனதால, வேலைக்காரனா நடத்தணும்ன்னு நினைக்கிறீங்களா?' என்று, கோபப்படுவார் என்பதால், இவரிடம் வேலை சொல்லாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தனர்.

வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.

''அத்தை... தோட்டத்தை சுத்தம் பண்ண ஆள் அனுப்பறேன்னு, உங்க மகன் சொல்லிட்டு போனார். அவர் வந்திருக்காரு போலிருக்கு,'' என்றாள், மருமகள்.

மருமகள் சொல்ல வாசலுக்கு வந்தாள், ஜானகி.

'அம்மா, தோட்டத்தில் முருங்கை மரம் ஒடிஞ்சு விழுந்திருச்சு. அப்புறம், செடிகளுக்கு பாத்தி கட்டணும்ன்னு சொன்னியே... என் ஆபீஸ் 'அட்டெண்டரின்' அப்பா, தோட்ட வேலை செய்வாராம். அவரை வரச் சொல்லியிருக்கேன். தேவையான வேலைகளை வாங்கிக்க... போகும் போது, 500 ரூபாய் கொடுத்துடு...' என்று, காலையில் மகன் சொல்லிவிட்டு போனது ஞாபகத்தில் வந்தது.

வாசலில் நிற்பவரை பார்த்ததும், திகைத்துப் போய் விட்டாள். ஒடிந்த தேகம், லேசாக கூன் விழுந்த முதுகு, வயதானவராக தெரிந்தார். இவரா தோட்ட வேலை பார்க்கப் போகிறார் என, தயக்கத்துடன் பார்த்தார், ஜானகி.

''அம்மா... தோட்டத்தைச் சுத்தம் பண்ணணும், முருங்கை மரத்தை வெட்டணும்ன்னு என் மகன் சொன்னான், இந்த வீடு தானே... அரிவாளும், மண்வெட்டியும் கொடுங்க,'' என சகஜமாக பேசியபடி, சட்டையை அவிழ்த்து, பையில் வைத்து, பின்பக்கம் நடக்க ஆரம்பித்தார்.

இந்த வயதிலும் கொஞ்சமும் சோம்பல் படாமல், ஒவ்வொரு வேலையாகப் பார்த்தார்.

''அத்தை, பாவம். வயசானாலும், நல்லாவே வேலை பார்க்கிறாரு,'' என்றாள், மருமகள்.

''ஆமாம். அவருக்கு ஒரு, டீ போட்டுக் கொடும்மா. குடிச்சுட்டு வேலை பார்க்கட்டும்,'' என்றார், ஜானகி.

மரம் வெட்டும் சத்தம் கேட்கவே, ''தோட்டத்தில், யாரு ஜானகி?''

''தோட்டத்தைச் சுத்தம் பண்ண, உங்க மகன் ஆள் அனுப்பியிருக்கான். அவர் தான் முருங்கை மரக்கிளைகளை வெட்டறாரு.''

எழுந்து பின்பக்கம் வந்தார், சந்திரசேகர்.

ஒரு முதியவர், வெட்டிய மரக்கிளைகளை ஓரமாக எடுத்து வைத்து, மண்வெட்டியால் மண்ணைக் கிளறுவதைப் பார்த்தார்.

சந்திரசேகரைப் பார்த்ததும், ''ஐயா வணக்கமுங்க... என் பிள்ளை, உங்க மகன் வேலை பார்க்கும் ஆபீசில், 'அட்டெண்டரா' இருக்கான். அவன் சொல்லி தான் வந்தேன்,'' என்றார்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, புன்முறுவலுடன் அவர் வேலை செய்வதை வேடிக்கை பார்க்க, அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்.

'இவ்வளவு வயசாகியும் திடகாத்திர மனிதரைப் போல வேலை பார்க்கிறாரே... பாவம், வீட்டில் என்ன கஷ்டமோ?' என நினைத்தபடி, ''ஏன்ப்பா, உனக்கு எத்தனை பிள்ளைகள். தோட்ட வேலை தான் உன் தொழிலா. இல்லை வேற வேலை பார்த்தியா?'' என்றார், சந்திரசேகர்.

''ஐயா, எனக்கு தெரிஞ்ச ஒரே தொழில் இதுதாங்க. பண்ணையில் வேலை பார்த்து தான், என் குடும்பத்தைக் காப்பாத்தினேன். கணிசமான வருமானம் வருது. பையனுக்கு கல்யாணமாயிடுச்சு; நாலு வயதில் பேரன் இருக்கான்,'' என்றார்.

''பையன் தான் நல்லபடியாக சம்பாதிக்கிறானே. அப்புறம் வயசான காலத்தில், நீ ஏன் கஷ்டப்படற... வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டியது தானே?'' என்றார், சந்திரசேகர்.

மண்வெட்டியை கீழே வைத்து, தலையில் கட்டிய துண்டால் கைகளைத் துடைத்தபடி, ''அப்படி இல்லைங்க ஐயா, இது வயசு சம்பந்தப்பட்டது இல்ல; மனசு சம்பந்தப்பட்டது. குடும்பத்துக்காக இன்னும் உழைக்கலாம்ன்னு என் மனசு சொல்லுது.

''அதுக்கான தெம்பு, என் உடம்பில் இருக்கு. வேலையை ஈடுபாட்டோடு, சந்தோஷமா செய்றேன். உழைப்பால் வர்ற பணம், என் குடும்பத்துக்கு உதவப் போகுது. பேரனுக்கு தேவையானதை, போகும்போது வாங்கிட்டு போவேன். மிச்ச காசை மருமகள் கையில் கொடுப்பேன்.

''என் பிள்ளையும், 'ஏன்ப்பா, இன்னும் வேலை பார்க்கறே. வீட்டிலேயே இரு, கஞ்சி ஊத்த மாட்டேனா'ன்னு கேட்பான். அதில் எனக்கு உடன்பாடில்லைங்க. இவ்வளவு நாள் நாம் உழைத்து, இந்தக் குடும்பத்தைக் கரையேத்தினோம். இனி, நாம் உழைக்க வேண்டாம்ன்னு நினைக்கலை. என் உழைப்பு, குடும்பத்துக்கு உதவியாக இருக்கு.

''எனக்கு அந்த திருப்தி போதும். உடம்பில் தெம்பும், மனசில் தைரியமும் இருக்கிற வரை வயோதிகத்தை தள்ளி வச்சு, வேலை செய்ய தயாராக இருக்கேன்,'' என்று சொல்லி, அடுத்தடுத்த வேலையில் ஈடுபட்டவரையே பார்த்துக் கொண்டிருந்தார், சந்திரசேகர்.

''அத்தை... ஆபீசில் வேலை இருக்குன்னு, காலையில் சீக்கிரமே போயிட்டாரு. காய்கறி வாங்கி தந்துட்டு போகலை. மாமாவுக்கு கீரை வாங்கணும், அப்படியே ஏதாவது காய் வாங்கிட்டு வரேன்.

''அடுப்பில் குக்கர் இருக்கு, விசில் வந்ததும் நிறுத்திடுங்க. நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன்,'' என்று, பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள், மருமகள்.

''கொடும்மா, நான் சும்மாதானே இருக்கேன். என்ன வாங்கிட்டு வரணும்ன்னு சொல்லு,'' என, மருமகள் கையிலிருந்த பையை வாங்கி கிளம்பினார், சந்திரசேகர்.

மாமியாரும் - மருமகளும், அவரிடம், எப்படி இப்படி ஒரு மாற்றம் வந்தது என, புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us