PUBLISHED ON : மே 12, 2024

மே 12 - அன்னையர் தினம்
எந்த சபையிலாவது
எந்த தருணத்திலாவது
அவளைப் பற்றி
ஓரிரு வார்த்தை
உயர்வாக பேசியிருக்கலாம்!
அன்பு, தயை, இரக்கம் என
அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவளை
'கோவில், தெய்வம், குலசாமி' என
கோடிட்டுக் காட்டியிருக்கலாம்!
சுடு சோறு
சமைத்து பரிமாறியவளை
வார்த்தைகளால் சுடாமல்
வாஞ்சையோடு நடந்திருக்கலாம்!
சூரிய ஒளி படாமல்
சுருண்டு கிடந்தவளை
எழுப்பி அமர வைக்க
என்றேனும் உதவியிருக்கலாம்!
வயது முதிர்வால்
வாயருகே கொண்டு சென்ற
சோற்றுப் பருக்கை
சிந்தியதைக் கண்டு
சீற்றம் கொள்ளாமல் இருந்திருக்கலாம்!
பற்று கொண்டு
பேரன், பேத்திகளை கொஞ்சியவளை
தொற்றுப் பரவுமென
தனி அறையில் விடாமல்
தவிர்த்திருக்கலாம்!
முடியாமல் படுத்துக் கிடந்தவளின்
மல, ஜலங்களை அப்புறப்படுத்தி
படுக்கை விரிப்பை மாற்றி
பணி செய்திருக்கலாம்!
ஒருமுறையேனும் அவள்
தலை சாய்க்க
தன் மடியை
தந்து உதவியிருக்கலாம்!
உயிர் பிரியும் தறுவாயில்
உடனிருந்து
துளசித் தண்ணீர் ஒரு
தேக்கரண்டி தந்திருக்கலாம்!
'அடுத்த பிறவியிலும் நீயே
அன்னையாக
வாய்க்க வேண்டும் தாயே...' என,
வாய் விட்டுக் கதறியிருக்கலாம்!
'இத்தகைய கடமைகளில்
ஏதேனும் சிலவற்றையாவது
ஏக மனதாக நிறைவேற்றினீர்களா?'
என்ற கேள்விக்கு'ஆம்' என, பதிலளிப்பவர் எவரோ
அவரே தெய்வத்திருத் தாயின்
அருளாசி பெற்ற தவப்புதல்வன்!
— பி.சரவணன், சென்னை.