
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 23 வயது பெண். பெற்றோருக்கு, ஒரே மகள். ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். தற்சமயம் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை தேடி வருகின்றனர்.
அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவருடன் பழகி வருகிறேன். அவருடன் மணிக்கணக்காக பேசி, சினிமா உட்பட பல வெளியிடங்களுக்கு சென்று வருகிறேன். ஆனால், எங்களுக்குள் காதல் இல்லை.
நல்ல நண்பராக, நல்ல துணையாக எனக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார். எனக்கு மாப்பிள்ளை பார்ப்பது அவருக்கும் தெரியும். அதுபற்றி அவர், கவலைப்படுவதாக தெரியவில்லை. தொடர்ந்து எப்போதும் போல் பழகி வருகிறார்.
ஒருவேளை, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையுடன் எனக்கு திருமணமாகி விட்டால், இவரது நட்பை இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இவருடனான நட்பே, என் திருமண வாழ்க்கைக்கு பாதகமாக அமைந்து விடுமோ என்றும் நினைக்கிறேன்.
இவரையே திருமணம் செய்துகொண்டால் என்ன என்றும் தோன்றுகிறது. ஆனால், அவர் மனதில் உள்ள எண்ணம் புரியாமல், ஏதாவது கேட்க போய், அதுவே எங்கள் நட்பில் பிளவு ஏற்பட்டு விடுமோ?
மன குழப்பத்தில் இருக்கும் எனக்கு, நல்ல தீர்வு தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
எல்லா நட்புகளிலும், எதிர்பாலின ஈர்ப்பு ரகசியமாக ஊடுருவியுள்ளது. காமம் இல்லாத நட்பும் இல்லை, காமம் இல்லாத காதலும் இல்லை.
நட்பு, காத்திருப்பு பட்டியலில் இருக்கும், ரயில்வே பயணிச்சீட்டு. காதல் என்பது, ஆர்.ஏ.சி., எனப்படும், ரத்து செய்யப்பட்ட பயண சீட்டுக்கு எதிரான முன்பதிவு. திருமணம் என்பது, உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு.
கண்டதும் காதலும், திருமணமும் என்பது, 'தட்கல்' வகை, உடனடி உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு. மொத்தத்தில் நட்பு-, காதல்,- திருமணம்,- கண்டவுடன் காதலும், திருமணமும், இந்த நான்கு நிலைகளிலும் காமம் முக்கியமான கச்சாப் பொருளாகி உள்ளது.
ஒரு பணியில், ஒருவரை சேர்க்கும்போது, நிறுவனம், ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டு நன்னடத்தை பணிக்காலம் அறிவிக்கும். அந்த காலக்கெடுவில் பணியமர்த்தப்பட்ட புதியவர், நிறுவனத்திற்கு திருப்தியாக பணிபுரிந்து விட்டால், அவரது பணி, நிரந்தம் செய்யப்படும்.
அதைப்போல, ஒரு பெண், தன்னிடம் பழகும் ஆண்களை பாதுகாப்பாய் பட்டியலிடுவாள். அவர்களுக்கு நன்னடத்தை காலம், மானசீகமாய் முடிவு செய்திருப்பாள்.
படித்த அழகான பெண்ணுக்கு, நுாறு தெரிவுகள் அவள் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. புத்திசாலித்தனம் மற்றும் சுயநலத்துடன் ஒரு தெரிவை வரிந்து கொள்கிறாள், 'அல்ட்ரா மாடர்ன்' யுவதி.
சரி, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுகிறேன் கேள்...
உனக்கு வரன் பார்ப்பது, நண்பனுக்கு உவப்பானதில்லை என்று தெரிந்து, உள்ளுக்குள்ளேயே மருகுவான்.
காதலை நீ சொல்லட்டும் என அவனும், காதலை அவன் சொல்லட்டும் என நீயும், ஒரு பொய் கால் குதிரை ஆட்டம் ஆடுகிறீர்கள்.
இருவரும் தனியாக அமர்ந்து, மனம் விட்டு பேசுங்கள்.
'நண்பனே, நாம் நண்பர்களாக சில பல ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இப்போது, வீட்டில் எனக்கு வரன் பார்க்கின்றனர். நாம் இருவருமே திருமணமாகாத, திருமணத்திற்கு தகுதியாய் நிற்கும் ஒரு ஜோடி.
'நான் வீட்டில் பார்க்கும் வரனை மணந்து கொண்டால், உன் மனம் காயப்பட்டு, என்னிடமிருந்து விலகி போய் விடுவாயா? 'நாம் வெறும் நண்பர்கள் தான்; என்னிடம் இது மாதிரியாக பேசாதே. என் மனம் புண்படும்...' என்கிறாயா?
'அப்படி இல்லாமல், 'நல்ல நண்பர்கள், கணவன், மனைவியாவது ஒரு நேர்மறையான பக்குவ விஷயம்...' என்கிறாயா? நாம் இருவரும் சேர்ந்து தெளிவான முடிவு எடுத்தால், நம் நட்பு நட்பாகவே தொடரும் அல்லது நட்பு திருமணத்தில் பூரிதமாகும். ஒரு வாரம் யோசித்து, சிறப்பான முடிவெப்போம்...' என, கூறு.
எந்த முடிவுக்கும் தயாராக இரு. மனம் விட்டு பேசினால் எந்த சிக்கலுக்கும், கச்சிதமான தீர்வு உண்டு. உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க, மனதார வாழ்த்துகிறேன்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.