PUBLISHED ON : மே 26, 2024

மே 26 - செண்பகராமன் நினைவு நாள்
திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட, திருவனந்தபுரத்தில், செப்., 15, 1891ல் பிறந்தார், செண்பகராமன்.
திருவனந்தபுரத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் ஆரம்ப கல்வியும், பின், மகாராஜா உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பும் சேர்ந்தார், செண்பகராமன். அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த, தேச பக்தரான கிருஷ்ணசாமி அய்யர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்.
கிருஷ்ணசாமி அய்யரது வீட்டின் சுவரில், வீர சிவாஜி, ராஜாராம் மோகன்ராய், கோபாலகிருஷ்ண கோகலே, லோகமான்ய திலகர் மற்றும் ஜான்சி ராணி ஆகியோரின் படங்கள் காட்சியளிக்கும். அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி ஆர்வத்துடன் கேட்டறிவார், செண்பகராமன்.
அதன் விளைவாக சிறு வயதிலேயே ஆங்கிலேய எதிர்ப்புணர்வும், சுதந்திர வேட்கையும் செண்பகராமன் உள்ளத்தில் ஊற்றெடுத்தது.
ஒருநாள் மாலை, கல்லுாரியிலிருந்து வீடு திரும்பும் போது, மரத்தடியில், அழுக்கேறிய கந்தல் உடையுடன் ஒரு வெள்ளைக்காரர் நடுங்கிக் கொண்டு படுத்திருந்ததை பார்த்தார். அவரை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்துச் சென்று, மூலிகை கஷாயமும், கஞ்சியும் கொடுக்க, குணமானார்.
அவர், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, தாவர உயிரியல் நிபுணர், வால்டர் வில்லியம் ஸ்டிரிக்லாந்த்; ஜெர்மனியின் ஒற்றராகவும் பணிபுரிந்தார்.
அன்று முதல் இருவரும் நண்பர்களாகி, அடிக்கடி சந்தித்து, ஆங்கிலேயரின் மக்கள் விரோத ஆட்சியை பற்றி விவாதிப்பர்.
செண்பகராமனின் ஆங்கிலேய எதிர்ப்புணர்வை புரிந்து, 'ஆங்கிலேயரை எதிர்த்து போராடும் எண்ணம் இருந்தால், என்னுடன் ஜெர்மனிக்கு வா. அனைத்துச் செலவுகளையும் நானே ஏற்று உயர்கல்வியும் படிக்க வைக்கிறேன்...' என்றார், வால்டர்.
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார், செண்பகராமன்.
பெற்றோர் அனுமதியுடன், செண்பகராமன், அவரது நண்பர் டி.பத்மநாபன் பிள்ளை மற்றும் வால்டர் ஆகிய மூவரும், இலங்கை வழியாக இத்தாலி சென்றனர். அங்கு நேப்பிள் நகரிலிருந்த பெரிலிஸ்ட் லேங்குவேஜ் கல்லுாரியில் சேர்ந்து, இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்சு என, பல அந்நிய மொழிகளை கற்றார், செண்பகராமன்.
இத்தாலியில் படிப்பு முடித்து, சுவிட்சர்லாந்து, ஜூரிச் நகரில், பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து, எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்தார். 1914ல், வால்டர் யோசனைப்படி, ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரத் துறையில் மேற்படிப்பு படித்தார்.
தென் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுவிக்க, பெர்லினில், 'சர்வதேச ஆதரவுக்குழு' ஒன்றை உருவாக்கினார். அதற்கு அவரே தலைவரானார். 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை தாரக மந்திரமாக்கினார்.
அந்தக் குழுவில், உறுப்பினர்களாக வீரேந்திரநாத சட்டோபாத்யாயா, மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி, பூபேந்திரதாஸ், மவுலவி பர்க்கத்துல்லா, சந்திரகாந்த் சக்ரவர்த்தி, எம்.பிரபாகர், பிரேந்திர சர்க்கார், ஹேரம்லால் குப்தா ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் ஆங்கிலேயர்களை அறவழியில் எதிர்ப்பதை விட, ஆயுதம் தாங்கி விரட்ட வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார், செண்பகராமன். அதுபற்றி, ஜெர்மனி மன்னர் கெய்சரிடம் கலந்தாலோசித்தார்.
யோசனையை வரவேற்றுப் பாராட்டியதுடன், ஜெர்மனி ராணுவப் படையில் சேருமாறு கூறினார், மன்னர் கெய்சர்.
மகிழ்ச்சியுடன் ராணுவத்தில் இணைந்து, தரைப்படை மட்டுமல்லாமல், கப்பல் படை பயிற்சி பெற்று, கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். தனியாக விமானம் செலுத்துவதிலும் பயிற்சி பெற்று தேர்வானார்.
ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் நிலவிய கடற்போட்டியில் பீரங்கிகள் பொருத்தப்பட்ட, வெகு வேகமாக பயணிக்க கூடிய சிறிய போர்க் கப்பல்களை உருவாக்கியது, ஜெர்மனி. அவற்றில் சிறந்தது, எஸ்.எம்.எஸ்.எம்டன் போர்க்கப்பல்.
சுமார், 3,650 டன் எடை கொண்ட எம்டன் போர்க் கப்பல் மணிக்கு, 25 கடல் மைல் வேகம் செல்லும் திறன் கொண்டது. 10.5 செ.மீ., அளவிலான, 10 பீரங்கி துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பீரங்கித் துப்பாக்கிகள் வெகு துாரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகவும், விரைவாகவும் தாக்கக் கூடியது.
மன்னர் கெய்சர் அரசின் ஆலோசனைக்குழு உறுப்பினரானார், செண்பகராமன். இந்த போர்க்காலத்தில் சென்னை, கல்கத்தா, பம்பாய் மற்றும் அந்தமான் போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தி, ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்ற கருத்தை மன்னருக்கு தெரிவித்தார்.
அதற்கு சம்மதித்து, கேப்டன் வான் முல்லரும், செண்பகராமனும் எம்டன் கப்பல் மூலம் சென்னை சென்று கோட்டையை தகர்க்கவும், அந்தமான் சிறையை தகர்த்து, வீரசவார்க்கர் உள்ளிட்ட தியாகிகளை மீட்கும்படியும் உத்தரவிட்டார், மன்னர் கெய்சர்.
செப்., 22, 1914, செவ்வாய் இரவு, 9:30 மணிக்கு செண்பகராமன் யோசனைப்படி, சென்னையிலிருந்து, 2,700 மீட்டர் துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்டன் போர்க் கப்பல். அதிலிருந்து சுமார் 20 நிமிடம், 130 ரவுண்ட், சென்னை நகரை நோக்கி குண்டு மழை பொழிந்தது.
குண்டுகள் தாக்கியதில் சென்னை உயர் நீதிமன்றத்தின், மிகப் பிரமாண்டமான வெளிச்சுவர் அடியோடு இடிந்து விழுந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை நோக்கி வீசப்பட்ட, மூன்றாவது குண்டு புதை மணலில் சிக்கி, வெடிக்காமல் போனது. அந்த குண்டு இன்றும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மியூசியத்தில் உள்ளது.
ஆங்கிலேய அரசுக்கு இந்த சம்பவம் பலத்த அடி. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அதிர்ந்து போனார். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவு பிறப்பித்தார்.
எப்படியும் தன்னை கைது செய்து விடுவர் என்பதை அறிந்த செண்பகராமன், மாறு வேடத்தில் தப்பி, கப்பல் மூலம் ஜெர்மனி சென்றடைந்தார்.
வெற்றிகரமாக திரும்பிய செண்பகராமனை பாராட்டி, ஜெர்மனி நாட்டின் முதன்மை விருதான, 'வான்' பட்டம் வழங்கி கவுரவித்தார், மன்னர் கெய்சர்.
ஹிட்லரின், நாஜி கட்சியினரால், செண்பகராமன் தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்தவரை, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரின் உடல் நிலை மோசமானது.
மனைவி லட்சுமி பாயை அழைத்து, 'நான் இறந்த பின், என் சாம்பலை சேமித்து வைத்து, இந்திய சுதந்திரத்திற்குபின், இந்தியா எடுத்துச் செல், என் தாயார் அஸ்தி கரைக்கப்பட்ட கரமனை ஆற்றில், ஒரு பகுதியை கரைத்துவிட்டு, மீதியை எங்கள் நாஞ்சில் நாட்டு வயல்களில் துாவி விடு...' என்றார், செண்பகராமன்.
'ஜெய்ஹிந்த்' என்ற மந்திரச் சொல்லை, முணுமுணுத்தவாறு, மே 26, 1934ல், அவரின் ஆன்மா பிரிந்தது. அப்போது, அவருக்கு வயது 43.
இந்தியா சுதந்திரமடைந்த பின், செண்பகராமனின் இறுதி விருப்பப்படி, அவரின் அஸ்தியை தாயகம் கொண்டுவர, லட்சுமி பாய், 19 ஆண்டு தொடர் போராட்டமே நடத்த வேண்டியதாயிற்று.
போராட்டத்திற்கு பின், செப்., 17, 1966ல், பிரதமர் இந்திராவின் உத்தரவு படி, அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது.
- சித்ரா முரளிதரன்