
பகலவன் ஓய்வெடுக்கத் தயாராகும் அந்தி நேர மாலைப் பொழுது...
நெடுஞ்சாலையைக் கடக்க இயலாமல் நீண்ட நேரமாய் நின்று கொண்டிருந்தார், முதியவர் ஒருவர். எதிரும், புதிருமாய் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் வேகம் அச்சுறுத்துவதாக இருந்தது.
ஐந்து நிமிடத்துக்கும் மேலாக, சாலையை கடக்க இயலாமல் காத்திருந்தவர், பொறுமையிழந்து, நடக்க முற்பட்டார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில், முதியவரை மோதி விட்டு, நிற்காமல் பறந்தது.
அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி ஒருபுறமும், செருப்புகள் இன்னொரு புறமும் தெறித்தோடி விழுந்தன. சாலையின் எதிர்ப்புற தேநீர்க் கடையில் இருந்த சிலர், ஓடி வந்தனர்.
முதியவரைத் துாக்கி நிறுத்தி, முகத்தைப் பார்த்த ஒருவன், ''ஐயையோ, நம் வாத்தியாராச்சே... படுபாவிப் பய, நிற்காமப் போயிட்டானே,'' பதறினான்.
சற்று நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த ஒரு வாகனம், நிகழ்விடத்தில் நின்றது. என்ன நடந்தது என புரியாமல், வாகனத்திலிருந்து கீழே இறங்கினாள், கண்ணம்மா.
சிதறிக்கிடந்த மூக்குக் கண்ணாடியைக் கையில் எடுத்து, முதியவரை நோக்கி ஓடினாள். கால் முட்டியிலும், உள்ளங்கையிலும் சிராய்ப்பு அதிகம் இருந்தன. சேலையை கிழித்து, வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைத் துடைத்து, முதியவர் முகத்தைப் பார்த்தாள்.
லேசான மயக்கத்தில் இருந்தவரிடம், ''வீடு எங்கே இருக்கு ஐயா? விலாசம் சொன்னா கொண்டு விடுகிறேன்,'' என்றாள், கண்ணம்மா.
அப்போது, அவளது மொபைல்போன் ஒலிக்க ஆரம்பித்தது. அதை எடுத்துப் பார்க்காமல், முதியவருக்கு முதலுதவி செய்வதில் கவனம் செலுத்தினாள்.
கூட்டத்திலிருந்த மற்றொருவர், ''இவர், எங்க ஊர் வாத்தியார். ஓய்வு பெற்று ஒரு வருஷம் தான் ஆகுது. கொஞ்ச துாரத்தில் தான், அவர் வீடு இருக்கு. காலை - மாலை வேளையில், தினமும் தேநீர் குடிக்க வருவார். படுபாவிப்பய, ஐயாவை மோதிட்டு, நிக்காம வேகமாப் போயிட்டான். ஆனா, அந்த வாகனத்தின் பதிவெண்ணை நான் குறிச்சுட்டேன்,'' என்றார்.
''அப்போ, காவல்துறையில் ஒரு புகார் எழுதிக் கொடுப்போம். நானே எழுதித் தரேன்,'' என்றாள், கண்ணம்மா.
''அதெல்லாம் வேணாம்மா. நான் தான் பார்த்து வந்திருக்கணும்,'' என்றார், வாத்தியார்.
''கால் வீங்குது, ஐயா. உடனே, மருத்துவமனை போகலாம். புறப்படுங்க,'' என்றாள், கண்ணம்மா.
பேசிக் கொண்டிருக்கும் போதே, முதியவருக்கு மயக்கம் அதிகமானது. நடக்க முயற்சித்தார், முடியவில்லை. உடம்பு வியர்த்து நடுங்க ஆரம்பித்தது. உடனே, கூட்டத்திலிருந்த இருவரை அழைத்து, முதியவரைத் துாக்கிக் காரில் உட்கார வைத்து, அவர்களையும் உதவிக்கு ஏறச் சொன்னாள்.
கண்ணம்மாவின் மொபைல்போன் இடைவிடாது தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை அலட்சியப்படுத்தியவள், ''அண்ணா... அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் போங்க,'' என, ஓட்டுனரை அவசரப்படுத்தினாள்.
வேகமாக பயணித்த வாகனம், அடுத்த, 15 நிமிடத்தில், ஒரு மருத்துவமனையின் வாசலில் நின்றது. மீண்டும், கண்ணம்மாவின் மொபைல் போன் ஒலித்தது.
சக்கர நாற்காலி வந்ததும், அதில் அவரை ஏற்றி விட்டு, கை கடிகாரத்தைப் பார்த்துப் பதறினாள்.
''ஐயாவைப் பத்திரமாப் பார்த்துக்கோங்க. ஒரு முக்கியமான வேலை இருக்கு. எனக்காக, எல்லாரும் காத்துக் கிடப்பாங்க. எதுக்கும் இதை வச்சுக்குங்க,'' என, கையிலிருந்த, 3,000 ரூபாயை கொடுத்துவிட்டு, புறப்படத் தயாரானாள்.
லேசாகக் கண் விழித்த வாத்தியார், கை எடுத்து வணங்கி, ''என்னம்மா விசேஷம்?'' என்றார், மெதுவான குரலில்.
''எனக்கு, இன்றைக்கு நிச்சயதார்த்தம், ஐயா. ஏற்கனவே நேரம் ஆயிடுச்சு. தொடர்ந்து அழைப்பு வந்துகிட்டே இருக்கு. நானும் எடுத்துப் பேசலை. எல்லாரும் பதற்றமா இருப்பாங்க. நான் உடனே புறப்படறேன். நீங்க, விரைவில் குணமாயிடுவீங்க; கவலைப் படாதீங்க,'' என்றாள்.
''எந்த இடம், எந்த மண்டபம்?'' ஒருவர் கேட்டதும், இடத்தையும், மண்டபத்தின் பெயரையும் சொன்னாள், கண்ணம்மா.
''அந்த மண்டபம் ரொம்ப பக்கத்துலதாம்மா இருக்கு. 10 நிமிடத்தில் போய் விடலாம். பதற்றப்படாம, பார்த்துப் போங்க,'' அக்கறையாகச் சொன்னார்.
கண்ணம்மா காரில் ஏறியதும், ''என்ன காரியம் செய்திருக்கீங்கம்மா?'' என்றார், ஓட்டுனர்.
''ஏன், என்ன ஆச்சுண்ணா?''
''திருமண மண்டபம் போகணும்ன்னு, வண்டி பதிவு பண்ணுனீங்க. உங்களுக்கு நிச்சயதார்த்தம்ன்னு சொல்லலியே. என்ன இருந்தாலும், எல்லாரும், என்னவோ ஏதோன்னு பதற்றமால்ல இருப்பாங்க. நாம வண்டிய நிறுத்தாமப் போயிருக்கலாம்.''
''என்ன இப்படிச் சொல்றீங்க. நீங்களே பார்த்தீங்கள்ல. பாவம்ண்ணே, அந்தப் பெரியவர். மனுஷனுக்கு மனுஷன் இது கூட செய்யலேன்னா எப்படி? அடிபட்டுக் கிடக்கிற அவரை அப்படியே எப்படி விட்டுட்டு வர முடியும். உங்களுக்கு வேணும்ன்னா காலதாமதம் ஆனதுக்கான பணத்தை சேர்த்து கொடுக்கிறேன்,'' என்றாள், கண்ணம்மா.
''என்னம்மா நீங்க, நிச்சயதார்த்தம்ன்னு சொன்னீங்களே. அதான் எனக்கும் சற்று பதற்றமா இருக்கு,'' என்றார்.
''சரி, சரி... நீங்க நிதானமாப் போங்கண்ணே,'' என சொல்லி, ஆழ்ந்த சிந்தனையில் லேசாகக் கண் மூடினாள், கண்ணம்மா.
கார் மண்டபத்தில் நுழைந்ததும், பதறி ஓடி வந்தாள், கண்ணம்மாவின் அம்மா.
''என்னடி இப்படிப் பண்ணிட்ட. எத்தனை முறை உன்னை மொபைல் போனில் அழைச்சேன். நீ எடுக்கல. அவ்வளவு அலட்சியமாப் போச்சு உனக்கு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க. அவங்களை எப்படி சமாதானம் செய்யறதுன்னு தெரியலை.''
''வழியில் ஒரு விபத்தும்மா, போனை எடுத்துப் பேச முடியலை. வயசானவர், பாவம். அடிபட்டு கிடந்தவரை மருத்துவமனையில் சேர்த்துட்டு வரேன்,'' என்றாள்.
கண்ணம்மா சொல்வதை நக்கலாகக் கேட்டுக் கொண்டிருந்த மாப்பிள்ளை அருண், சட்டென அமைதி இழந்தான்.
''எல்லாரும் இங்க பல மணி நேரமா காத்துக் கிடக்காங்க. நீ என்னடான்னா, இவ்வளவு அலட்சியமா பதில் சொல்றியே,'' என்றான், கோபமாக.
''அதுக்காக, சாலையில் அடிபட்டுக் கிடக்கற முதியவரை, அப்படியே விட்டுட்டு வர முடியுமா? எல்லாரும் வேடிக்கைப் பார்த்துட்டு போற மாதிரி, என்னால கடந்து போக முடியாது.''
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கூடி நின்று, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அருணுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது.
''யாரோ, எவரோ, எப்படியோ போறாங்க. வலியப் போய் சேவை செய்ய, நீ என்ன பெரிய அன்னை தெரசாவா?'' அற்ப கேள்வியைக் கேட்ட அவனைப் பார்த்து முறைத்தாள், கண்ணம்மா.
''என்ன மிஸ்டர், வரம்பு மீறிப் பேசறீங்க. நீங்க ஒண்ணும் எனக்குத் தாலி கட்டின புருஷன் இல்லை. இன்னும் நமக்கு நிச்சயம் கூட ஆகலை, தெரியுமில்ல. என்னைக் குற்றவாளி போல கேள்வி கேட்கிற உரிமை உங்களுக்கு இல்லை.''
''இப்படிப் பேசினா எப்படி... தாம்பூலம் மாத்த குறித்த நல்ல நேரம் முடிஞ்சு போச்சு. உனக்குக் கொஞ்சமும் வருத்தம் இருக்கிறது போலத் தெரியலையே,'' என்றார், அருணின் அப்பா.
''உயிருக்குப் போராடும் ஒருத்தருக்கு, கடந்து போகும் ஒவ்வொரு மணித்துளியும் அதிமுக்கியம். இதுதான் என்னோட எண்ணம். என் நிலைப்பாட்டில் நான் மாற மாட்டேன்.''
விவாதம் முற்றியது. ஒரு நிலையில் அவள் பேச்சை நிறுத்தி, அமைதியாகப் புறப்படத் தயாரானாள்.
''என்ன, பதில் சொல்லாமப் போற. முதல்ல ஒரு, 'சாரி'யாவது சொல்லு,'' அதட்டலாய் கேட்டான், அருண்.
''சாரி சொல்ற அளவுக்கு நான் எந்தத் தவறும் செய்யல,'' என்றாள், அலட்சியமாய்.
'என்ன இவ, நடந்ததுக்கு வருத்தம் கூட சொல்லாம, இப்படிப் பேசறா?' கூடி இருந்தவர்களுக்கு ஒரே வியப்பு.
''மரியாதை இல்லாம, திமிர்த்தனமாப் பேசற இவள் கூட எப்படிடா குடும்பம் நடத்துவ. போயும் போயும் ஒரு அடங்காப்பிடாரிய... நல்ல வேளை, இப்பவே தெரிய வந்தது,'' என்றார், அருணின் அம்மா.
''தர்க்கம் பேசுவது தான் உங்கள் அனைவரின் நோக்கம்ன்னா, நான் எதுவும் பேச விரும்பவில்லை,'' சொல்லும் போதே, அவள் முகம் சிவந்தது. சிறிது நேரம் சூழல் அமைதியாய் இருந்தது.
அப்போது, கையில் பழத்தட்டு, பரிசுப்பொருள் மற்றும் மாலையுடன் சிலர் மண்டபத்துக்குள் நுழைந்தனர்.
அதில் ஒருவர், கண்ணம்மாவிடம் தாம்பூலத்தட்டைக் கொடுத்து, ''நீங்க, நல்லா இருக்கணும் தாயி. என் அப்பா உயிர் பிழைத்தது, உங்களாலத்தான். கொஞ்சம் தாமதிச்சு இருந்தாலும், அவரை உயிரோடு பார்த்திருக்க முடியாதாம்; மருத்துவர் சொன்னார். நல்ல நேரத்துல, தெய்வமா வந்து உதவி செய்திருக்கீங்க. உங்களுக்கு, எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.''
''நன்றி எல்லாம் எதுக்குங்க... வாத்தியார் ஐயா, இப்போ எப்படி இருக்காங்க?'' கலவரச் சூழலிலும் அக்கறையாய் கேட்டாள், கண்ணம்மா.
''எந்திரிச்சு நடக்க ரொம்ப நாளாகுமாம். மற்றபடி நல்லாதான் இருக்கார்.''
உடனே, வந்திருந்த வாத்தியாரின் உறவினர் ஒருவர், ''ஏம்மா, ஏதாவது பிரச்னையா... ஏன் எல்லாரும் பதற்றமா இருக்கீங்க?'' யதார்த்தமாய் கேட்டார்.
நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார், அங்கிருந்தவர்.
''என்னம்மா, இப்படி நடந்து போச்சு. எல்லாம் அந்த விபத்தாலதான்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கும்மா,'' கண்ணம்மாவைப் பார்த்து கவலையாகச் சொன்னார், அவர்.
''நீங்க, வருத்தப்படாதீங்க. வாத்தியார் ஐயாவைப் பத்திரமாப் பார்த்துக்கோங்க. எது நடக்கணுமோ, அது சரியா நடந்துருக்கு,'' என்றாள்.
மாப்பிள்ளை அருண் வீட்டார் எரிச்சலில் இருக்க, கண்ணம்மாவின் வார்த்தைகள் இன்னும் கோபத்தை உண்டாக்கியது. கண்ணம்மாவின் பெற்றோரும், உறவினர்களும், கவலையில் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
காவல்துறை வாகனம் ஒன்று, மண்டபத்துக்குள் நுழைந்தது. உடனே, அனைவரும் பரபரப்பாயினர்.
'நிச்சயதார்த்தம் நின்று போன செய்தி, போலீசுக்கு எப்படித் தெரியும். யார் சொல்லியிருப்பா? இதுவும் நல்லதுக்குத் தான்...' என முணுமுணுத்தாள், அருணின் அம்மா.
''எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொல்லி அடம்பிடிக்கிறா சார், இந்தப் பொண்ணு. உறவுக்காரங்க எல்லாரும் என்ன செய்யிறதுன்னு தெரியாம குழம்பிப் போயிருக்கோம். ஊர்ல எங்களுக்குன்னு மரியாதையும், கவுரவுமும் இருக்கு. என்னன்னு கேளுங்க சார்.''
அருணின் அப்பா காவல் அதிகாரியிடம் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையில் வைத்திருந்த ஒரு தாளை எடுத்துப் பார்த்த அதிகாரி, ''ஆமா, இங்க அருண் யாரு?'' என்றார்.
''இவன் தான் சார், என்னோட மகன். ஏன் சார் கேட்கறீங்க?”
''இவரைக் காவல் நிலையத்துக்கு அழைச்சுட்டு போறோம். எதுவா இருந்தாலும் நீங்க அங்கே வந்து பேசிக்குங்க.''
''சார்... பெண் வீட்டார்கிட்ட எதுவுமே கேட்காம, என் மகனை ஏன் சார் அழைத்துப் போறீங்க?''
''இது அதுக்காக இல்ல, வேறு ஒரு கேஸ்.''
''என்ன சார் சொல்றீங்க. புரியலையே?''
''இன்னிக்கு சாயங்காலம், இதே சாலையில் நடந்த விபத்தில், முதியவரை இடிச்சுத் தள்ளிட்டு, ஒரு கார் நிற்காமப் போயிருக்கு. அங்கிருந்தவங்க வண்டி எண்ணைக் குறிச்சு வைச்சுருக்காங்க.
''வரும் வழியிலிருந்த சில இடங்களில், 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த வண்டி, இந்த மண்டபத்துக்குள் நுழைந்ததும், அந்த காரை ஓட்டி வந்தது, அருண் என்பதும் தெளிவாகத் தெரிய வந்தது.
''நல்ல நேரத்துல அந்த வழியாகப் போன ஒரு பெண், காரை நிறுத்தி, முதியவரை சரியான நேரத்துல மருத்துவமனையில் சேர்த்துருக்காங்க. முதியவரும் இப்போ உயிர் பிழைச்சுக்கிட்டார். இல்லேன்னா, 'கேஸ்' வேற மாதிரி ஆகியிருக்கும்,'' என, காவல் அதிகாரி சொன்னதும், அருண் முகத்தில் வியர்த்துக் கொட்டியது.
உடனே, பெற்றோரை அழைத்த கண்ணம்மா, ''வாங்க புறப்படலாம்,'' என்று, அவசரப்படுத்தினாள்.
காவல் வாகனத்தில், அருணை அழைத்துக் கொண்டு புறப்பட்டார், அதிகாரி. சிறிது நேரம் முற்றிலும் மவுனம். பிறகு சலசலப்பு. படிப்படியாக மண்டபம் காலியாக ஆரம்பித்தது.
வெளியேறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை, கண்ணம்மாவைப் பார்த்து உற்சாகமாய் கையசைத்தது.
தயாராக இருந்த வாகனத்தில், திமிர்ந்த ஞானச் செருக்குடன் தெளிவாக வந்தமர்ந்தாள், கண்ணம்மா. குடும்பத்தாருடன், வாகனம் புறப்பட்டது.
பூபதி பெரியசாமி