sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வீட்டுக்கு வந்த விண்மீன்கள்!

/

வீட்டுக்கு வந்த விண்மீன்கள்!

வீட்டுக்கு வந்த விண்மீன்கள்!

வீட்டுக்கு வந்த விண்மீன்கள்!


PUBLISHED ON : ஜூன் 23, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 23, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லேசான முனகலுடன் அப்பாவின் குரல் கேட்டது. இது, அப்பாவின் உண்மையான குரல் அல்ல. 40 ஆண்டு ஆங்கில புரொபசர் வாழ்க்கையில், அப்பாவுக்கு குரல் தான் ஆதாரம். வகுப்பறையின் கடைசி மூலை வரை சென்றடைகிற, கணீர் தொண்டை அது.

இந்த, 85 வயது மூப்பு, அவரை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறதா? சராசரி மனிதர் அல்லவே அவர். ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி என்று தன்னை, 'ஹீரோ' போல வைத்துக் கொள்பவர். 'டு பீ ஆர் நாட் டு பீ' என்று, ஷேக்ஸ்பியர் வசனத்தை அவர் உச்சரிக்கும்போது, நாடக மேடையைப் பார்ப்பது போல இருக்கும்.

ஓய்வுபெற்ற நாள் முதல், தன் அன்றாட வாழ்க்கையை இன்னும் சிறப்பாக கையாள துவங்கினார். காலை ஒரு மணி நேரம் நுாலகம் போய் வருவார். வரும்போது தினம் ஒரு காய் அல்லது பழம் வாங்கி வருவார்.

'நிவேதா, உனக்காக இந்த வெந்தயக் கீரை, குணாவுக்காக, இந்த ரோஸ் கொய்யாப்பழம்...' என்று முறுவலுடன் மருமகளிடம் கொடுப்பார்.

'ஏன் மாமா, உங்களுக்காக என்ன வாங்கினீங்க?' என்று கேட்பவளிடம், 'எனக்கா? இந்த ரெண்டும் தான்...' என்று சொல்லி சிரிப்பார்.

'போங்க மாமா, நீங்க ரொம்ப மோசம். ஏதாவது வாங்கிட்டு வந்து இதை, 'சூப்' பண்ணு, இதை, 'கிரேவி' பண்ணுன்னு சொல்லிக் கொடுங்க, மாமா. உங்களுக்குப் பிடிச்சதை செஞ்சோம்ன்னு, எனக்கும் சந்தோஷமா இருக்கும்...' என்று, சிரித்தபடி சொல்வாள், நிவேதா.

மாமனாரும், மருமகளும் செல்லமாகப் பேசி சிரிக்கும் காட்சியைப் பார்ப்பதே, குணாவுக்கு அவ்வளவு மன நிறைவாக இருக்கும். அப்பாவுக்குள் இருக்கும் மென்மை தான், அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

வயதானவர்கள் பெரும்பான்மையாகக் காட்டுகிற சிடுசிடுப்பு, எரிச்சல், அலுப்பு என்று, எந்த எதிர்மறை குணங்களும் இல்லாத அப்பா மேல், மேலும் மதிப்பும், மரியாதையும் வளரும்.

''குணா, டாக்டர் வெளியில் வந்துட்டார், வாங்க...'' என்று அழைத்தாள், நிவேதா.

அவன் விரைந்தான். அப்பாவின் அறைக்கதவை மெல்ல சாத்திவிட்டு ஹாலுக்கு வந்தான்.

''குணா... அப்பாவுக்கு பெரிதாக எந்தக் குறைபாடும் இல்லை. 'கொரோனா' வந்துட்டுப் போன பாதிப்பு தான். உலகம் முழுக்க இந்த பக்க விளைவு இருக்கு. அயர்ன் மற்றும் நிக்கல் மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறேன். ஒரு வாரம் பார்க்கலாம், 'இம்ப்ரூவ்மென்ட்' இல்லேன்னா என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்,'' என்றார்.

டாக்டரின் முகமும், இயல்பான புன்னகையுடன் இருந்தது.

''தாங்க்ஸ் டாக்டர். இப்படி இருக்கிறவரே இல்லை. போன வாரம் வரை கூட, சாயங்காலம் பார்க் போனார், ஒரு மணி நேரம் நடந்தார். 4:00 மணி வெயில் எவ்வளவு சுகமா இருக்குன்னு என்கிட்ட சொல்லிட்டே இருந்தார். இப்படி படுக்கையில் இருப்பவரே இல்லை அப்பா. அதான் கவலையா இருக்கு,'' என்றான்.

''இட் ஹாப்பன்ஸ், குணா. அந்த வைரஸ் அவ்வளவு மோசம். அவ்வளவு தான் சொல்ல முடியும். டோன்ட் ஒர்ரி,'' என்றார், டாக்டர்.

அப்பாவிடம், ''ஏதாவது சாப்பிடறீங்களாப்பா? உங்களுக்குப் பிடிக்குமேன்னு,'வெஜ் சூப்' பண்ணியிருக்கா, நிவி...'' என்று பக்கத்தில் உட்கார்ந்தான்.

கண்களைத் திறக்கவே இல்லை, அப்பா. உள்ளே கரு விழிகள் அசைந்தன.

''ஒரு பிரச்னையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாருப்பா. பலகீனம் தான். வைட்டமின், அயர்ன் மாத்திரை எடுத்துக்கச் சொன்னார். சாப்பிட்டா சரியாகிடும். 'ஓகே'யா?'' என்றான்.

அதற்கும் பதில் இல்லை.

காபி கோப்பையுடன் வந்தாள், நிவேதா.

''மாமா, உங்களுக்காக புது காபி பவுடர் வாங்கி, டிகாஷன் போட்டு கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் குடிங்களேன். மாமா, உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.''

கடற்காற்று ஜன்னல் வழியே திடீரென வேகமாக அடித்தது. அவன், எழுந்து ஜன்னல் கதவுகளை இறுக்க மூடினான்.

முன்பு போல படுத்துக் கிடந்தார், அப்பா.

பத்து நாட்கள் ஓடி விட்டன.

அப்பாவிடம் பெரிய முன்னேற்றம் இல்லை. காய்ச்சல் குறைந்து, இருமல் கட்டுக்குள் வந்து விட்டது. மூச்சு விடும் சிரமம் இல்லை.

ஏதோ சாப்பிடுகிறார், காபி குடிக்கிறார்; ஓரிரண்டு வார்த்தைகள் பேசுகிறார்; அவ்வளவு தான். முகத்தில் சிரிப்பில்லை. கண்களில் ஒளி இல்லை. பேச்சில் உற்சாகம் இல்லை.

'அப்பா... என்ன ஆனது உங்களுக்கு? உடல் இயக்கங்கள் சீராக இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ரத்த மாதிரி சோதனைகள் இருக்கிறது. ஆனால், மனதின் வருத்தங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. என்னப்பா இது...' கவலைப்பட்டபடியே இருந்தான், குணா.

வேலைக்கு வந்து விட்டாள், வள்ளிம்மா.

மகனும், மருமகளும் அவரிடம் சொல்லிக் கொண்டு, தத்தம் அலுவலகங்களுக்குச் சென்றனர்.

நிவேதா மிகப் பரிவான குரலில், ''வள்ளிக்கா... அப்பாவுக்கு மதியம் சப்போட்டா பழச்சாறு வெச்சுருக்கேன். அப்படியே பிரிஜ்ல இருந்து எடுத்துக் கொடுத்துடாதீங்கக்கா. அரை மணி நேரம் வெளில வெச்சுருந்து கொடுங்க,'' என்றாள்.

குணா அதைவிட மென்மையாக, ''அக்கா, 12:00 மணி மாத்திரை கொடுக்க மறந்துடாதீங்க. நிக்கல் மாத்திரை, அது முக்கியமானது. முடிஞ்சா, போன் பண்ணி நினைவுபடுத்தறேன்,'' என்றான்.

வண்டி கிளம்பும் சத்தம் லேசாகக் கேட்டது.

அவர் மனம் தவித்தது. எண்ணங்கள் முழுக்க, பூங்காவையே சுற்றிச் சுற்றி வந்தன.

மாலை வெயில் மேலே படுகிற மாதிரியான சிமென்ட் பெஞ்ச், அவருக்காக காத்திருக்கும். கையில் நாலு பொட்டலங்களுடன் அவர் நடந்து வருவார். முகம் அப்படியே அந்த ஆரஞ்சு வர்ண சூரியனாக மாறியிருக்கும். வேர்க்கடலை, அரிசி பொரி, பொரி கடலை என்று பொட்டலங்களைப் பிரித்தவுடன், அந்த ஐந்தும் வரும்.

இரண்டு காக்கைகள், மூன்று புறாக்கள்!

காக்கைகள் வழக்கமானதாக இராது. நல்ல புஷ்டியான உடலும், அடர் சிறகுகளுமாக இருக்கும். கண்கள் அவ்வளவு கூர்மை. ஆனால், அதில் தெரியும் இணக்கம் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அவரைப் பார்க்கும் பார்வையில் அப்படியே பொங்கி வழியும் அன்பு.

இந்த புறாக்கள் அவ்வளவும் செல்லம் அவருக்கு. அதிலும், அந்த வளையம் அணிந்த ஒருத்தி இருக்கிறாளே, அவள் ரொம்பவே பாசக்காரி. காலடியையே சுற்றிச் சுற்றி வருவாள்.

உணவுப் பொட்டலங்கள் காலியான பிறகும் விட மாட்டார்கள், இந்த பாசப்பறவைகள். அந்த பெஞ்சையே சுற்றிக் கொண்டிருப்பர். கடைசியில், அவர் பிரிய மனமின்றிக் கிளம்பும்போது பின்னாலேயே தத்தித்தத்தி நடந்து வருவர்.

'கண்ணுகளா... நாளைக்கு எலந்த பழம் கொண்டாறேன். பார்க் பாட்டிம்மாகிட்ட சொல்லியிருக்கேன். ஏட்டி வெள்ளைப் புறாக்காரி உனக்குப் பிடிக்கும்ல?' என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, இருட்டும் நொடியில் எழுவார்.

பூங்காவில் பெரும்பாலும் நடை பயிற்சி செய்பவர்கள் தான் இருப்பர். அதிலும், நிறைய முதியவர்கள், இவரைப் பார்த்துக் கொண்டே கடந்து போவர். அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

இந்த, ஐந்து ஜீவன்கள் எங்கிருந்து இவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்று ஆராயத் தோன்றும்.

மனதிற்குள் ஒரு சிறுவன் இருக்கிறான் என்று கண்டுபிடித்துச் சொன்ன பறவைகள். பேசாமல் பேசும் அந்த ஆயிரம் சொற்கள். சிரிக்காமல் சிரிக்கும் அந்தப் புன்னகைகள். எப்போது வரும் மாலை நேரம் என்கிற அந்தக் காத்திருப்பு, உணவு தீர்ந்துபோன பிறகும் அவரை விட்டு அகலாமல் வழியனுப்பி விட்டே கூடு திரும்பும், அன்பு ஜீவன்கள்.

பதினைந்து நாட்களாயின.

பாவம் அவர்கள்!

அவரைக் காணாமல் பரிதவித்து போயிருக்கும். யாரிடம் கேட்கும்? அவருக்கே தாங்க முடியவில்லையே! இருளில் அலையும் சுடர் போல மனதில் ஏதோ அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.

யாருக்காவது இதைப் புரிய வைக்க முடியுமா? முடியாது தான். அன்பும், பிரியமும் உணரப்படுபவை. ஓவியம் போல வரைந்து காட்ட முடியாது. எத்தனை மருந்து சாப்பிட்டால் என்ன, சத்துணவு உண்டால் என்ன, பழச்சாறு அருந்தினால் என்ன? மனதின் பாரத்தை இன்னொரு மனது தான் குறைக்க முடியும்.

''அய்யா, மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் முழிச்சுக்குங்க,'' என்று வந்தாள், வள்ளியம்மா.

ஜன்னல் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது.

''யாரது?'' என்றாள்.

ஏதேதோ ஒலிகள். சன்னமாகவும் சற்று பெரிதாகவும் ஏதோ சத்தங்கள். இதுதான் என்று இனம் காண முடியாத குரல்கள்.

''வள்ளி... வள்ளி,'' என்றார்.

குரல் நடுங்கியது. ஆனால், கண்கள் விரியத் திறந்தன.

''என்னங்கய்யா?''

''வள்ளி, ஜன்னல் கதவை திறந்து விடும்மா,'' என்றார் வேகமாக.

''சரி சரி...'' என்று, உடனே கட்டிலைச் சுற்றி வந்து, அவர் அருகில் இருக்கும் ஜன்னலின் நான்கு கதவுகளையும் திறந்தாள்.

அந்த காட்சி!

ஐந்து பேரும் வந்திருக்கின்றனர்!

''அய்யா... இதென்னங்கய்யா, காக்கா, புறா எல்லாம் காம்பவுண்டுல உட்கார்ந்திருக்கு? இத்தினி நாள் இதுங்கள பார்த்ததில்லீங்களே,'' என்று வியந்தாள், வள்ளி.

அவர் முகம் மின்னுகிறது. கண்கள் ஆனந்தமாக நீர்த்திவலைகளை வீசுகின்றன. உள்ளே, ஆயிரம் பூக்கள் பூக்கின்றன.

''அட என் கண்ணுகளா, வந்துட்டீங்களா? இந்த தாத்தனை தேடி வீட்டுக்கே வந்துட்டீங்களா. வாங்கடா வாங்கடா... எல்லாரும் வாங்க,'' என்று சிரித்தார்.

மெல்ல எழுந்து உட்காந்தார்.

''வள்ளி, உடனே கடைக்குப் போய் கடலை, பொரி, பழம் எல்லாம் வாங்கிட்டு வா. அதோ அந்த அலமாரியில் பணம் இருக்கு பார்.''

''இதோங்கய்யா...'' என, அவள் விரைந்தாள்.

காக்கைகள் விர்ரென்று பறந்து வந்து, ஜன்னல் கம்பிகளில் உட்கார்ந்தன. மூக்கை தேய்த்து அவர் முகம் தொட முடியுமா என்று தவித்தன. புறாக்கள் தத்தித் தத்தி கைப்பிடிச் சுவர் மேல் அலைமோதின. அந்த வளையம் போட்ட வெள்ளைக்காரி கண்களையே பார்த்தது.

இப்போது, அவர் எழுந்து நின்றார். கை நீட்டி, அவைகளை வருடினார். உள்ளங்கைகளை கம்பி வழியே நீட்ட, அவர்கள், மாறி மாறி வந்து உட்கார்ந்தனர்.

புதிய பலம் வந்து விட்டது. உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை ரத்தம் புதிய உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது. இருந்த வருத்தங்கள் தலைதெறித்து ஓடின.

அவர் எழுந்து நடக்கத் துவங்கினார்.

வி. உஷா






      Dinamalar
      Follow us