sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆறடி மண்ணுக்கான யாசகம்!

/

ஆறடி மண்ணுக்கான யாசகம்!

ஆறடி மண்ணுக்கான யாசகம்!

ஆறடி மண்ணுக்கான யாசகம்!


PUBLISHED ON : நவ 24, 2024

Google News

PUBLISHED ON : நவ 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்திரத்தை அடக்க முடியாமல் விம்மினாள், வடிவு. கணவன் மாரிமுத்து தன்னை ஏறெடுத்து பார்க்காமல் இருக்கவே, தன் கோபத்தை துடைப்பத்தின் மீது பிரயோகித்தாள். சத்தம் வர பூமித்தாய்க்கு வலிக்குமாறு, 'சரக் சரக்...' என, தரையை பெருக்கினாள்.

மனக்கவலையை மறைக்க முடியாமல், இறுக்கமான முகத்தோடு விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான், மாரிமுத்து.

அப்போது, வடிவின் தங்கை முத்தழகி, வீட்டிற்குள் நுழைந்து, ''மாமா... முதலாளி மகாலிங்கம் உனக்கு திருட்டுப் பட்டம் கட்டிவிட்டானாமே?

''நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி பதிலுக்கு, நாலு கேள்வி கேட்காம சும்மாவே வந்துட்டிங்களாமே. ஏன் மாமா? வாய மூடிக்கிட்டு வந்தால் தவறை ஏத்துக்கிட்ட மாதிரி தானே,'' என்றாள்.

மவுனமாகவே இருந்தான், மாரிமுத்து. மாமாவிடம் இருந்து பதில் வராத கோபத்தில், 'ஹுக்கும்...' என்று, மோவாய்க்கட்டையை தோளில் இடித்தபடி பார்வையை அக்கா பக்கம் திருப்பினாள், முத்தழகி.

''உனக்கு எப்படி இது தெரிந்தது? உனக்கு தெரிந்தால் ஊருக்கே தெரிந்த மாதிரி ஆயிற்றே,'' என, ஆவேசமாக தங்கையிடம் கேட்டாள், வடிவு.

''என்னை விடு; உங்க முதலாளி சம்சாரம் தான், ஊரில் பத்த வச்சு வேடிக்கை பார்த்தது,'' என, தன் அக்காவிடம் ஏளனமாக சொன்னாள், முத்தழகி.

''முத்தழகி, நம்ம தெரு கடைக்கோடி வீட்டு மல்லிகா, 'மாசமா இருக்கிற என் பொண்ணுக்கு உங்க வீட்டு மரத்து மாங்காயில், ஊறுகாய் போட்டுக் கொடு'ன்னு, கெஞ்சினாள்...

''நான் பதமா, பக்குவமா போட்டுக் கொடுத்த ஊறுகாய் ருசியை அவர்கள், அக்கம், பக்கத்தாரிடம் சிலாகித்துப் பேசியுள்ளனர். கடைசியில் அது, முதலாளி அம்மா காதுக்கு எட்டிவிட்டது...

''தன்னுடைய தோப்பில் இருந்து தான், மாங்காய் களவு போய், ஊறுகாயாக மாறிவிட்டது என எண்ணிய அவங்க, முதலாளியிடம் கூறி விசாரிக்க சொல்லி இருக்காங்க...

''முதலாளியும் என்ன நடந்தது என்று பொறுமையாக கேட்காமல், கோர்ட்டில் குற்றவாளியை கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கிற மாதிரியே எங்களைக் கேட்டார்...

''ஐயா, உங்க தோப்பு மரங்கள், அல்போன்ஸ் ரகம். அதன் காய்களில் ஊறுகாய் போட முடியாது. நான் ஊறுகாய் போடுவது, கிளிமூக்கு மாங்காய் ரகம். நான் ஒன்றும் தற்குறி இல்லை; நாலு எழுத்து படிச்சவ தான்...

''இந்த மாங்காய் கதையும், கண்ணகியின் கால் சிலம்புகளை போலத்தான். நாலு பேரிடம் நல்லா விசாரித்து விட்டு வந்து, எங்களை மறுபடியும் கேள்வி கேளுங்க. நாங்க வேலைக்காரங்க, ஏழைங்க என்பதால் தானே, அபாண்டமாக எங்கள் மீது குற்றம் சாட்டுறீங்க...

''எங்க வயித்தெரிச்சலுக்கு காலம் ஒரு நாள் பதில் கூறும் என சொல்லிவிட்டு, விறுவிறுவென அங்கிருந்து வந்துவிட்டேன்...

''ஆனால், உங்க மாமா, ஒரு வார்த்தையும் பேசாமல், மனக்குமுறலை வெளிக்காட்டாமல், 'இனிமேல் இங்கு வேலை செய்ய எங்களுக்கு விருப்பமில்லை...' என்று மட்டும் கூறி வந்துவிட்டார்,'' என்றாள், வடிவு.

''எல்லாரும் இப்போதெல்லாம், ஒன்றிரண்டு தான் பெத்துக்கிறாங்க. ஆனால், நீங்க வரிசையா, நாலு பெத்து வச்சிருக்கீங்க. இனி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?'' என, ஏளனமாக கேட்ட முத்தழகி, வடிவின் மனக்காயத்தை மேலும் கீறி ரணமாக்கினாள்.

''மரம் வெச்சவனுக்கு தண்ணி ஊத்த தெரியும். பக்கத்து தெருவுல தானே நீ இருக்க... என்னைக்காவது என் பசங்க உன் வீட்டிற்கு வந்து, சித்தி சோறு போடுன்னு கேட்டிருக்கா? நீயும் தான் போட்டிருப்பியா?

''கடவுள் தான் உனக்கு புள்ள பாக்கியம் தரவில்லையே... உனக்கு எங்கே குழந்தை, குட்டிகளோட அருமை தெரியப் போகுது,'' என, பேச்சில் நெருப்பை அள்ளி வீசினாள், வடிவு.

அக்கா இப்படியெல்லாம் பேசுவாள் என்பதை எதிர்பாராததால், வேகமாய் அங்கிருந்து கிளம்பினாள், முத்தழகி.

''அடுத்தவங்களோட குறைகளை பூதாகரமாக்கி, இழித்தும், பழித்தும் பேசுவது அவளது பிறவிக்குணம். அதுபோலவே, தன்னுடைய குறைகளையும் மற்றவர்கள் நோட்டமிடுவாங்களே, பலவிதமா பேசுவாங்களேன்னு தெரியவில்லை...

''அவ வயித்துல இன்னும் ஒரு புழு பூச்சி கூட தங்கவில்லையே என, அடிக்கடி வருத்தப்படுவேன். ஆனால், இவ அக்கான்னு கூட பார்க்காம எரியிற விளக்கில் எண்ணெயை ஊத்திட்டு போறா...'' என, தன் கணவரிடம் புலம்பினாள், வடிவு.

''வடிவு, என் மாமனை பார்த்துவிட்டு வருகிறேன்,'' என்றான், மாரிமுத்து.

''தோப்பில் வேலை செய்த ஞாபகம் உங்களை விட்டு இன்னும் முழுசா போகவில்லை போல. சரி சட்டையை போட்டுக்கிட்டு கிளம்புங்க. வேலை சம்பந்தமாக தானே மாமாவிடம் பேசப் போறீங்க. நம்மளோட நல்லதுக்கு நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?'' என்றாள், வடிவு.

''ஊம்... சொல்லு,'' என்றான், மாரிமுத்து.

''நாம இந்த ஊரை விட்டு டவுனுக்கு போயிடலாங்க. ஏன் சொல்றேன்னா இந்த ஊரில் நம்மோட மானம், மரியாதையை காற்றில் பறக்க விட்டுவிட்டார், முதலாளி. ஊரே சிரிக்கும்படி செய்துட்டார். எல்லாரும் நம்மை ஏளனமாக பார்க்குறாங்க...

''ஒவ்வொருத்தரிடமும் போய் நடந்ததை, நம் பக்கத்து நியாயத்தை எடுத்து சொல்லி, விளங்க வைக்க முடியாது. அதனால் தான் சொல்றேன்,'' என, தொண்டையை கனைத்தபடி கூறிய வடிவு, தொடர்ந்தாள்...

''நமக்குன்னு இந்த ஊரில் இருக்கிற ஒரே சொத்து, இந்த ஓட்டு வீடு மட்டும் தான். டவுனுக்கு போனா, நம்ம ரெண்டு பேருக்கும் வேலை கிடைக்கும். நம்ம பிள்ளைகளையும் நல்லா படிக்க வைக்கலாம்...

''சொத்து, சுகத்துக்கு பதிலா, படிப்பை கொடுத்துட்டா, அவங்க பிற்காலத்துல பொழச்சுக்குவாங்க. கடைசி காலத்துல வந்து, இந்த ஊரு மண்ணை மிதிக்கலாம்,'' என்றாள்.

மாரிமுத்து மவுனமாக இருக்க, தொடர்ந்து பேசினாள், வடிவு...

''நாம இங்கேயே இருந்தால், நம்மைப் பற்றி ஏதாவது குத்தலா பேசிப் பேசியே மனசை ரணமாக்குவாங்க, இவ்வூர் மக்கள். காலம் செல்லச் செல்ல எல்லாத்தையும் மறந்துடுவாங்க. நான் சொல்றது சரி தானே,'' என்றாள்.

''யோசிக்கலாம்,'' என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான், மாரிமுத்து.

வடிவின் மனதில் நம்பிக்கை என்னும் வெளிச்சம் பரவியது.

தொழிலாளிகளை நம்பாமலும், சக மனிதர்களாக மதிக்கத் தெரியாமலும் வாழ்ந்த மகாலிங்கம், தொடர்ந்து பல சிக்கலையும், சறுக்கலையும் சந்தித்தார். குடும்பம் தனித்தனியே பிரியும் நிலை ஏற்பட்டது.

டவுனுக்கு குடிபெயர்ந்த, மாரிமுத்துவும், வடிவும் காலில் சக்கரம் கட்டி, ஓடி ஓடி உழைத்து, வாழ்வில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டனர்.

''ஏம்பா, தியாகு... ஒவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து வரும் போதெல்லாம், 'நல்ல இடம் விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கண்ணே...' என கேட்பாய். ஆனால், உடனே வெளிநாட்டிற்கு சென்று விடுவாய்.

''இந்த முறை கண்டிப்பாக உனக்கு ஒரு நல்ல இடத்தை வாங்கி தராமல், வெளிநாடு அனுப்ப போவதில்லை. பக்கத்து கிராமத்தில் ஒரு தோப்பு நல்ல விலைக்கு வருது. வாங்கி போடுப்பா,'' என, தோப்பு விபரங்களை, மாரிமுத்துவின் மகன் தியாகுவிடம் கூறினான், அவன் நண்பனும், வீட்டு புரோக்கருமான குமார்.

குமார் கூறியதை கேட்ட தியாகுவுக்கு, அதிர்ச்சியாக இருந்தது.

'குமார் சொன்னதை பெற்றோரிடமும், மனைவியிடமும் கூறினால், தயங்காமல் வேண்டாம் என்று கூறுவர். பெற்றோருக்கு அவமானத்தை தேடித் தந்த தோப்பு ஆயிற்றே. கடவுள் நமக்கு கொடுத்த இந்த வாய்ப்பை நழுவ விடாமல் வாங்கிவிட வேண்டும்...' என, முடிவெடுத்தான், தியாகு.

தோப்பை வாங்கப் போவது தான் என்று தெரிந்தால், மகாலிங்கம் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என நினைத்தான்.

''காதும் காதும் வைத்தது போல், தோப்பை விலை பேசி, பத்திரப்பதிவு வரை, மகாலிங்கத்துக்கு நான் யார் என்று தெரியாமல் பார்த்துக் கொள்,'' என, குமாரிடம் கூறினான், தியாகு.

பத்திரத்துடன், பெற்றோரை காணச் சென்றான், தியாகு. அதை பார்த்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

'தோப்பை விற்கும் அளவிற்கு முதலாளிக்கு என்ன கஷ்டம்...' என்று ஒரு சேர கேட்டனர்.

''முதலாளி சம்சாரம் இறந்து விட்டார். சொத்துக்காக அவரின் இரு வாரிசுகளும் சண்டை போட்டு அவரை துன்புறுத்துகின்றனர். மனிதனுக்கு அந்த கவலையிலேயே பக்கவாதம் வந்து, தெளிவில்லாமல் பேசுகிறார்,'' என்றான், தியாகு.

'ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் விதி எப்படி விளையாடுகிறது...' என முணுமுணுத்தாள், வடிவு.

''அம்மா... அப்பாவும், நீங்களும் கை, கால்கள் நன்றாக இருக்கும் வரை, நாங்கள் வேலை செய்து கொண்டு தான் இருப்போம் என்பீர்கள். அதனால், தோப்பின் முகப்பில், உங்களுக்கு ஒரு கடை வைச்சு தரேன். நீங்கள் ஆசைப்பட்ட ஊறுகாய் வியாபாரத்தை நடத்துங்க,'' என்றான், தியாகு.

இதைக்கேட்டு, மகனை ஆரத் தழுவிக் கொண்டாள், வடிவு.

ஒரு நல்ல நாளில் கடையை திறந்தனர். 'தோப்பு ஊறுகாய்' என, வடிவின் படத்தோடு ஊறுகாய் பாட்டில்கள், அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் பாட்டிலை யாருக்கு வினியோகம் செய்வது என்ற விவாதம், குடும்பத்தினரிடையே நடந்தது.

அப்போது, அங்கு தன் மகனுடன் வந்த மகாலிங்கம், மாரிமுத்துவின் குடும்பத்தை பார்த்து மிரண்டு போனார். அனைவரும் மவுனம் காத்தனர்.

தியாகுவின் அருகில் வந்து, ''அப்பா கடைசியாக தோப்பை ஒருமுறை சுற்றிப் பார்க்க ஆசைப்படறார்,'' என்றான், மகாலிங்கத்தின் மகன்.

எப்போதும் எல்லாரையும் ஏளனமாக பார்க்கும் முதலாளியின் நிலையைக் கண்டு வருத்தப்பட்டான், மாரிமுத்து.

தோப்பின் உள்ளே சென்ற மகாலிங்கம், தன் மகனிடம் சைகையால் ஓரிடத்தை சுட்டிக் காட்டினார்.

ஏனென்று புரியாமல் பார்த்த தியாகுவிடம், ''இறந்த பின், அவரை, தோப்பிலேயே அடக்கம் செய்து விடுங்கள் என, அடிக்கடி புலம்புவார், அப்பா. தோப்பு கைமாறும் நேரத்தில் கூட, எங்களிடம் புலம்பினார்.

''நாங்களும் சரி என்று தலையாட்டினோமே தவிர, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்து வந்தார் என்பது, இப்போது தான் புரிகிறது,'' என, தயங்கி தயங்கி கூறினான், மகாலிங்கத்தின் மகன்.

மூன்று தலைமுறைகளாக அனுபவித்து வரும் நிலம் என்பதால், முதலாளியின் மனம் தவித்தது.

''கவலைப்படாதீங்க முதலாளி, உங்க விருப்பப்படியே செய்யலாம். தடையேதும் இல்லை,'' என்றாள், வடிவு.

பின்னர், ''என்னுடைய ஊறுகாய் வியாபாரம் அமோகமாய் வளர வாழ்த்துங்கள்,'' என்று கூறி, அவரது கையில் ஒரு பாட்டிலை கொடுத்தாள்.

வீட்டுக்குச் சென்ற மகாலிங்கத்தின் உயிர், துாக்கத்திலேயே பிரிந்தது.

மகாலிங்கத்தின் பிணத்திற்கு மாலையிட்டு வணங்கினாள், வடிவு.

கூடியிருந்த ஊரார் காது பட, ''மண் மீது ஆசை கொண்ட முதலாளி, எங்களிடம் ஆறடி மண் கேட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால், அவரது ஆசைப்படி உடலை, இப்போது எங்களுக்கு உரிமையான தோப்புக்குள் அடக்கம் செய்வது தான் சரி...

''அவரை அடக்கம் செய்யும் இடத்தில், அவரது நினைவாக ஒரு மா மரத்தை நட்டு வணங்கலாம். கொஞ்ச காலமானாலும் அவரது உப்பைத் தின்று வளர்ந்தோம்ல...'' எனக் கூறி, ஊராரை வியப்பில் ஆழ்த்தினாள், வடிவு.



மீனாட்சி அண்ணாமலைவயது: 60, படிப்பு: பி.எஸ்.சி., இளங்கலை விலங்கியல்,சொந்த ஊர்: திருவண்ணாமலை. இதுவரை, 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். எழுத்துப் பணிக்காக, 17 விருதுகள் பெற்றுள்ளார். இச்சிறுகதை போட்டியில், இரண்டு முறை ஆறுதல் பரிசு பெற்றுள்ளார். சமீபத்தில் இறந்த கணவரின் ஆசைக்காக, பல்வேறு சிறுகதைகள் எழுதி, அவருக்கு சமர்ப்பணம் செய்வதே இவரது லட்சியம், என்கிறார்.கதைக்கரு பிறந்த விதம்: எங்கள் குடும்பத்தில் உறவினர்கள் சிலருக்குள் நிலத்தகராறு ஏற்பட்டு, அடிதடி சண்டையில் முடிந்து, குடும்ப பெரியவர்கள் உயிர் பிரிந்தது. அடக்கம் செய்யும் போதும் பிரச்னை ஏற்பட்டது. பெரியவர்களின் உதவியால் முன்னேறிய பெண்மணியின் குடும்பத்தால், சுமூக நிலைக்கு திரும்பியது. இந்நிகழ்ச்சியே கதைக்கருவாக அமைந்தது.






      Dinamalar
      Follow us