/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம் - தியாகத்தை உணர்த்தும் மாதம்!
/
விசேஷம் இது வித்தியாசம் - தியாகத்தை உணர்த்தும் மாதம்!
விசேஷம் இது வித்தியாசம் - தியாகத்தை உணர்த்தும் மாதம்!
விசேஷம் இது வித்தியாசம் - தியாகத்தை உணர்த்தும் மாதம்!
PUBLISHED ON : அக் 13, 2024

அக்., 18 - ஐப்பசி மாத பிறப்பு
பனிரெண்டு மாதங்கள் இருந்தாலும், சில மாதங்களை முக்கியமாக கொண்டாடுகிறோம். சிலவற்றை புனிதமானதாக கருதுகிறோம். நாம் முன்னேற, நலமாய் இருக்க, எப்பேர்ப்பட்ட தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும், புனிதமான மாதம் தான், ஐப்பசி.
இந்த மாதத்தின் முதல் நாளை, ஐப்பசி விஷு என்பர். ஆண்டின் முதல் மாதமான சித்திரைக்கும், ஏழாவது மாதமான ஐப்பசிக்கும் மட்டுமே விஷு பட்டம் உண்டு. விஷு என்ற சொல்லுக்கு, சமம் என்று பொருள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமமாக வரும் மாதங்களாக சித்திரையும், ஐப்பசியும் உள்ளன.
ஐப்பசிக்கு இன்னும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஐப்பசி மாதம் சூரியன், துலாம் ராசியில் நுழைகிறார். துலாம் என்றால் தராசு. தராசு என்பது எடைக்கல்லையும், பொருளையும் சமமாக்கிக் காட்டும் உபகரணம். எனவே, ஐப்பசியை இரட்டை சம மாதம் என்பர்.
இதில், இன்னொரு விசேஷம்... இந்த மாதத்தில், பகலும், இரவும் சம நேரமாக இருக்கும் என்பதால், ஐப்பசியை, 'துலா மாதம்' என்றனர். பஞ்சாங்கங்களில், இதை, துலா மாதம் என்றே குறித்திருப்பர்.
இது ஒரு தியாக மாதம். பெற்ற மகன் என்றும் பாராமல், உலகத்துக்கே துன்பம் விளைவித்த நரகாசுரனை, அவனது தாய், சத்யபாமா அழித்த மாதம் இது தான். எப்பேர்ப்பட்ட பிள்ளையாக இருந்தாலும், அவனைக் காக்கவே தாய் நினைப்பாள். ஆனால், உலகத்துக்கே கேடு விளைவிப்பவனை, ஒரு தாய் அழித்தாள் என்றால், அது எத்தகைய தியாகம்.
இதே மாதத்தில் தான், உலகுக்கு கேடு விளைவித்த, பத்மாசுரனை சம்ஹாரம் செய்தார், முருகப் பெருமான். முற்பிறப்பில், முருகனின் தாத்தாவாக இருந்தவர், சூரபத்மன். தட்சன் என்ற பெயரில், முருகனின் தாய் பார்வதி தேவியை மகளாகப் பெற்றவர், அவர் தான். தன் தாத்தா என்றும் பாராமல், உலகுக்கு கேடு செய்தவரை ஒடுக்கி தியாகம் செய்தவர், முருகன்.
நமக்காக தியாகம் செய்து மறைந்த முன்னோரை, அவசியம் நினைக்க வேண்டிய மாதம், இது. அவர்கள், நம் முன்னேற்றத்துக்காக, பல தவறுகளைச் செய்து கூட பொருள் சேர்த்திருக்கலாம். இதனால், பாவ மூட்டையைச் சுமந்தபடியே இறந்து போயிருப்பர்.
தற்போது, அந்த பாவங்களின் பலனை நரகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் நம் கடமை.
இதற்காகவே, ஐப்பசி மாதத்தில் ஒரு ஏகாதசி வருகிறது. அதை பாபாங்குச ஏகாதசி என்பர். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் (இந்த ஆண்டில் நவ., 12) இந்த ஏகாதசியன்று, நம் முன்னோர் நரக வாழ்விலிருந்து விடுபட வேண்டுவோம்.
அன்று, அகத்தியரால் உருவாக்கப்பட்ட காவிரி அல்லது தாமிரபரணி கரைக்கு சென்று, தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டுக் கடன்களை செய்ய வேண்டும். பாவத்திலிருந்து, அங்குசமாக நின்று பாதுகாப்பதால், இது பாபாங்குச ஏகாதசி ஆயிற்று.
தராசு போல நேர்மையாய், இந்த உலகுக்கு சேவை செய்யவும், பிறர் நலனுக்காக தியாகம் செய்யவும், ஐப்பசியில் உறுதியெடுங்கள்.
தி. செல்லப்பா