/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம் - தாய்ப்பால் விளக்கு!
/
விசேஷம் இது வித்தியாசம் - தாய்ப்பால் விளக்கு!
PUBLISHED ON : டிச 08, 2024

டிச., 13 - திருக்கார்த்திகை
திருக்கார்த்திகை திருநாளின் நோக்கம், இறைவனை ஒளி வடிவில் பார்ப்பது. தான் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை, தானே ஒருமுறை சுற்றிப் பார்த்தார், மன்னர் ராஜராஜ சோழன்.
'கோவிலைக் கட்டி விட்டோம்; ஆனால், இவ்வளவு பெரிய கோவிலை ஒளி வீசச் செய்ய, ஏராளமான விளக்குகள் வேண்டுமே... என் காலத்துக்குப் பிறகும் அவை எரிய வேண்டுமே...' என, நினைத்தார்.
உடனே, அவர் மனதில் பிறந்தது தான், இலவசத் திட்டம்!
அதிகாரிகளை அழைத்து, 'என் காலத்துக்குப் பிறகும், இக்கோவில் ஒளி வீச வேண்டுமென விரும்புகிறேன். விளக்கெரிக்க நெய் தேவை; எனவே, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கோவிலுக்கு நெய் கொடுத்து விட வேண்டும். இதற்காக, அவரவருக்கு, குறிப்பிட்ட சன்னிதிகளை ஒதுக்கி, பிரகாரங்களை பிரித்துக் கொடுங்கள்.
'ஒவ்வொரு வீட்டுக்கும், பசுக்களை இலவசமாக வழங்க வேண்டும். அவை தரும் பாலை நெய்யாக்கி தருவது, மக்கள் கடமை. அவர்களே தினமும் கோவிலுக்கு வந்து, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் விளக்கேற்ற வேண்டும். கோவிலுக்கு தருவது போக, மீதியை அவர்களே பயன்படுத்திக் கொள்ளலாம்...' என, உத்தரவு போட்டார்.
இதன்படி, வீடுகளுக்கு பசுக்கள் வினியோகிக்கப்பட்டன. அதன் மூலம், கோவில்கள் விளக்கொளியில் மின்னின. இந்நிலையில், ஒருநாள் கோவிலுக்கு வந்தார், மன்னர். ஒரு சன்னிதியில் மட்டும் விளக்கு எரியவில்லை.
அது, மாராயன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காரணம் அறிய, அவர் வீட்டுக்கே போய் விட்டார், மன்னர். வீட்டுக்குள் இருந்து வந்தாள், மாராயன் மனைவி. அவளது கையில், ஒரு சிறு குழந்தை... அது, எலும்பும், தோலுமாக உயிரை விடும் நிலையில் இருந்தது.
அவளிடம், கோவிலுக்கு நெய் தராததற்கு காரணம் கேட்டார், மன்னர்.
'மன்னரே... எங்களுக்கு தரப்பட்ட பசுக்கள், காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றைக் காக்க முயன்ற என் கணவரும் இறந்து விட்டார். நான், என் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய தாய்ப்பாலை விற்று கிடைத்த பணத்தில், நெய் வாங்கி விளக்கேற்றி வந்தேன்.
'இப்போது, தாய்ப்பாலும் வற்றி விட்டது. என்ன செய்வதென தெரியவில்லை. நான் செய்த குற்றத்துக்கு, என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன், மன்னா...' என்றாள்.
இதைக் கேட்டதும் கண்கலங்கி விட்டார், ராஜராஜ சோழன். குழந்தையை வாரியெடுத்து அணைத்தார்.
பெற்ற பிள்ளையின் உயிரும், தன் உயிரும் போனாலும் பரவாயில்லை என்று, தாய்ப்பாலையே விற்று விளக்கேற்றிய, அந்த மாதரசியின் பெயரை, கல்வெட்டில் பதிக்க உத்தரவிட்டார். அவளை திருமஞ்சன -அபிஷேக பணியாளராகவும் நியமித்தார்.
விளக்கு ஏற்றுவதன் அருமை புரிகிறதல்லவா...
அக்காலத்தில் கோவில்களை, அரசும், மக்களும் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்தனர். அதனால், இந்த வரலாற்றைப் படித்ததுடன் நின்று விடாமல், கார்த்திகை தீபத் திருநாளை அர்த்தமுடன் கொண்டாடுவோம்!
தி. செல்லப்பா