sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

யாருக்கு ஓட்டு?

/

யாருக்கு ஓட்டு?

யாருக்கு ஓட்டு?

யாருக்கு ஓட்டு?


PUBLISHED ON : ஏப் 07, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதியம் சாப்பிட்ட பின், சாப்பிடும் மேஜையை துடைத்து, 'புராஜெக்ட்' எழுத உட்கார்ந்தாள், தீப்தி.

அன்று, தேர்தல் பரிசுகளாக வந்திருந்த, வெள்ளி விளக்கையும், 3,000 ரூபாயையும், பெண்ணிடம் பெருமையுடன் காட்டி, 'பீரோ'வில் பூட்டினாள், தீப்தியின் அம்மா.

இன்னும் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரமே உள்ள நிலையில், தினமும் பணமும், பரிசுப் பொருளும் வந்து குவியும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை, தீப்தியின் அம்மாவுக்கு.

சென்ற முறை, தேர்தல் வந்தபோது, கடைசி இரண்டு நாளில் மட்டும், பிரதான கட்சிகள் கொடுத்தது, அவளுக்கு தீபாவளி செலவை ஈடு கட்டியது. 'இந்த முறையும் அதற்கு குறையாமல் தான் வரும்...' என, தெருவில் அனைவரும் பேசிக் கொள்கின்றனர்.

அவள் வருத்தமெல்லாம், எட்டு ஓட்டு இருக்கும் எதிர் வீட்டுக்காரி, போன முறை பரிசாக வந்த பணத்தில், 'வாஷிங் மிஷின்' வாங்கி விட்டாள். இந்த முறை, 'ப்ரிஜ்' வாங்க போவதாக பேசிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால், இவள் வீட்டில் மொத்தமே, மூன்று ஓட்டு தான். எதிர் வீட்டுக்காரிக்கு கிடைப்பதில் பாதி கூட, தனக்கு கிடைப்பதில்லையே என, பெருமூச்சு விட்டாள்... 'வயது போன காலத்தில், குடும்பம் சின்னதாக இருக்குன்னு யோசிப்பதாவது...' என, தன்னைத்தானே பரிகசித்து சிரித்தாள்.

சமையலறை கதவை இழுத்து சாத்தி, பாயை விரித்தவள், அதிசயமாக தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளிடம், ''என்னம்மா?'' என்றாள்.

''ஒண்ணும் இல்லைம்மா... காலேஜ்ல ஒரு விஷயம், விவாதமா ஓடிட்டிருக்கு... உங்கிட்ட சொல்லி தீர்வு கேட்கலாமான்னு பார்த்தேன்!''

''ஏதேனும் பிரச்னையாம்மா?''

''அதெல்லாம் இல்லைம்மா... கொஞ்சம் உட்காரேன்!''

வயசு பெண்களை வைத்திருந்தால், எப்போதும் எதாவது பயம் தான். கவலையோடு உட்கார்ந்தாள், தீப்தியின் அம்மா.

''சொல்லும்மா!''

''காலேஜ்ல, மாணவர் தலைவர் தேர்தல் வருதும்மா... யாருக்கு ஓட்டு போடறதுங்கறதில, நண்பர்களோட சின்ன சண்டை!''

''யாரோ ஒருத்தருக்கு போட வேண்டியதுதானேம்மா... இதுல என்ன பிரச்னை?''

''இருக்கும்மா... உனக்கு, கீர்த்தி தெரியுமில்லே, எங்க சேர்மன் பொண்ணு... அவ, தேர்தல்ல நிற்கிறா... அவளுக்கு, ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும்ன்னு நிறைய பெண்கள் முடிவு பண்ணியிருக்காங்க.''

''உனக்கு, அவளை பிடிக்கலையா?''

''அப்படியில்லேம்மா... அவளுக்கு ஓட்டு போட்டா, காலேஜ்ல ஏதாவது பிரச்னை வரும்போது, மாணவர்களோட பிரச்னையை எடுத்து பேச, தைரியமா ஒரு ஆள் இருப்பா...

''போன முறை, மத்த கல்லுாரி மாணவர்களோட போராட்டத்துக்கு நாங்க ஆதரவு தெரிவிச்சப்ப, கல்லுாரி நிர்வாகத்துல கூப்பிட்டு எச்சரிச்சாங்களே... அந்த மாதிரி சந்தர்ப்பத்துல, நிர்வாகத்துக்கு தெரிஞ்ச ஒருத்தர், மாணவர் அணி தலைவரா இருந்தா வசதின்னு, ஒரு குழுவினர் சொல்றாங்க.''

''அப்புறம்?''ஆர்வத்துடன், தீப்தி சொல்வதை கேட்க ஆரம்பித்தாள், அவள் அம்மா.

''இன்னொரு பெண் இருக்காம்மா... ரொம்ப பணக்கார பொண்ணு!''

''எல்லாருக்கும் பிரியாணி வாங்கி தருவான்னு சொல்வியே...''

''ஆமாம்... அவளே தான்! ஐஸ்கிரீம், பிரியாணின்னு நிறைய பணம் செலவழிப்பா... 'கேன்டீன்'ல இருக்கும்போது, எல்லாருக்கும் அவ தான் காசு வெட்டுவா... அதனால, அவளுக்கு நன்றியோட இருக்கணும்ன்னு ஒரு கூட்டம், 'கேன்வாஸ்' பண்ணுது.''

''அது கூட நியாயம் தான்.''

''அது மட்டும் இல்லைம்மா... நம்ம சங்கீதா இருக்காளே,'' என்றவளிடம்...

''உன் ப்ரெண்டா... அவ, தேர்தல்ல நிற்கறாளா?''

''அவ இல்லைம்மா... அவளோட சொந்தக்கார பெண், எங்க சீனியர்... நீ பார்த்திருக்க மாட்டே!''

''சரி... சொல்லு!''

''அவளுக்கு ஓட்டு போடணும்ன்னு, சங்கீதா எல்லார்கிட்டயும் கேட்டுட்டு இருக்கா... தேர்தல்ல நிக்கறவங்கள்ள அவ மட்டும் தான் நம்ம ஜாதி பொண்ணு... அதனால, அவளுக்கு ஆதரவு தரணும்ன்னு கேட்கறா.''

''சரியா போச்சு போ... வேற யாரும் நிக்கலையா?''

''ம்... இன்னும் ஒரு பொண்ணு இருக்காம்மா, எல்லாருக்கும் உதவி செய்வா... நல்லா பேசுவா, தைரியசாலி, நியாய, அநியாயம் தெரிஞ்சு நடப்பா... நல்லாவும் படிப்பா,'' என்றாள்.

''அப்ப அவளுக்கே போடேன்!''

''அப்படியா?''

''தலைவர்ன்னு தேர்ந்தெடுக்கும்போது, பாரபட்சம்லாம் பார்க்கக் கூடாது... உறவுக்காரங்க, பணக்காரங்க, அதிகாரத்துல இருக்கறவங்களுக்கு தெரிஞ்சவங்க அப்படின்னெல்லாம் பார்க்காம, தகுதியானவங்களா, தேர்ந்தெடுத்த பதவிக்கு லாயக்கானவங்களான்னு தான் பார்க்கணும்... அது தான் முறை,'' என்றாள், தீப்தியின் அம்மா.

''அம்மா... நிஜமாவா சொல்றே?''

''பின்ன... தகுதியானவங்க அதிகாரத்துல இருந்தா, எல்லாருக்கும் நல்லதுதானே...'' பேசும்போதே உள்ளே ஏதோ இடறுவது போல இருந்தது, அவளுக்கு.

''இந்த நடைமுறை, கல்லுாரி தேர்தலுக்கு மட்டும்தானாம்மா?''

''நீ என்னம்மா சொல்றே?''

''அப்ப, இவங்க குடுத்தாங்க, அவங்க குடுத்தாங்கன்னு, பரிசுகளை வாங்கி, நீ, 'பீரோ'ல அடுக்கறது முறைதானாம்மா?''

திடீரென மகளிடமிருந்து வந்து விழுந்த சாட்டையை எதிர்கொள்ள முடியாமல், ''என்ன... என்ன கேட்டே...'' தடுமாறினாள்.

''சொந்த ஜாதி பாசம், அவங்களுக்கு ஓட்டு போடணும்... அதிகாரம் படைச்சவன், எதாவது பிரச்னை வரும்போது, துணையா இருப்பான். அவங்களுக்கு ஓட்டு போடணும்... பணக்காரன், பணம் கொடுக்கறான். கை நீட்டி வாங்கறோம். அவங்களுக்கு ஓட்டு போடணும்...

''அம்மா... நீ ஓட்டு போடலம்மா, நல்ல விலை வாங்கிட்டு, உன் ஜனநாயக உரிமையை விற்கறேம்மா... தவறான ஆட்கள், அதர்மமா உங்களை கேட்கிறாங்கன்னு தெரிஞ்சும், அவங்களுக்கு ஓட்டு போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு சொல்றேம்மா?''

''இதுல தவறு ஒண்ணும் இல்லைம்மா... அவங்க குடுக்கறது நம்ம காசு, நமக்கு உரிமையான காசு!''

''அப்படீன்னா, அதை உரிய முறையில குடுக்கணும்மா... இப்படி கொல்லைபுறம் வழியா இல்லை... லஞ்சம்மா, ஓட்டுக்காக தரும் லஞ்சம்... இது, அவங்க போடற பிச்சைம்மா... கவுரவமா, உழைச்சு, மானம், மரியாதையோட வாழ்ந்துட்டிருக்கற மக்களை, பிச்சைக்காரங்களா நினைச்சு, அவங்க விட்டெறியற ரொட்டித் துண்டும்மா இது...

''இந்த இலவசம் ஒரு அவமானம்மா... இவங்க, மக்களுக்கு சேவை பண்ணலம்மா... தன் குடும்பத்துக்கு சேவை பண்றாங்க... சுருக்கமா வியாபாரம் பண்றாங்க... முன்ன போட்டு, பின்ன எடுக்கறாங்க... அதுக்கு, நாம் உதவி பண்ணணுமா சொல்லு... சாப்பிட்ட மீதியை வாசல்ல இருக்கறவங்களுக்கு போடறது மாதிரி, அவங்க நம்மகிட்ட திருடின பணத்தை, நமக்கே பிச்சையா போடறாங்கம்மா!''

''நாம ஓட்டு போடாட்டாலும், அவங்க பலசாலிகள்மா... எப்படியும் ஜெயிச்சிடுவாங்க!''

''கரெக்டா சொன்னேம்மா... 'எப்படியும்' அவங்க ஜெயிச்சுடுவாங்க, நாம தான் தோத்திடுவோம்... 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்'ன்னு, கலெக்டர் சகாயம் சொன்னாரே... அதை நெனைச்சுப் பார்க்கணும்மா! லஞ்சம் வாங்கிட்டு, ஓட்டு போடாம, மனசாட்சிபடி ஓட்டு போடணும்ன்னு முடிவெடுப்போம்மா...

''நம் முடிவை எல்லாருக்கும் சொல்வோம்... இதே மாதிரி நினைக்கற நேர்மையானவங்க, நல்லவங்க இன்னமும் நிறைய பேர் இருக்காங்க... எல்லாரும் சேர்ந்து உறுதியா நின்னா, நல்லது நடக்கும்மா...

''மகிழ்ச்சியா வாழற நாடுகள்ன்னு, ஐ.நா., சபை எடுக்கிற கணிப்புல, இந்தியா, 150வது இடத்துல தான் இருக்கும்மா... 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...'ன்னு அன்னிக்கு பாடினோம்... எல்லா வளமும் கொள்ளையடிக்கப்பட்டு, மக்கள், ஆதரவற்ற, அநாதைகளா, ஊழலிலும், லஞ்சத்திலும் திளைக்கும் அரசை அடக்க முடியாதவங்களா, போராட்ட வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க...

''நல்லவங்க, நேர்மையானவங்க, அதிகாரத்துக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்ய, நாம சந்தர்ப்பம் தரணும்மா... தவறானவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு, நாளைக்கு போராட்டம், கடையடைப்புன்னு பண்றதுல அர்த்தமே இல்லைம்மா,'' என்றாள்.

''நீ சொல்றதும் சரிதான்மா... என்னவோ காசில்லாம கஷ்டப்படறதால யாராவது குடுத்தா வாங்கிக்கிறோம்.''

''காசு இல்லாட்டாலும், நேர்மையா இருந்து, ரெண்டு தேர்தல சந்திச்சா போதும்மா, இவங்க கொட்டத்தை அடக்கிடலாம்... இனிமே வாங்காதேம்மா, வாங்கினதையும் திருப்பி குடுத்துடு... 'என் ஓட்டு விற்பனைக்கு இல்லை...'ன்னு, நாம ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்க வேண்டிய கால கட்டத்துல இருக்கோம்மா... நாம நேர்மையா இருந்தா தான், நல்ல சமுதாயம் மலர முடியும்... அப்புறம் உங்கிட்ட, 'சாரி' கேட்கனும்மா?''

''அந்த காலேஜ் மேட்டர்தானே... இப்ப தான் அதை யோசிச்சேன். வருஷம் முடியும்போது, காலேஜ் தேர்தல் எப்படி வரும்ன்னு.''

''அதான், 'சாரி' சொல்லிட்டேனே... காலேஜ்ல நாங்கல்லாம் ஒரு முடிவு செஞ்சிருக்கோம். 'முடிஞ்ச வரை மக்கள்கிட்ட எடுத்து சொல்லி, நேர்மையான முறையில தேர்தலை சந்திக்க அறிவுறுத்தணும்...'ன்னு!''

''அதுல, இந்த அம்மாவையும் சேர்த்துக்குங்க,'' என்று சிரித்தாள், அம்மா.

இந்த சிரிப்பு, நாளை நாடெங்கும் எதிரொலிக்கட்டும்.

- மல்லிகா குரு






      Dinamalar
      Follow us