தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததும் தெரியாததும்


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெரியாத விஷயங்களைப் பற்றி, ஏராளமாக பேசுவோம்; அனைவரையும் குற்றம் கூறி, தீர்ப்பு கூட வழங்கி விடுவோம். ஆனால், எதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறோமோ, அதைப் பற்றி, நமக்கு ஒன்றும் தெரியாது என்பதே உண்மை.

கங்கைக்கரையில் இருந்து, 6 கி.மீ., தொலைவில், சத்தியவிரதம் எனும் ஊரில், தவசீலர் ஒருவர், தினமும் ஹரி கதைகளைக் கூறி வந்தார். அதை பலரும் பக்தியோடு கேட்டு, பக்குவப்பட்டனர். அவர்களில் ஒருவர் புண்யதாமா!

இல்லறவாசியான புண்யதாமா, தினமும், ஹரி கதைகளைக் கேட்பதும், வீடு தேடி வரும் அதிதிகளுக்கு, உணவிட்டு உபசரிப்பதுமாக வாழ்ந்து வந்தார். அவருடன், அவர் மனைவியும் பணிவிடை செய்து வந்தாள்.

ஒருநாள், கங்கையில் நீராடுவதற்காக வெகுதொலைவில் இருந்து இருவர் வந்தனர். அவர்களை வரவேற்று, உபசரித்து, தன் வீட்டில் தங்க வைத்தார் புண்யதாமா.

உணவுண்ண அமர்ந்த அதிதிகள், 'இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரம் இருக்கும்?' எனக் கேட்டனர்.

'பக்கத்தில் இருப்பதாக சொல்கின்றனர். பல வருஷமாக இங்க இருக்கேனே தவிர, ஒரு நாள் கூட கங்கையில் நீராடியதில்லை...' என்றார் புண்யதாமா.

அதைக் கேட்டதும், 'கங்கைன்னு சொன்னாலே, பாவங்கள் போய்விடும்ன்னு மகான்கள் சொல்றாங்க. கங்கைக்கு இவ்வளவு பக்கத்தில் இருந்தும், கங்கையில் நீராடாத இவன் வீட்டில், நாம அதிதிகளா தங்கி, பெரும் பாவம் செய்துட்டோமே... உடனே போய் கங்கையில் நீராடினால் தான் இப்பாவம் போகும்...' என்று கூறி, வேகமாக எழுந்து, கங்கையை நோக்கி நடந்தனர் அதிதிகள். இதனால், மன வேதனை அடைந்தனர், புண்யதாமாவும், அவர் மனைவியும்!

அதிதிகள் கங்கையை நெருங்கிய போது, தண்ணீர் இருந்த சுவடு கூட இல்லாமல், கங்கை வறண்டு கிடந்தது. திகைத்துப் போன அதிதிகள், மனம் வருந்தி, 'தாயே கங்காதேவி... நாங்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தால், எங்களை மன்னித்து, அருள் செய்...' என, மனம் உருகி வேண்டினர்.

அடுத்த நொடி, அவர்களுக்கு காட்சியளித்த கங்காதேவி, 'பக்தர்களே... ஹரி கதை கேட்பதையே வாழ்க்கையாக கருதும், புண்யதாமாவின் பாதங்கள், என் மீது படாதா என, நான் காத்திருக்கிறேன். ஆனால், நீங்கள் அவரின் மனதை நோகச் செய்து விட்டீர்கள். அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்; அப்போது தான், உங்கள் கண்களுக்குத் தென்படுவேன்...' என கூறி, மறைந்தாள்.

உடனே, அதிதிகள், புண்யதாமாவின் வீட்டிற்கு ஓடி, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'பாகவதோத்மரே... உங்களின் பெருமை அறியாமல் பேசி விட்டோம். எங்களை மன்னியுங்கள்...' என வேண்டினர். புண்யதாமாவும் மன்னித்தார். அதிதிகளும், கங்கையின் அருளைப் பெற்றனர்.

புண்யதாமாவின் நற்குணங்களையும், நற்செயல்களையும் அறியாமல், அதிதிகள் பேசியதைப் போலவே, நாமும் விபரமறியாமல், அனைவரையும் குற்றம் கூறுகிறோம். அத்தகைய தவறை நாம் கைவிட்டால், தெய்வமும் நம்மைக் கைவிடாது!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

யானேதும் பிறப்பு அஞ்சேன்

இறப்பதனுக்கு என் கடவேன்

வானேயும் பெறில் வேண்டேன்

மண் ஆள்வான் மதித்தும் இரேன்

தேனேயும் மலர்க் கொன்றைச்

சிவனே எம்பெருமான் எம்

மானே உன் அருள் பெறும் நாள்

என்று என்றே வருந்துவனே!

விளக்கம்: தேன் நிறைந்த கொன்றை மாலையை சூடிய சிவபெருமானே... நான் பிறவிக்கு சிறிதும் பயப்படவில்லை. இறப்புக்கு நான் என்ன செய்ய முடியும். தேவேந்திர பதவி கிடைத்தாலும், அது எனக்கு தேவை இல்லை. அப்படியிருக்கும் போது, மண்ணுலகப் பதவியையா நான் விரும்புவேன். இல்லை ஈசனே! உன் அருளைப் பெறும் நாள் என்றைக்கு எனக்கு கிடைக்குமோ, என்று மட்டுமே வருந்துவேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us