தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாயாக வந்தது ஏன்?

நாயாக வந்தது ஏன்?

நாயாக வந்தது ஏன்?


PUBLISHED ON : செப் 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது...' -என்றார், அவ்வையார்; 'ஜந்துானாம் நர ஜன்மம் துர்லபம்...'- என்றார், ஆதிசங்கரர்.

விலங்கு, பூச்சி என, ஏதாவது ஒரு ஜீவராசியாகப் பிறக்க வைக்காமல், மனிதப்பிறவி அளித்த தெய்வத்தின் அருளை என்னவென்று சொல்வது. மிகவும் உயர்வான மனிதப்பிறவி கிடைத்தும், செய்யக் கூடாத செயல்களைச் செய்தால் விளையும் பயன்களை, பத்ம புராணம் சொல்கிறது.

மகாபாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திரத்தில், பத்திராத்மன் என்பவர் இருந்தார். ஞான நுால்களில் கரை கண்டவர். அந்த ஞான நுால்களில் உள்ளபடியே, அறம் தவறாமல் வாழ்க்கையை நடத்தியவர்.

ஒருநாள்... நதியில் நீராடி வீடு திரும்பினார், பத்திராத்மன். வீட்டிற்குள் நுழையும் முன், வாசலில் கால்களை கழுவி உள்ளே சென்றார். அப்போது, வெயில் கொடுமை தாங்காத ஒரு நாய், பத்திராத்மன் கால்களைக் கழுவிய தண்ணீரில் தன் உடம்பை நன்றாக நனைத்து, படுத்திருந்தது.

அதைப் பார்த்த வேலைக்காரர், அந்த நாயை கல்லால் அடித்தார். கல், நாயின் உயிர் நிலையில் பட, ஓலமிட்டபடியே இறந்து விட்டது. அதே விநாடி, நாயின் உடம்பில் இருந்து, ஒளிமயமான தேவ புருஷன் ஒருவன் வெளிப்பட்டான்.

அதைக்கண்ட பத்திராத்மன் வியந்து, 'யார் நீங்கள்...' என, கேட்டார்.

'முற்பிறவியில் நான், சத்தியகேதன் எனும் மன்னனாக இருந்தேன். ஒருநாள் இரவு நேரத்தில், நகர சோதனைக்காக சென்றிருந்த வேளையில், ஒரு பெண்ணை கண்டு பலாத்காரம் செய்தேன். அந்த பாவத்தின் விளைவாக, நாட்டை இழந்து, காட்டில் திரிந்து, பசியும் பட்டினியுமாக உயிரை விட்டேன்.

'யம துாதர்கள் அழைத்துப்போய் கடுமையாக தண்டித்தனர். பிறகு, இந்த நாய் பிறவி வாய்த்தது. ஏராளமான உயிர்களைக் கொன்று, பாவங்கள் செய்தேன்.

'இன்று, வெயில் கொடுமை தாங்க முடியாமல் துடித்தேன். உங்கள் பாதங்களைக் கழுவிய தண்ணீரில் என் உடம்பை நனைத்துக் கொண்டிருந்தேன். என்னை, உங்கள் வீட்டு வேலைக்காரன், கல்லால் அடித்துக் கொன்று விட்டான்.

'உங்கள் பாதங்களை கழுவிய நீரின் மகிமையால், என் பாவங்களும், நாய் பிறவியும் நீங்கி, திவ்வியமான தேவ வடிவம் பெற்றேன். வைகுண்டம் செல்கிறேன்...' என்று கூறி, வைகுண்டத்தை அடைந்தான், தேவ புருஷன்.

மன்னனாக இருந்தும், மனம்போன போக்கில் போய், பெண்ணிடம் முறைகேடாக நடந்தவன்; நாயாக பிறந்து, அல்லல் பட்டிருக்கிறான் என்றால்...

பெண்களிடம் முறைகேடாக நடப்பவர் யாராக இருந்தாலும், தப்ப முடியாது என்பதை விளக்கும் கதையிது.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டும் பணியை துவங்கவோ, குடிபுகவோ கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us