PUBLISHED ON : ஆக 21, 2011

ஆக., 21 - கிருஷ்ண ஜெயந்தி!
பூலோகத்தில், எப்போதெல்லம் அநியாயம் பெருக்கெடுக்கிறதோ, அப்போதெல்லாம், அவதாரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய்வங்களிலேயே அவர் தான் சாந்தமூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உடனே, அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடுவார். கம்சன் என்ற கொடியவன், தன் சகோதரியையும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களைக் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட்டை தன் பக்தர்களான பாண்டவர்களிடம் ஒப்படைத்து, தர்மத்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.
வசுதேவர் - தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போன்றவன் என்பதால், 'கண்ணன்' எனப்பட்டான். அவனுக்கு அழகே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண்ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது வழக்கம். இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.
கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடியில், தஞ்சமடையும் பாக்கியம் கிடைக்காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக்கும் திருவாசகத்தில், 'திருவடி தீட்சை தந்தவனே... எங்கே போனாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்...' எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்குவோராக இருந்தாலும், இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொள்கின்றனர்.
ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதில்லை. 'காலில் விழுந்து விட்டான்... விட்டு, விடுங்கள்...' என்கின்றனர். இதுபோல், 'என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், 'சரணாகதி தத்துவம்' என்கிறது ஆன்மிகம்.
ஒரு காலத்தில், தமிழ் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றினால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒருசமயம், நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்கமாகச் சொல்லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார். அங்கிருந்த சிலர், 'உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறிற்றா?' என, ஏளனம் செய்வது போல் கேட்டனர்.
இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ்வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம்மாழ்வாரிடம் வருத்தத்துடன் சொன்னார். அவரிடம், 'கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்... எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே...' என்ற ஒரு பாசுரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை, சங்கப் பலகையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.
'நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், 'நாராயணா' எனும் நாமத்தை நினைக்க வேண்டும்...' என்பது இதன் பொருள்.
இப்படி, கண்ணனின் திருவடிக்கு ஒரு சிறப்பு இருப்பதால் தான், அவனது அவதார நன்னாளில், நம் வீடுகளில் அவன் திருவடியைப் பதிக்கிறோம். ஒவ்வொரு முறை பதிக்கும் போதும், 'நாராயணா...நாராயணா...' என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறுபிறப்பு என்பது இல்லை. வாழும் காலத்தில், செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப்போருக்கு பால்வளம் பெருகும்; நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற்படும்.
சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதையைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, 'எனக்கு பசியே இல்லை...' என்றாராம். கண்ணன் என்ற சொல்லுக்கு அவ்வளவு மவுசு!
கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டுமல்ல... அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில் என்றும் இன்பமே!
***
தி. செல்லப்பா
