PUBLISHED ON : ஜூலை 21, 2019
'விதை போட்டு, நாற்று உருவாக்கி, மரம் வளர்த்தா, எந்த காலத்துல நடக்கிறது...' என, வேகமா வளர்க்கிற வழியை கண்டுபிடித்து, கிராம சாலை ஓரங்களில், நிறைய மரங்களை நட்டு வருகிறார், அர்ஜுனன்.
இது குறித்து அர்ஜுனன் கூறியதாவது : சாக்கு பையில், செம்மண் மற்றும் மணலோடு, இயற்கை உரமான மக்கிய குப்பைகளை கலந்து, தண்ணீர் ஊற்றி ஊற விடுவேன். ஆல மரம், அரச மரம், பூவரசு, அத்தி மரம், வாகை மடக்கி போன்ற மரங்களின், 6 அடி உயரமுள்ள கிளையை வெட்டி, அதில் நடுவேன். 14வது நாள் துளிர் விடும்; 30வது நாளில் இலைகள் துளிர்த்து, 70வது நாள், மரமாக நட, தயாராகி விடும்.
ஆடு, மாடு , அவற்றின் நாற்றை தின்றுவிடும்; வெயிலில் காய்ந்து விடும் என்ற கவலையின்றி, 'பாஸ்ட் புட்' மாதிரி, 'பாஸ்ட் ட்ரீ' தயார்.
அரசு உதவிக்கரம் நீட்டினால், சென்னை முதல் குமரி வரையிலான, நாற்கர சாலையில், 20 மீ., இடைவெளியில், 700 கி.மீ., துாரத்துக்கு, 35 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டால், மினி காட்டினுள், தமிழகமே, 'ஏசி'க்குள் இருக்கும்.
செடி நட்டு, மரமாக வளர, ஆண்டு கணக்காகும். விதை போட்டு, மூன்று ஆண்டுகளாக மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, கிளைகளை வெட்டி நட்டால், 90 நாட்களிலேயே மரமாக வளர்க்கலாம்.
இவ்வாறு நட்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சுற்றி உள்ளன. இதை, என் சொந்த செலவிலேயே செய்தேன். மேலும், எங்கள் ஊர், குளக்கரையை சுற்றிலும் பனங்கொட்டைகளை விதைத்து வைத்தேன். தற்போது, 2,000 பனைகள் குருத்து விட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, 27 ஆயிரம் மரக்கன்றுகளை, இலவசமாக வழங்கியுள்ளேன்.
90 நாட்களில், மரம் வளர...
* சிமென்ட் கோணி பையில், மண் நிரப்பி, வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற, தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த மரங்களின் நடுத்தர அளவு கிளையை, 6 அடி நீளத்தில் வெட்டி, பச்சை தன்மை மாறுவதற்குள் நட வேண்டும்
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்த அளவு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்
* நட்ட கிளைகளை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. 30 நாட்களில் துளிர் விடும், இலைகள் துளிர்த்ததும், கால்நடைகள் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பராமரித்தால், 90 நாட்களில், நிழல் தரும் அளவுக்கு மரம் வளர்ந்து விடும்.
கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு, 1,000 மரங்கள் வரை இலவசமாக நட்டு, தனி நபர்களுக்கு பயிற்சி தரவும் தயாராக உள்ளேன்.
அர்ஜுனனுடன் பேச, 97903 95796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சி. பி. செந்தில்குமார்
