
ராகவன், மதுரை: ஐ.டி., துறை பணிவாய்ப்புகள் எப்படி உள்ளன? அடுத்த ஆண்டு பி.இ., முடிக்க உள்ளேன். எனவே இது குறித்த சிறிய ஆர்வம் உள்ளது.
உங்களது ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். நமது பொருளாதாரத்தில் ஐ.டி., துறையின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் இந்த துறை மிக முக்கிய பங்காற்றுகிறது. நேரடியாக 29 லட்சம் பேரும் மறைமுகமாக 89 லட்சம் பேரும் இதில் பணியாற்றுகிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதம் இந்தத் துறை பங்களிக்கிறது. டாடா கன்சல்டன்சி சர்விசஸ், காக்கினிசன்ட், விப்ரோ, இன்போசிஸ், எச்.சி.எல்., போன்ற பல நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன. 2020 ம் ஆண்டு வரை இந்தத் துறை நிலையான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்படுகிறது. டாட்டா அனலிடிக்ஸ் மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் போன்ற பிரிவுகளில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 முதல் 2020 வரை 51 லட்சம் வேலைகள் குறையும் என ஒருபுறம் கூறப்பட்டாலும், மொபைல் இன்டர்நெட் போன்ற பெரிய வளர்ச்சி உடைய பிரிவுகளால் அவ்வளவு வேலை வாய்ப்பு குறையாது என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.
சாப்ட்வேர் மற்றும் ஐ.டி. பிரிவுகளில் இன்ஜினியர்களே பெரிதும் தேவைப்படுகின்றனர். மொத்த வேலைகளில் 57 சதவீதம் இன்ஜினியரிங் வேலைகள் தான் உள்ளன. இந்த நிறுவனங்களில் பிற பட்டப்படிப்பு முடித்தவர்கள் 24 சதவீதம் மேனேஜ்மென்ட் பின்னணி படிப்பு முடித்தவர்கள் 14 சதவீதமும் வேலை பார்க்கின்றனர்.எனவே நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தத் துறையில் பணியில் சேர தயாராகலாம்.

