தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எம்.பி.ஏ., மட்டும் போதுமா

எம்.பி.ஏ., மட்டும் போதுமா

எம்.பி.ஏ., மட்டும் போதுமா


PUBLISHED ON : ஏப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு படித்து வரும் பலரது கனவு தங்கள் பட்டப் படிப்பை முடித்துவிட்டு எம்.பி.ஏ., எனப்படும் மாஸ்டர் ஆப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டத்தைப் பெறுவதுதான். இந்தப் பட்டம் தங்கள் பணி எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளமாக இருக்கும் என்று இவர்கள் நம்புகிறார்கள். எம்.பி.ஏ., என்ற மூன்று எழுத்து சமூகத்தில் இவர்களுக்குத் தரும் அந்தஸ்து மற்றொரு மறைமுக காரணமாக இருக்கிறது.

எம்.பி.ஏ., படிப்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் எனப்படும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் வாயிலாகப் படிப்பதற்கு கடுமையான போட்டியும் நாட்டில் நிலவி வருகிறது. இந்த பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனம் தவிர்த்து எம்.பி.ஏ., படிக்க விரும்புபவர்கள் கேட் தேர்வு, மேட் தேர்வு, எக்ஸ்.எல்.ஆர்.ஐ., என்று பல்வேறு தேர்வுகளை எழுதி பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.பி.ஏ.,வை படித்து முடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

முதல் தர மையங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தவிர்த்து நாட்டின் இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் எம்.பி.ஏ., படிப்பை படிக்க முடிவதால் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 4 1/2 லட்சம் இடங்கள் மூலமாக எம்.பி.ஏ., படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது.

இது முன்பு 3.6 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்களிடையேயும், நிறுவனங்களிடையேயும் எம்.பி.ஏ., படிப்புக்கு உள்ள கிராக்கியை மனதில் வைத்தே பல்வேறு எம்.பி.ஏ., பயிற்சி நிறுவனங்கள் அனுதினமும் துவங்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

ஆனால் எம்.பி.ஏ., படிப்பை முடித்தால் மட்டும் போதுமா? இது ஒரு இளைஞனின் வளமான பணி எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் எதிர்மறையாக உள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை இந்தியாவின் பிரசித்தி பெற்ற அஸோசாம் அமைப்பு வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.ஏ., முது நிலைப் பட்டப் படிப்பை முடிப்பவர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே தங்களுக்குப் பொருத்தமான பணி வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஏனென்றால் இந்திய தொழில் அரங்கத்திற்கு தேவைப்படும் திறன்களை இவர்கள் மட்டுமே தங்கள் படிப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறார்கள்.

எக்ஸிக்யூடிவ் அளவிலான பணி வாய்ப்பை இவர்கள் இந்தக் குறைந்த சதவிகிதத்தில் பெறுவதற்கு போதிய திறன் இல்லாமல் இருப்பதும், கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்பை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரமின்மையும் ஒரு முக்கிய காரணம் என்று அஸோசாம் அமைப்பு குறிப்பிடுகிறது.

எம்.பி.ஏ.,வைப் பயிற்றுவிக்கும் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவங்கள் கூட தங்கள் கல்வி நிறுவனத்திற்கு கேம்பஸ் முறையில் பணி வாய்ப்பு தருபவரைக் கவர்வதில் கணிசமான வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 40 சதவிகித அளவில் கேம்பஸ் பணி வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதன் தொடர்ச்சியாக இந்த கல்வி நிறுவனங்களின் மூலமாக எம்.பி.ஏ., தொடர்பவர்களின் எண்ணிக்கையும் சரிவைக் கண்டு வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 180 பிஸினஸ் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு, தற்சமயம் 160 கல்வி நிறுவனங்கள் செயல்படுவதில் சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. தரக் கட்டுப்பாடு எதுவும் இல்லாத நிலையில் இயங்கும் பல பிஸினஸ் பள்ளிகளில் விண்ணை எட்டும் கட்டணங்கள், தரமற்ற ஆசிரியர்கள், போதுமான பணி உத்திரவாதம் போன்றவை இல்லாத நிலையில் இந்தக் கல்வி நிறுவனங்கள் மூலமாக எம்.பி.ஏ., படிப்பது பெயரளவில்தான் உதவும் என்ற உண்மையை மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள்.

சர்வதேச சந்தையுடன் இணைந்த தற்போதைய பொருளாதாரச் சூழலில், இன்றைய நிறுவனங்களின் தேவைகளும், நிர்ப்பந்தங்களும் கடுமையாக மாற்றம் கண்டு வருகின்றன. இவற்றை சமாளிக்கும் திறமையை வளர்க்கும் விதத்தில் எம்.பி.ஏ., படிப்பு அமைந்தால்தான் இந்தப் படிப்புக்கு தேவை இருக்கும். இது இல்லாத தற்போதைய நிலையே தொடரும் பட்சத்தில் எம்.பி.ஏ., முடித்தாலும் பெயரளவு வேலையைத்தான் பெற முடிவதோடு, நிறுவன வளர்ச்சிக்கும் இதனால் பயன் எதுவும் இல்லை என்பதே அஸோசாம் அமைப்பின் கருத்தாக உள்ளது.

எனவே எம்.பி.ஏ., படிப்பைத் தொடர விரும்புபவர்கள் கல்வி நிறுவனம், ஆசிரியர்களின் தரம், பணி எதிர்காலம் என்ற மூன்று கோணங்களிலும் பரிசீலனை செய்து அதன் பின்னர் தங்கள் படிப்பைத் தொடர்வதே அர்த்தமான ஒன்றாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us