PUBLISHED ON : டிச 10, 2012

இன்று கல்லூரிப் படிப்பைத் தொடரும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால் படிப்பிற்கு பின்னர் நல்ல வேலை கிடைக்குமா என்பதுதான். குறிப்பாக தற்போது புரொபஷனல் பட்டப் படிப்பை படித்து வருபவர்களுக்கு இது தொடர்பான அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கும்.
சந்தைமயமான இன்றைய வாழ்க்கை முறையில் படிப்பின் தன்மையைவிட, தேவையைவிட படிப்புக்குப் பின்னர் கிடைக்கும் ஊதியம்தான் அதிகம் பாதிக்கிறது. இதனால் படிப்பின் நோக்கம் கற்பது என்பதிலிருந்து விலகி, அதிகம் சம்பாதிப்பது என்பதை நோக்கிய பயணமாக மாறிவிட்டது. ஒரு தனி மனிதனின் வெற்றியை அவர் சம்பாதிக்கும் பணம்தான் தற்போது தீர்மானிக்கத் துவங்கியுள்ளது.
பணிச் சூழலில் உள்ள ஒருவருக்கு எது அதிகம் மகிழ்ச்சியைத் தருகிறது என்ற ஓர் ஆய்வினை CareerBliss.com என்ற இணையதளம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் படி அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் அதிக சம்பளமே தங்கள் மகிழ்ச்சிக்கு காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக மிக அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் நல்ல ஊதியம் கிடைக்கும் பட்சத்தில் தங்களின் இதர பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு காண முடிவதாகத் தெரிவித்துள்ளார்கள். வெளியில் இருந்து பார்க்கும் போது பெரும்பாலானோர் அதிக ஊதியம் என்பதை அதிக மன அழுத்தத்துடனே தொடர்பு படுத்தி பார்க்கின்றனர். பணியில் உள்ள சவால்கள், முடிக்க வேண்டிய இலக்குகள், சக ஊழியர்
களின் தன்மை போன்றவற்றுடன் பணி புரிய வேண்டிய இடம் போன்றவையும் நமது மகிழ்ச்சிகரமான பணி எதிர்காலத்திற்கு முக்கியம் என்ற கருத்து நம்மிடம் பொதுவாக நிலவுகிறது.
ஆனால் சமீபத்தில் வெளி வந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள் இந்தக் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்ற கருத்தை வெளியிடுவதாக உள்ளது. மிக நல்ல ஊதியம் என்பது இருந்தால் இதர பிரச்சினைகளைப் பின்னுக்கு தள்ளிவிட முடியும் என்ற அடிப்படையில் உள்ளது. ஆனால் ஒரு தனி மனிதரின் தன்மையைப் பொறுத்துதான் பணி இட மகிழ்ச்சி அமைவதுடன், பணி எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்பதே பெரும்பாலான இந்தியர்களின் எண்ணமாக உள்ளது. உங்களின் பணி எதிர்கால மகிழ்ச்சி என்பது என்ன என்பதனை தீர ஆராய்ந்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
