/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வளம் தரும் வேளாண் காடுகள்; தென்னைக்கு நடுவே ஜாதிக்காய் தரும் தடையில்லா வருமானம்!
/
வளம் தரும் வேளாண் காடுகள்; தென்னைக்கு நடுவே ஜாதிக்காய் தரும் தடையில்லா வருமானம்!
வளம் தரும் வேளாண் காடுகள்; தென்னைக்கு நடுவே ஜாதிக்காய் தரும் தடையில்லா வருமானம்!
வளம் தரும் வேளாண் காடுகள்; தென்னைக்கு நடுவே ஜாதிக்காய் தரும் தடையில்லா வருமானம்!
PUBLISHED ON : ஜூலை 11, 2025

மண்ணிற்கு வளத்தையும், விவசாயிகளுக்கு வருமானத்தையும் கூட்டுகிறது வேளாண் காடுகள் எனும் மரம் சார்ந்த விவசாய முறை. அந்த வகையில் 'வளம் தரும் வேளாண் காடுகள்' தொடரில் வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வுகளை கேட்போம் வாருங்கள்.
தென்னைக்கு நடுவே ஜாதிக்காய் சாகுபடி செய்து அசத்தி வருகிறார் திண்டுக்கல் விவசாயி ரசூல் மொய்தீன். இவர் சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாகுபடியில் முன்னோடி விவசாயியாக இருந்து பலருக்கும் வழிகாட்டி வருகிறார்.
இவருடைய நிலம் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலம், வெறும் நிலம் என்று சொன்னால் அது சரியில்லை, ஒரு குறுங்காடு என்பதே பொருத்தமாக இருக்கும்.
அங்கு ஆயிரக்கணக்கில் வளர்ந்து நிறைந்துள்ளன தென்னை மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வளர்ந்திருக்கும் தென்னை மரங்களில், நான்கு தென்னைக்கு நடுவே ஒரு ஜாதிக்காய் வைத்துள்ளார். சமவெளியில் ஜாதிக்காயை வைத்து பார்ப்போமே என்று பரிசோதனை முயற்சியாக ஆரம்பத்தில் தொடங்கியுள்ளார். ஆனால் வளர்த்த பின் பிரதான பயிரான தென்னையை விடவும் ஜாதிக்காயில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.
ஜாதிக்காய் சாகுபடி குறித்து அவர் கூறுகையில் “ என்னுடையே நிலத்தில் நான்கு தென்னைக்கு நடு மையத்தில் ஒரு ஜாதிக்காய், நான்கு புறங்களிலும் மத்தியில் பாக்கு மரம் என பயிரிட்டுள்ளேன். இதில் மிளகு கொடிகளையும் ஏற்றி உள்ளேன். பொதுவாகவே ஜாதிக்காய் மரங்கள் 6-ஆம் வருடத்திலிருந்து காய்ப்புக்கு வரும். ஆனால் ஆண்டுகள் கூடக் கூட அதனுடைய காய் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.
என்னுடைய பிரதான பயிரான தென்னையில் ஒரு மரத்திலிருந்து ரூ.300/- கிடைப்பதே அதிகம் என்ற நிலையில், ஒரு ஜாதிக்காய் மரத்திலிருந்து ரூ.3,000/- முதல் ரூ.5,000/- வரை கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக எந்த செலவுமின்றி கிடைக்கிறது. இந்த மரத்திற்கென்று எந்த பிரத்யேக பராமரிப்பும் தேவையில்லை. எந்தவிதமான பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக மகசூலை அதிகரிக்க மட்டும் அவ்வப்போது எள்ளு புண்ணாக்கு , இதர புண்ணாக்குகள் மற்றும் மாட்டு சாணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். ஜாதிக்காயால் செலவில்லை, வருவாய் அதிகம் மற்றும் நிலமும் சுத்தமாக இருக்கிறது” என்றார்.
சந்தை வாய்ப்புகள் குறித்து நாம் கேட்ட போது, “ஜாதிக்காயைப் பொருத்தவரை அதன் தோல், கொட்டை மற்றும் பத்திரி இவற்றை பிரித்து காயவைத்து பராமரித்தால் விலை வரும் போது விற்றுக் கொள்ளலாம். இன்றே விற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. காரணம் அது கெடும் பொருள் அல்ல, எனவே லாபம் வரும் போது விற்கலாம்.” என்றார்.
சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி எந்தளவிற்கு பலனளிக்கிறது என்ற கேள்விக்கு, “பொதுவாக அதிகம் மழை நீர் தேங்கும் பகுதிகளிலும் அதிக வறட்சி இருக்ககூடிய இடங்களிலும் ஜாதிக்காய் வளராது. திண்டுக்கல் மழை தடுக்கப்பட்ட மாவட்டம். சில சமயங்களில் 41 டிகிரி வெயில் கூட இருக்கும். ஆனாலும் என் மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சமவெளியிலும் மிக அழகாக காய்க்கின்றன. மேலும் இப்படி பல அடுக்கு முறையில் சாகுபடி செய்வதால் மற்ற நிலங்களை காட்டிலும் நம் நிலம் கூடுதல் குளுமையாக ஈரப்பதத்துடன் இருக்கிறது. இது ஜாதிக்காய் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது.
மேலும் தொடர்ந்த அவர், 30 வருடங்களுக்கு முன்பு இருந்த தேங்காயின் விலை இன்று 4 மடங்கு உயர்ந்து இருக்கிறது, ஆனால் செலவு 40 முதல் 50 மடங்கு உயர்ந்து இருக்கிறது. ஆகையால் ஊடுபயிர் என்பது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுக்கும் பல பயிர் பல அடுக்கு விவசாயம் முக்கியமானதாகும். எனவே அனைத்து விவசாயிகளும் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வது அவர்களின் வருவாயை அதிகரிக்கும். குறிப்பாக ஜாதிக்காய் பயிரிடுவதால் ஏராளமான லாபமும் நன்மையும் இருக்கிறது” எனக் கூறினார்.