/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு
/
திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு
PUBLISHED ON : பிப் 20, 2019

திராட்சை ஒரு முக்கிய வணிகப் பழப்பயிர். தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தரமான திராட்சை ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. திராட்சையை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளில் இலைப்பேன் முக்கியமானவை. அவை இலைகளின் சாற்றை உறிஞ்சி பழங்களில் தோல் பகுதியில் சொறி, அம்மை போன்ற சேதங்களை ஏற்படுத்தி மகசூலை பாதிக்கின்றன.
வாழ்க்கை சுழற்சி
இரண்டு மில்லி மீட்டர் அளவே உள்ள இந்த மிகச்சிறிய பேன் போன்ற ஒரு பெண் பூச்சி நுாறு முட்டைகள் வரை இடுகிறது. 5 - 8 நாட்களில் குஞ்சு பொறித்து 10 - 12 நாட்களில் வளர்ந்து முதிர்ச்சியடைந்து, பத்து நாட்களுக்கு வாழ்ந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்துகின்றது. குஞ்சுப்பருவமும் தாய்ப்பருவமும் இலை மற்றும் பழத்தின் தோல் பகுதியை சுரண்டி வெளிவரும் நீரை உறிஞ்சுவதோடு அடிப்பரப்பில் இருந்தும் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்குகின்றன. வளரும் காய் மற்றும் பழங்களை இலைப்பேன்கள் தாக்கும் போது மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அம்மை தழும்புகள் பழங்களில் ஏற்படுவதால் அதன் மதிப்பு குறைந்து சந்தையில் குறைந்த விலை மட்டுமே கிடக்கிறது.
மேலாண் முறை
திராட்சை தோட்டங்களை சுத்தமாக வைப்பதன் மூலம் இலைப்பேன்கள் அடையும் இடங்களை களைய முடியும். வெயில் காலங்களில் நிலத்தை உழுது மண்ணை கிளறி விடுவதன் மூலம் இலைப்பேன்களில் பருவங்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம். கிரைசோபெர்லா என்ற பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சி ஊண் விழுங்கியாக செயல்பட்டு இலைப்பேன்களை கொல்கின்றது.
வெர்டிசிலியம் (அ) லெக்கானிசிலியம் லக்கானி மற்றும் பியூவேரியா பேசியானா போன்ற பூச்சிக்கொல்லி பூஞ்சாணங்களை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் அல்லது மில்லி வீதம் கலந்து தெளிப்பதால் இலைப்பேன்களுக்கு நோய்கள் ஏற்பட்டு மடிகின்றன. வேம்பு சார்ந்த அசாடிராக்ஷன் 0.01 சதவீதம், வேப்ப எண்ணெய் 2 சதவீதம், வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் போன்ற மருந்து வகைகளை தெளிப்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. தொடர்புக்கு 0452- 253 625.
- திராட்சை ஆராய்ச்சி நிலையம் தேனி.

