PUBLISHED ON : பிப் 20, 2019

விவசாயத்திற்கு அடிப்படை விதையின் ஆரோக்கியம் தான். விதைகளை தரமாக பராமரித்தால் தான் விவசாயத்தில் நல்ல மகசூல் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
தானியம் மற்றும் விதைகளை தாக்கும் பூச்சிகளான அந்துப்பூச்சி, காபரா வண்டு, புழுக்கள் முதலில் உட்பகுதியை உண்டு பிறகு வெற்று ஓட்டை மட்டும் விட்டு செல்கின்றன. இந்த வகை விதைகளை விதைத்தால் அதன் வளர்ச்சி தடைபட்டு முளைக்கும் திறன் பாதிக்கப்படும். விதைகளை சேமிக்கும் போது புதிய (சாக்கு) கோணிப்பைகள், துணிப்பைகளை பயன்படுத்துவது நல்லது. தானியங்கள் மற்றும் அவைகளை சேமிக்கும் அறைகளை மாலத்தியான் 1 லிட்டரில் 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். சேமிக்கும் விதைகளின் ஈரப்பதம் 8 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் கெட்டு விடும். பூஞ்சாணம் வளர வழிவகை செய்யும். சேமிக்கும் தானியங்களின் ஈரப்பதம் 11-14 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். நெல் மூடைகளை சுவரிலிருந்து ஒரு அடி இடைவெளி விட்டு அடுக்கி வைத்தால் தான் சுவற்றின் ஈரப்பதம் நெல் மணிகளை தாக்காது. அடியில் மரச்சட்டங்கள் மீது அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூடைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
பயறு வகைகளை 12 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். விதைக்காக சேமித்து வைத்துள்ள பயறு வகைகளில் வண்டு தாக்குதலை தவிர்க்க வேப்பிலை, நொச்சி இலை, வசம்பு துாள் கலந்து வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
உணவுக்காக நீண்ட நாள்கள் பயறு வகைகளை சேமிக்க வெயிலில் காய வைத்து பின்பு 5 மில்லி நல்லெண்ணெய் (1 கிலோவுக்கு) தடவி நிழலில் உலர வைக்கலாம். துவரை விதைக்கு செம்மண் தடவி காய வைத்து சேமிக்கலாம். சேமிக்க இடம் இல்லாத விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிட்டங்கியில் குறைவான வாடகையில் சேமித்து நல்ல விலை வரும்போது விற்கலாம். 3 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டு கடன் பெற வாய்ப்பு உள்ளது. தொடர்புக்கு 94435 70289.
- எஸ்.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

