PUBLISHED ON : பிப் 13, 2019

அறுவடைக்கு பின் வயல்களில் விவசாயிகள் தீ வைப்பது சிறந்த உத்தி அல்ல. பல தோட்டங்களில் காய்ந்த சருகுகள், மரக்கிளைகள், முட்செடிகளை அப்புறப்படுத்திட அலுப்புப்பட்டு, அப்படியே தீ வைப்பது தவறு. ஒவ்வொரு விவசாயிக்கும் இறைவன் கொடுத்த ஒவ்வொரு சதுர சென்டி மீட்டர் பரப்பிலும் உயிர்க்குலங்களை பேணிடல் தொழில் தர்மம் ஆகும்.
வாழை தோட்டங்களில் அறுவடை முடிந்ததும் வாய்க்காலில் வீசுவதும் தானாக மட்கும் என்று எண்ணி வெறுமனே பயிர் பாகங்களை நிலத்தின் மேல் பரப்புவது நல்ல விறகாக காய செய்யுமே தவிர மட்க உதவாது. ஆள் கிடைக்கவில்லை, வேறு வழியே இல்லை என நமது தோட்டத்தில் இன்று இந்த இடம், நாளை வேறு இடம் என பரவலாக தீ வைத்து வருவதால் பல பகுதிகளில் கரும்பில் மகசூல் வெகுவாக குறைந்து பாதிக்கப்பட்ட சோக நிகழ்வு நடக்கிறது.
தீ வைக்கும் இடம் பட்டுப்போகும். கடும் விளைவு ஏற்படும். தீப்பட்ட இடம் எல்லாம் வெப்ப அதிகரிப்பால் நன்மை செய்யும் உயிர் வகை அனைத்தும் அழிந்து மண் மலடாகும். எந்த பயிரும் வராத கட்டாந்தரை ஆகி விடும். தீ வைப்பது காற்றில் தீ பரவி கால்நடை சேதம், தென்னை மரம் மகசூல் குறையும். எந்த தருணத்திலும் பயிர்க்கழிவுகளை அப்படியே விடாமல் உரமாக்கலாம். மண் வளத்தை அழிக்கும் களைக்கொல்லி உபயோகிப்பதை விட வேண்டும்.
தொடர்புக்கு 98420 07125.
-டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர் தேனி

