PUBLISHED ON : பிப் 13, 2019

ஆடுகளின் இரைப்பை யில் வளரும் பாக்டீரியாக்கள் கடினமான தாவர வகைகளையும் ஜீரணம் செய்வதில் சிறந்தவை. வளமான பசுமை புல் வெளிகளில் மேயக்கூடிய ஆடுகளுக்கு தாதுப்பொருள் கலவையை தனியே தர வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே ஆடுகளுக்கு சத்துணவுகள் தேவைப்படாது. இருப்பினும் மேய்ச்சல் கிடைக்காத கோடையில் சத்துணவு கொடுப்பது இன்றியமையாதது. பெட்டை ஆடுகளுக்கு இனப்பெருக்க பருவத்துக்கு முன்பாக அவசியம் சத்துணவு தர வேண்டும்.
ஆடுகளுக்கு ஏற்ற இடம்: ஆடுகள் திறந்த வெளியில் தங்குவதையே விரும்புகின்றன. இரவு நேரத்திற்கு பாதுகாப்பாக அரண் ஒன்றை மேடான இடத்தில் அமைக்க வேண்டும். பெரும்பாலும் சுகாதாரமற்ற பராமரிப்பு முறைகளினால் தான் ஆடுகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. சிறுநீரும் அவற்றின் சாணமும் சேரும் சுத்தமில்லாத இடங்களில் ஆடுகளை அடைக்கக்கூடாது. ஆடுகள் சிமென்ட் தரையில் படுப்பதையும், கற்களால் ஆன தரையில் தங்குவதையும் விரும்பாது. இத்தகைய தங்குமிடங்களில் ஆடுகள் கழிக்கும் சிறுநீர் உறிஞ்சப்படுவதில்லை. இவற்றில் கிடந்து புரள்வதால் ஆடுகளின் உரோமத்தின் மதிப்பு இழக்கப்படுகிறது. ஆகவே காற்றும், நீரும் உறிஞ்சக்கூடிய மண் தரைகளே அவற்றின் இருப்பிடத்துக்கு ஏற்றது.
ஆதாயம் பெறும் வழி: விவசாயிகள் ஆடுகளை பராமரிக்கும் போது ஒவ்வொரு நாளும் காலையில் ஆடுகளை பார்வையிட வேண்டும்.
நன்றாக மேய்ந்ததா, இயல்பாக அசை போடுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆடுகள் தும்மினால், இருமினால், இயல்புக்கு மாறாக கழிச்சல், மேயாமல் நிழலின் ஒதுங்குதல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் அதனை அலட்சியப்படுத்தக்கூடாது. இவை உடல் நலக்குறைவின் அடிப்படையின் காரணமாக இருக்கலாம். இதன் மூலம் ஆட்டுப் பண்ணையின் ஆதாயம் பெருக வாய்ப்பு ஏற்படும்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை

