தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சமவெளிப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி

சமவெளிப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி

சமவெளிப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி


PUBLISHED ON : நவ 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் சமவெளிப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி துவங்க இருக்கின்றது. பீட்ரூட் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிர் ஆனாலும் விவசாயிகளின் முயற்சியால் தற்போது சமவெளியிலும் இதன் சாகுபடி நடந்துவருகின்றது. முதலில் இதன் சாகுபடி முறைகளை கவனிப்போம்.

சாகுபடி முறைகள்: சாகுபடிக்கு தேர்ந்து எடுக்கும் நிலங்கள் நல்ல வடிகால் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். பீட்ரூட் கிழங்கின் வடிவம் சிதறாமல் இருக்க நிலத்தினை 15-20 செ.மீ. ஆழத்திற்கு நான்கைந்து முறை உழுதுவிட வேண்டும் நில மேற்பரப்பில் கட்டிகள் இல்லாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும். நன்கு மக்கிய கோழி உரம் ஏக்கருக்கு 7 டன்கள் வரை இட்டு நிலத்துடன் கலக்கும்படி உழுதுவிடப்படுகின்றது. அதோடு அடி உரமாக டி.ஏ.பி. 3 மூடைகள் இடவேண்டும். அடுத்து வயலில் 1 அல்லது 1- 1.5 அடி இடைவெளியில் பார் போட்டு பாரின் இரு புறமும் 4 அங்குல இடைவெளியில் விதையினை விதைக்க வேண்டும். (ஜோடி விதைநடவு). நல்ல விதைகள் கிட்னி (சிறுநீரகம்) வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும். சாதாரண மாதங்களில் ஒரு விதை நடலாம். ஆனால் கடும் கோடையில் விதை பழுதில்லாமல் முளைக்க இரண்டு விதைகள் நடவேண்டும். பொதுவாக பீட்ரூட் பயிரில் விதை முளைப்பு பிரச்னை ஏதும் கிடையாது. மார்க்கெட்டுகளில் கிடைக்கும் விதைகள் நன்றாகவே முளைக்கின்றன. சாகுபடி சமயம் மொத்தமாக 20 பாசனங்கள் தேவைப்படும். விதை நட்டு பின் மூன்று நாட்களுக்கு ஒரு முறை முதல் 25 நாட்கள் பாசனம் செய்ய வேண்டும். பிறகு பூமியில் அடி ஈரம் ஓரளவு காய்ந்த பின் பாசனம் செய்ய வேண்டும். விதை நட்ட 20-ம் நாள் களைஎடுக்க வேண்டும். களையெடுத்து உடனே ஏக்கருக்கு 2 மூடை 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம் இடவேண்டும். விதை விதைத்த 40வது நாள் பொட்டாஷ் உரம் ஏக்கருக்கு 2 மூடைகள் இடவேண்டும். சாகுபடி சமயம் வயல் பூராவும் செடிகள் சொட்டையில்லாமல் வளர்த்துவிட வேண்டும். செடிகள் மாண்டு சொட்டை இடங்கள் ஏற்பட்டால் அந்த இடத்தில் அடர்த்தியாக களை முளைத்து களைஎடுப்பதற்காக ஏற்படும் செலவு கூடுதலாகிவிடும். பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் அடிக்கடி விஷ மருந்துகளை அடிக்க விரும்புவதில்லை. விவசாயிகள் சுத்த சாகுபடி செய்து பூச்சி வியாதிகள் பாதிப்பினை தவிர்த்து விடுகின்றனர். இத்தகைய விவசாயிகளுக்கும் சவால் விடுவது வெட்டுப்புழுக்கள் ஆகும். இப்புழுக்கள் இலைகளை பயங்கரமாக கடித்துத் தின்று சோதனையை ஏற்படுத்துகின்றது. திருடர்களைப் போல் இரவில் வெளிவந்து செடிகளைத் தாக்கி மொட்டையடித்து விடுகின்றன. இவைகளை விவசாயிகள் விஷ மருந்தை தெளித்து அழிப்பதில்லை. அதற்கு பதில் விஷ மருந்து கலந்த உருண்டைகளை வைத்து கொன்றுவிடுகின்றனர். பச்சரிசி தவிட்டினை எடுத்துக்கொண்டு அதில் டூநட் என்னும் விஷமருந்தினை 300 மில்லி கலந்து மேலும் வெல்லப்பாகு ஊற்றி நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து செடிகளுக்கு வயல் பூராவும் போட்டுவிடுகின்றனர். புழுக்கள் இரவில் இந்த இனிப்பான உருண்டைகளை தின்று மாண்டு விடுகின்றன. விவசாயிகள் எப்படியோ பாடுபட்டு உழைத்து குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பினை சிறப்பாக செய்து நல்ல மகசூலுக்கு வழிவகை செய்து கொள்கின்றனர். பீட்ரூட் பயிர் குறிப்பாக குறுகிய காலப்பயிர். விதை நட்ட 50-60 நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிடுகின்றது. கிழங்கின் மையப்பகுதி 3.5 செ.மீ. விட்ட அளவிற்கு பருத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். பேராசையில் கிழங்குகள் இன்னும் பருமனாகட்டும் என்று நிலத்தில் விடக்கூடாது. தற்போது விவசாயிகள் 120-150 நாட்கள் வயதுடைய ரகங்களை விட குறுகிய கால ரகமாகிய ஜீலம் சாகுபடியில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மொத்தம் ஒரு ஏக்கர் சாகுபடி செலவு ரூ.22,070. ஏக்கர் மகசூல் 10 டன் மதிப்பு ரூ.40,000. ஏக்கர் சாகுபடி செலவு ரூ.22,070 போக நிகர லாபம் ரூ.15,930. பல்லடம் பகுதியில் விவசாயிகள் சமவெளியில் பீட்ரூட் சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளனர். பல்லடம் பகுதியில் பீட்ரூட் பயிர் பாசன வசதி பெறுவது கிணறுகளில் இருந்துதான். இந்த கிணறுகளில் நல்ல தண்ணீரும் கிடைக்கும். உப்பு தண்ணீரும் கிடைக்கும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டு வகை தண்ணீரிலும் குறிப்பாக உப்பு தண்ணீர் பாசனத்திலும் பீட்ரூட் நன்றாக வளருகின்றது. பீட்ரூட் சாகுபடியில் ஓரளவிற்கு பிரச்னைகள் குறைவு. மேகமூட்ட காலநிலை கிழங்கின் நிறம் மற்றும் தரத்தினை பாதிப்பதில்லை. மழை பெய்தவுடன் தண்ணீர் வடிந்துவிட்டால் கிழங்கு அழுகும் பிரச்னை கிடையாது. மிகக்கொடிய வியாதியோ, பூச்சிகளோ கிடையாது. விவசாயிகள் பீட்ரூட்டிற்கு அதிகம் உபயோகிப்பது கோழி உரமாகும். இதனால் பூச்சி, வியாதி ஓரளவு விழுவதில்லை. அறுவடை மற்றும் கிழங்குகளை மார்க்கெட்டிற்கு தயாரிப்பதில் மிகப்பெரிய பிரச்னை ஏதும் கிடையாது.  -எஸ்.எஸ்.நாகராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us